பிக்ஷை

அந்தப் பிராமணர் மிக ஒல்லியாக இருந்தார். அழுக்கேறிய அவரது பூணூல், துருத்திக் கொண்டிருக்கும் அவர் தோள் எலும்புகளைச் சுற்றி இருந்தது. மிகவும் பரபரப்பாக இருக்கும் மேற்கு மாம்பலத்தில் ஒரு வங்கியின் வாசலில் நின்று கொண்டு, வருவோர் போவோரிடம் பிக்ஷை கேட்டுக் கொண்டிருந்தார். பிச்சை என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் எனக்குள்ளாகவே பிக்ஷை என்று வந்துவிட்டதன் காரணம் நான் அறியேன். பிற பிச்சைக்காரர்களைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் வராத ‘பிக்ஷை’ என்கிற வார்த்தைப் பிரயோகம் இவரைப் பார்த்ததும் வந்ததுமே எனக்குப் புரிந்து போயிற்று, எனக்குள்ளாக என் சாதியிருந்து எட்டிப் பார்க்கிறது என்று. எனக்கு அந்தக் காட்சி உவப்பானதாக இல்லை. விரைவாக அவரைக் கடந்துபோக எண்ணினேன். இதைக் கண்டுகொண்டவர் போல அவர் என்னையே பின்தொடர்ந்தார். அவர் கைகள், ஏந்தியபடியே இருந்தன. அவரின் அருகாமை என்னை மிகவும் தர்மசங்கடமாக்கியது. அவரைவிட்டு விலக இன்னும் சில நிமிடங்கள் எனக்குப் பிடிக்கலாம். ஆனாலும், அதுவரை அவர் என்னைவிட்டு நகரப் போவதில்லை என்கிற பிடிவாதத்தில் இருப்பவரைப்போலக் கைகளை ஏந்தியபடியே இருந்தார். வேறு வழியில்லை என்று பைக்குள் கையைவிட்டு, கிடைத்த இருபது ரூபாயை அவரிடம் தந்துவிட்டு நடக்கத் துவங்கினேன். அவரும் கும்பிட்டுவிட்டு, நெற்றி நிறையத் திருநீறு அணிந்த மற்றொரு வெள்ளைச் சட்டைக்காரரைப் பின்தொடர ஆரம்பித்துவிட்டார். அவர் என்னை விட்டு விலகிப் போய்விட்டார் என்றாலும் போகும்போது என் நினைவுகளில் ஒரு கல்லை வீசி அது அலைபாயச் செய்துவிட்டுச் சென்றுவிட்டார்.

பெருநகரத்தில் பிச்சைக்காரர்களுக்கா பஞ்சம்? வீதிகள்தோறும் பிச்சைக்காரர்கள் சுற்றித் திரிகிறார்கள். வயதானவர்கள், நோயாளிகள், குரூபிகள், பைத்தியங்கள், குழந்தைகள், முடவர்கள் என்று விதவிதமான பிச்சைக்காரர்கள். பலர் பிச்சை இடுகிறார்கள். சிலர் திட்டி விரட்டுகிறார்கள். நான் எப்போதும் பிச்சை கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லிவிடக் கூடாதென்று நாணயங்களைச் சுமந்து திரிபவன்தான். ஆனாலும் இந்த பிராமணரைப் பார்த்ததும் எனக்கு அவரை ஒரு பிச்சைக்காரர் என்று எண்ணத் தோன்றவேயில்லை. காரணம், இதற்கு முன்னான என் வாழ்க்கையில் இப்படித் தெருவில் நின்று பிச்சை கேட்கும் ஒரு பிராமணனைப் பார்த்ததில்லை. எங்கள் கிராமங்களிலும் பிச்சைக்காரர்கள் உண்டு. மசூதி வாசலில் தாடிவைத்த, தொப்பியணிந்த பிச்சைக்காரர்கள்; சர்ச் வாசலில் சிலுவையணிந்த, தலையை முக்காடிட்டுக் கொண்ட பெண் பிச்சைக்காரிகள்; கோயில் வாசலில் சந்நியாசிகள், பண்டாரங்கள் எனப் பிச்சைக்காரர்களைக் கண்டதுண்டு. இவர்கள் தவிர, பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் கொஞ்சம் பேர் உண்டு. மதம் என்கிற பெரிய வட்டத்துக்குள் நின்று பிச்சை எடுப்பது போதாதென்று, சாதி என்கிற சின்ன வட்டத்துக்குள்ளும் நின்று பிச்சை எடுப்பதென்றால் அது அசூயையான விசயம் அல்லவா? இந்தப் பிராமணரைப்போலச் சாதியைக் காட்டிப் பிச்சை எடுக்கும் எந்தப் பிராமணரையும் இதுவரைக்கும் நான் கண்டதில்லை.
அக்ரஹாரத்தில், வசதி படைத்த ஒரு சாஸ்திரிகளின் தம்பி வாழ்வை வெறுத்து, சந்நியாசியாகி, நாடோடி ஆகிவிட்டார். அவர் எங்கள் ஊருக்கு அடிக்கடி வருவதுண்டு. அப்படி வந்தால் கோயில் மண்டபத்தில்தான் படுத்துக் கிடப்பார். அவரைப் பார்க்க அனைவரும் கூட்டம் கூட்டமாகச் சென்று வந்த ஞாபகம் இருக்கிறது. அவர் பசிக்கும் வேளைகளில் கோயில் வாசலில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார். ஆனாலும் அவர் பூணூல் போட்டிருப்பதில்லை. அதைப் பற்றிக் கேட்டபோது அம்மா, ‘சந்நியாசிகளுக்குப் பூணூல் இல்லை’ என்றாள்.

