தமிழ் நாட்டு சாம்பார் சாதத்தைப் போலவே கர்நாடக மாநிலத்து உணவான பிசிபேளாபாத்தும் சமையல் உலகில் தனக்கென்று ஓரிடத்தைப் பெற்றிருக்கிறது. இந்த பிசிபேளாபாத் பல்வேறு முறைகளில் தயாரிக்கப்படுகிறது. நிறைய மசாலா இல்லாமல் சுவையான எளிதான முறையில் பிசிபேளாபாத் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி – ஒரு கப்,
துவரம்பருப்பு – ஒரு கப் ,
கேரட் – கால் கிலோ,
பீன்ஸ் – கால் கிலோ,
சின்ன வெங்காயம்- கால் கிலோ,
தக்காளிப்பழம் – நான்கு,
புளி – ஒரு – எலுமிச்சையளவு ,
உப்பு – சுவைக்கேற்ப ,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
வெல்லம் – சிறிது ,
முந்திரித்துண்டுகள் – 2 மேசைக்கரண்டி,
நெய் – ஒரு மேசைக்கரண்டி,
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி.
வறுத்து அரைக்க :
சிகப்பு மிளகாய் -ஆறு,
தனியா – இரண்டு தேக்கரண்டி ,
கடலைப்பருப்பு – இரண்டு தேக்கரண்டி ,
மிளகு – அரை தேக்கரண்டி ,
ஜீரகம் – அரை தேக்கரண்டி,
துளிர் கறிவேப்பிலை – சிறிது ,
தேங்காய்த்துருவல் – இரண்டு மேசைக்கரண்டி .
செய்முறை :
கேரட்டையும், பீன்சையும் நன்றாகக் கழுவிக்கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியையும் கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். அரிசியையும், துவரம்பருப்பையும் நன்றாகக் கழுவிக் கொண்டு அதனுடன் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். வெந்த சாதத்தில் புளிக்கரைசல், உப்பு, அரைத்த விழுது மற்றும் வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி இன்னும் சற்று நேரம் வேக வைக்கவும். தேவையானால் தண்ணீரைச் சேர்க்கலாம். புளி வாசனை போக, சேர்ந்து கொதித்து சற்று இறுக வேண்டும். பிறகு நெய்யில் அரைத்தேக்கரண்டி பெருங்காயத்தூளையும் முந்திரித்துண்டுகளையும் பொன்னிறமாக வறுத்து சேர்க்க வேண்டும். சூடான பிசிபேளாபாத் தயார்.
அவரவருக்கு விருப்பமான காய்கறிகளான பூசணிக்காய், பரங்கிக்காய், குடை மிளகாய், பச்சை பட்டாணி, அவரைக்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்களை உபயோகிக்கலாம்.
“