பிதுக்கிய மொச்சைக்கொட்டை குழம்பு

கர்னாடக மாநிலத்தில் குளிர் காலமான செப்டெம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மொச்சைக்காய் அதிகமாக விளையும். அந்த மாநிலத்தில் வசிப்பவர்கள் அந்த காலத்தில் துவரம்பருப்பிற்கு பதிலாக மொச்சையை தினசரி சமையலில் பயன்படுத்துவது வழக்கம்.அதிலும் மொச்சைக்காயை உரித்து விதையை தண்ணீரில் ஊற வைத்து தோலை நீக்கி செய்யப்படும் பிதுக்கிய மொச்சைக்கொட்டைக் குழம்பு என்பது கர்நாடக மாநிலத்தில் சில குறிப்பிட்ட உணவகங்களிலும் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணபபடுகிறது.

தேவையான பொருட்கள்:

பிதுக்கிய மொச்சைப்பருப்பு – 4 கப்
உரித்த சிறிய வெங்காயம் – 1/2 kg
பெரிய வெங்காயம் – 1/2 kg
தேங்காய்த்துருவல் – ஒரு மூடி
கொப்பரைத்தேங்காய் – இரண்டு பெரிய துண்டுகள்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
சிகப்பு மிளகாய் – 40
கறிவேப்பிலை – சிறிது
தனியா – 2 மேசைக்கரண்டியளவு
மிளகு – 1/2 தேக்கரண்டி
ஜீரகம் – 3/4 தேக்கரண்டி
கசகசா – ஒரு மேசைக்கரண்டி
புளி – எலுமிச்சையளவு
உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு

செய்முறை:

1. மொச்சைப்பருப்பை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயத்தை தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பெரிய வெங்காயத்தை மட்டான தணலில் சுட்டு எடுத்து வைக்கவும். கொப்பரைத் தேங்காயை அதேபோல் சுட்டு தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தனியா, மிளகு, ஜீரகம், கறிவேப்பிலையை வறுத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது தேங்காயையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3. நான்கைந்து வெங்காயங்களை பெரிய துண்டுகளாக நறுக்கி முன் குறிப்பிட்ட வறுத்து வைத்த பொருட்களுடன் சேர்த்து மிக்சியில் மிருதுவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
4. இரண்டு மேசைக்கரண்டி தேங்காய்த்துருவலுடன், ஒரு மேசைக்கரண்டி கசகசாவை (பாலில் ஊற வைத்தது) மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்துக்கொண்டு உரித்து வைத்திருக்கும் சிறிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
6. நறுக்கிய இஞ்சித் துண்டுகளையும் போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு பிதுக்கிய மொச்சைப்பருப்பை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு ஒரு குக்கரில் போட்டு மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும்.
7. புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
8. கசகசாவுடன் தேங்காய்த் துருவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
9. வெந்த பருப்புடன் புளிக்கரைசலையும் , கசகசா, தேங்காய் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். கறிவேப்பிலையைக் கழுவி விட்டு போடவும்.

கர்நாடக மாநிலத்தின் மக்கள் மிகவும் விரும்பி சுவைக்கும் பிதுக்கிய மொச்சைக்கொட்டை குழம்பு தயார்.

சிறுகுறிப்பு: சப்பாத்தி, பூரி, அரிசி ரொட்டி, இட்லி, தோசை, அவல் தோசை, செட் தோசை போன்ற அனைத்திற்கும் சுவை சேர்க்கும் side dish தயார்.

****

About The Author