ஒருமுறை, கோயிலில் இருந்த தெப்பக்குளத்தில் ஒரு குடும்பம் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதான தகவல் கிடைத்து அப்பா விழுந்தடித்துக் கொண்டு ஓடினார். நானும் அவர் பின்னாலேயே போனேன். முழுவதும் நனைந்த நிலையில் சாம்பு ஐயரும் அவர் மனைவியும் அவரது இரண்டு பிள்ளைகளும் ஒடுங்கி அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். சாம்பு மாமா அக்ரஹாரத்தில் தனி ரகம். அவர் அப்பா வைதிகத்தையே தொழிலாகக் கொண்டிருந்தபோதும் சாம்பு மாமாவுக்கோ வியாபாரத்தின் மேல் ஆசை. கொஞ்சகாலம் நன்றாகப் போய்க் கொண்டிருந்த வியாபாரத்தில் அவர் காட்டிய படாடோபம் அக்ரஹாரத்தில் அனைவரின் கண்களையும் உறுத்தியது. ஊர்க்கண் முழுக்க அவர்கள் குடும்பம் மேல்தான் இருந்தது. அதனாலேயோ என்னவோ சீக்கிரமே அவரது வியாபாரம் படுத்துவிட்டது. அதனால் கடன் தொல்லை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள் அன்றைக்கு எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு துரத்திய பின்பு போக்கிடம் இல்லாமலாகி, அவமானப்பட்டு, கடைசியில் உயிரை விட முடிவு செய்து, குடும்பத்தோடு தெப்பக்குளத்தில் குதித்திருக்கிறார்கள். அப்பா அவரை ரொம்பவும் கடிந்து கொண்டார்.

"ஊரே தண்ணி குடிக்கிற குளத்தில விழுந்து செத்து தண்ணியில்லாம ஆக்கப் பாத்தீரேவோய்?" என்றார். ஆனால், அவர் அக்கறை வெறும் குளத்தைப் பற்றியதாக மட்டுமில்லாது இருந்தது மகிழ்வாக இருந்தது. சாம்பு மாமாவுக்கு எங்களுக்குச் சொந்தமான ஓர் இடத்தில் அப்பாவே குடிசை போட்டுக் கொடுத்துத் தங்கச் சொன்னார். மறுநாள் முதற்கொண்டு சாம்பு மாமாவைப் பிற வைதிகர்களோடு போய்த் தனக்கான ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளச் சொன்னார். கொஞ்ச காலத்திலெல்லாம் சாம்பு மாமா ஜரிகை வேட்டி கட்டிக் கொண்டு நடமாட ஆரம்பித்ததும் நினைவிருக்கிறது. அப்பா அந்த நாளில் செய்தது எனக்குள்ளாக நிறைந்திருக்கிறது. அப்பா சாதிப் பெருமை பேசுகிற ஆளில்லை என்றாலும் விட்டுக் கொடுக்கிறவரும் இல்லை. அந்த நாட்களில் எல்லாம் அப்பா என்னோடு நிறையப் பேசுவார். "வாழற காலத்தில உலகத்துக்குப் பயனோட வாழணும். முடியலைன்னா குறைஞ்சபட்சம் தன் உறவுகளுக்காவது பயனோட வாழணும்" என்பார். ‘மனுஷாள் யாரையும் கையேந்த விடக்கூடாது’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார் அப்பா.

நகரத்துக்கு வந்த கொஞ்ச நாளிலேயே பிச்சை இங்கு தொழிலாக இருக்கிறது என்று புரிந்துபோனது. வயிற்றுக்குச் சோறு கேட்டுத் தட்டைத் தூக்கிக் கொண்டு வரும் பிச்சைக்காரர்களை மட்டுமே கண்டிருந்த எனக்கு இங்கு பிச்சையை ஒரு வேலையைப்போல மேற்கொள்பவர்களைக் கண்டபோது ஆச்சரியமாகவும் அதே சமயம் அதிர்ச்சியாகவும் இருந்தது. தாங்களாகவோ பிறரால் பிச்சை எடுக்க வைக்கப்பட்டோ பிச்சை எடுப்பவர்கள் நிறைந்திருந்தார்கள். குறிப்பாகப் பெண்களும் பிள்ளைகளும். இவர்களில் யார் பாவம், யார் பாவமில்லை என்பதெல்லாம் ஐம்பது பைசா பிச்சையிடும் யாரும் தெரிந்துகொள்ளவே வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்த ஒரு இஸ்லாமியப் பிச்சைக்காரர் உண்டு. சென்னையின் நெருக்கடியான நந்தனம் சிக்னலில் நின்று பிச்சை எடுப்பவர். அவர் வீடு தாம்பரத்தில் இருக்கிறது என்றும், அது அவர் பிச்சை எடுத்தே சம்பாதித்துக் கட்டிய வீடு என்றும் கேள்வி. நான் அவரை நெருக்கமாகக் கண்டிருக்கிறேன். காலையில் நல்ல உடையணிந்தபடி பேருந்திலே வருவார். அந்தச் சிக்னலுக்கு அருகில் இருக்கும் கட்டடத்தில் தனது உடைகளைக் களைந்துவிட்டு, அந்தக் கட்டடத்தின் ஒரு மறைவிடத்தில் இருக்கும் அழுக்கு லுங்கி ஒன்றையும், சட்டை மற்றும் தொப்பியையும் அணிந்துகொள்வார். பின்பு நாள் முழுவதும் அந்தச் சிக்னலில்தான் பிச்சை எடுப்பார். மாலை ஐந்து மணியானதும் தனது உடையை மாற்றிக் கொண்டு பஸ் ஏறிவிடுவார்.

நகரத்திற்கு வந்த பிறகு இவரைப்போலப் பலரைப் பற்றித் தெரிந்துகொள்ள நேர்ந்தது. எப்போதும் டீக்கடை அருகே வந்து நின்று பிச்சைக் கேட்கும் கிழவியை அந்தக் கடைக்காரர் விரட்டிவிட்டு ஒவ்வொரு முறையும் சொல்வார், "நல்லாக் கொழுப்பெடுத்த பொம்பள சார்! சொந்த வீடு கீது. ஊரெல்லாம் வட்டிக்குவிட்டு வாங்குதுங்க சார்! இதுக்கெல்லாம் துட்டு போட்டா பாவம்தான் வரும். என்னா சார் சொல்ற?" என்பார். ஆனாலும் நான் பைசாவைப் போடும் வரை அது நகரவே நகராது. பொதுவாகப் பிச்சை இடுவதில் எந்தச் சிக்கலுமில்லை என்று நான் எண்ணிக் கொண்டிருந்த நிலையில்தான் அந்த பிராமணப் பிச்சைக்காரரைப் பார்த்துத் தொலைத்தேன்.

அவரைத் தொடர்ந்து, சாதி வெளிப்படும்படியாகப் பிச்சை எடுப்பவர்கள் பலரைப் பார்த்துவிட்டேன். ஒரு மாமி நங்கைநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வாசலில் நின்று, "என் பொண்ணுக்குப் பிரசவம். ஆஸ்பத்திரில சேர்த்திருக்கேன்" என்று சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பாள். ஓராண்டு கழித்துத் திரும்ப நங்கைநல்லூர் சென்றபோதும், அதே மாமி அதே காரணத்தைச் சொல்லி என்னிடமே பிச்சை கேட்டாள்.

"என்ன மாமி, இரண்டாவது பிரசவமா?" என்று நான் கிண்டல் அடித்ததுண்டு. ஆனாலும் வருத்தமாயிருக்கும். இந்த வயதில் இந்த அம்மாவைப் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியது யாராகயிருக்கும்? மகனோ, மருமகளோ, இல்லை கணவனோ, யாராயிருந்தாலும் கடவுள் அவர்களை மன்னிக்கவே கூடாது என்று எண்ணிக் கொள்வேன்.

வேத கோஷங்களைச் சொல்லிக்கொண்டு ப்ளாட் வாசலில் வந்து நிற்கும் மூன்று பிராமணர்களை என்ன செய்வது என்றே புரியாது. பத்தோ இருபதோ வாங்கிக் கொண்டு ஆசீர்வதித்துவிட்டுப் போய்விடுவார்கள் அடுத்த வீட்டு வாசலுக்கு. அது பிராமணர்கள் குடியிருக்கும் வீடுதானா என்று அவர்கள் பார்ப்பதில்லை. பல நேரங்களில் அங்குதான் அவர்களுக்கு நல்ல வரும்படி கூடக் கிடைக்கிறது. பிச்சை எடுப்பதில் பிராமண அடையாளம் என்பது இவர்களுக்குச் சிறப்புத் தகுதிபோல என்று எண்ணிக் கொள்வேன்.

*****

அன்று மடத்துக்கு அருகில் பெருங்கூட்டமாக இருந்தது. ஸ்ரீலஸ்ரீ என்று தொடங்கும் பெயருடனான ஸ்வாமிகளின் விஜயம் அன்று அங்கு நிகழவிருப்பதாக அறிந்தேன். அதற்குமேல் அந்தச் சாலையில் செல்ல முடியாதென்றும் மாற்றுப் பாதைக்குத் திரும்பிச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டேன். எனக்கும் ஸ்வாமிகளைக் காணும் ஆவல் அதிகமானது. வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி நடந்தேன். நெடுகிலும் பூணூல் மார்பும், பஞ்சகச்சமுமாகப் பிராமணர்கள் திரண்டிருந்தனர். போகப்போக எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. சட்டையை வேண்டுமானால் கழட்டிவிடலாம், ஆனால் அணிந்திருக்கும் ஜீன்ஸ் நிச்சயம் என்னை அந்நியப்படுத்தத்தான் செய்யும். இன்னும் அருகில் போனால் யாராவது எதையாவது சொல்லித் தொலைப்பார்கள் என்று தோன்றவும் அங்கேயே நின்றுவிட்டேன். கொஞ்சம் முன்பு சிறு தள்ளுமுள்ளு நிகழ்ந்தது. அங்கிருந்தவர்களுள் ஒருவரை மற்றவர்கள் பிடித்துத் தள்ளினர். கீழே விழுந்தவர் மிகவும் ஒல்லியாக இருந்தார். நான் கொஞ்சம் நெருங்கிப் போய் யார் அவர் என்பதைப் பார்த்தேன். அவர் வேறு யாருமல்ல, எப்போதும் வங்கி வாசலில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் அந்த ஒடிசல் பிராமணர். அவரைக் கீழே தள்ளியவர், "குடிகாரக் கம்னாட்டி! யார்றா இவனை எல்லாம் உள்ள விட்டது? அபசகுனம் பிடிச்ச சனியன்! ஸ்வாமிகள் வர்ற நேரமாயிடுச்சு. அடிச்சு விரட்டுங்கடா இவனை" என்றார்.கீழே விழுந்து கிடந்தவர் எழுந்து கொள்ளவேயில்லை.

"ஏண்டா நீங்கள்ளாம் பிராமணாளாடா? முதல்ல மனுஷாளா இருங்கோ! ஒக்காளஓலி! உங்களுக்கெல்லாம் என்னடா சாமி வேண்டிக் கிடக்குது?" என்றார். இதைக் கேட்டதும் பக்கத்தில் இருந்த வேறு சிலருக்கும் கோபம் வந்துவிட்டது. அவர்கள் அவரை எட்டி உதைத்தனர். அவரது கத்தல்கள் கெட்ட வார்த்தைகளாக வெளிவந்தன. நிலைமை கைமீறிப் போவதை அறிந்த சிலர், அவரது கையையும் காலையும் பற்றித் தூக்கிக் கூட்டத்துக்கு வெளியே கொண்டு சென்று விட்டுவிட்டனர். நான் அவர்கள் பின்னாலேயே போனேன். அந்தப் பிராமணரைப் பிளாட்பார்மில் கிடத்தியிருந்தனர். ஈனஸ்வரத்தில் அவரது முனகல் வெளிப்பட்டது. நான் அவர் அருகில் சென்றேன். அவர் உதடுகளிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவர் கேட்காமலேயே பக்கத்தில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி அவர் முகத்தில் தெளித்து, குடிக்கவும் கொடுத்தேன். அவர் எழுந்து அமர்ந்து குடித்தார். பின்பு மெல்லிய குரலில், "அந்த தே…… நீ பாக்கப் போலியா?” என்றார். அவர் பேசியதில் எனக்கு அசூயை உண்டானது. அவர் வார்த்தையின் பொருளும் அதோடு கூட வெளிவந்த சாராயநெடியுமே அதன் காரணம்.

"குடிச்சிருக்கீங்களா?" என்று கேட்டேன். குடித்துவிட்டுக் கூத்தடிக்கும் ஒரு குடிகாரனுக்கு இரக்கப்பட்டதற்காக வருந்தினேன். நான் எழுந்து கொண்டேன். அவர் என் கைகளைப் பற்றிக் கொண்டார்.

"குடிச்சிட்டு உளர்றேன்னு நினைக்காதே! நீ ஊருக்குப் புதுசா?"

"ஆமாம்!"

"அதான், உனக்கு என்னத் தெரியல. நான் ஒரு கங்காளி. அப்படின்னா புரியறதா?"

எனக்குக் கங்காளி என்றால் என்னவென்று தெரியும். அவர்கள் சாவுக் காரியங்களில் வருபவர்கள். பிரம்மதண்டத்தைக் கொண்டு பாடை கட்டுவது, பிணத்தைத் தொட்டுத் தூக்குவது, பிணங்களைச் சுமப்பது, இரண்டாம் நாளின் காரியங்களில் சுடுகாட்டில் சாஸ்திரிகளோடு உதவுவது என்பவற்றைச் செய்பவர்கள் என்று நான் அறிந்துதான் இருந்தேன். அம்மா செத்தபோது அப்பா இதைச் சொல்லியிருக்கிறார். இவர்கள் சாவுக்காரியங்களோடு சரி, வேறு எந்த சுபத்திலும் பங்கு கொள்பவர்கள் இல்லை.

"ம்" என்று தலையாட்டினேன்.

"இப்போ நான் அதுக்குப் போறது கிடையாது. முன்னயெல்லாம் இவனுங்க வீட்டுப் பொணங்களச் சுமந்திருக்கேன். அதோ முன்னாடி நிக்கிறான் பாரு, பெரிய ஜரிகை போட்ட துண்ட கட்டிண்டு ஒரு பெரிய மனுஷன், அவ அம்மா நோய் வந்து செத்துப் போனா. அவன் தொடக்கூடயில்ல. நாந்தான் தொட்டுத் தூக்கினேன். இவனுங்க பொணங்களையெல்லாம் தூக்க, கட்ட, எரிக்கப் பிராமணன் நான் வேணும், ஆனா இவனுங்கோ மசுராக்கூட மதிக்கமாட்டானுங்க. இப்பல்லாம் நான் அதுக்குப் போறதில்லை ஏன் தெரியுமா?" என்று நிறுத்தி மூச்சு வாங்கிக் கொண்டார்.

நான் என்ன சொல்வதென்று தெரியாமல் அவரையே பார்த்தேன்.

"எனக்கு ஒரே பொண்ணு. பதினேழு வயசு. வாயில நுழையாத பேருல ஒரு நோய். ஆஸ்பத்திரில சேர்த்தேன். டாக்டர் லட்ச ரூபாய் கேட்டான். ஓடி வந்து இதோ நிக்கிறானுங்க பாரு, அவனுங்க ஒவ்வொருத்தன் வீட்டு வாசலிலும் நின்னு கதறினேன். அதோ அந்தப் பெரிய மனுஷன் வீட்டுல எட்டு கார் இருக்கு. அதுல ஒரு கார் ஒரு கோடி ரூவாயாம். அதோட டயர் பணம் இருந்திருந்தாக்கூட என் மகளக் காப்பாத்தியிருப்பேன். ஆனா உள்ளயே விடாம தொரத்தி விட்டுட்டான் படுபாவி! இவனுக வீட்டுச் சாவுக்கு உழைச்சதை எல்லாம் மறந்துட்டானுங்க. இதே ஊர், இதே எடம் நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இருக்கேன். ஆனாலும் ஒரு பயலும் காசு தரலை. எம் பொண்ணு பூ கசங்கின மாதிரி செத்துப்போனா. அன்னைக்கு முடிவு பண்ணினேன், இனி இவனுங்களுக்கு சேவகம் பண்ணக் கூடாதுன்னு. எவ்வளவோ சொல்லிக் கூப்பிட்டானுகளே. நான் போகவேயில்ல. இவனுங்க எல்லாம் மனுஷாளே கிடையாது" என்று நிறுத்தினார். நானும் அவரைப் போலவே உணர்வுகள் பெருகிய நிலையில் இருந்தேன். அவர் மேலும் பேசினார்.

"அப்புறம் ஏன் இவனுங்ககிட்ட கைய நீட்டிப் பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன்னு கேக்குறியா? பூணூல அறுத்துப் போட்டுட்டு வேற எங்கையாவது போய்ப் பிச்சை எடுத்துன்னாலும் பொழைச்சுக்கலாம். ஆனா நான் இங்க இருந்து போயிட்டா, இவனுங்க என்ன மறந்திருவானுங்க. இவனுங்க சொல்றத நான் கேக்கலைங்கிறது இவனுங்களுக்கு அவமானம். என்னோட சோகத்தை தீர்க்க முடிஞ்சிருந்தும் அத நினைச்சுக்கூடப் பார்க்காத அவனுங்க மனசுக்குள்ள என்னப் பார்க்கிற ஒவ்வொரு நாளும் அவா மனசாட்சி குத்திக்கிட்டு இருக்கும். அவங்க என்ன அவமானப்படுத்தனது போக இப்போ நான் அவங்கள அவமானப்படுத்திக்கிட்டு இருக்கேன். நான் அவங்களோட மனசாட்சி! நான் கையை நீட்டுறபோதெல்லாம், இவன ஒண்ணுமே செய்ய முடியலைங்கிற வருத்தம் அவங்க மனசுல மிஞ்சும். அதத் தீத்துக்க காசு போடுவானுங்க. காலம் பூராம் நான் கையை நீட்டி கையை நீட்டி அவங்களக் குறை சொல்லிண்டேயிருப்பேன். இது என் தலையெழுத்து, அவா பண்ணின பாவம்!"

இப்பொழுது மெல்ல எழுந்து கொண்டார். "அடிபட்டது ரொம்ப வலிக்குது, ஒரு கட்டிங் போட்டாத்தான் சரியாகும். ஒரு அம்பது ரூபா குடேன்" என்றார். நான் தந்ததை வாங்கிக் கொண்டு விறுவிறு என்று நடந்தார். பின்னால் ஸ்வாமிகள் வந்ததற்காகப் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்வாமிக்கு ஜெய் என்னும் கோஷங்கள் வானைப் பிளந்தன. எனக்குள் அப்பாவின் குரல் கேட்டது,"மனுஷாள் யாரையும் கையேந்த விடக்கூடாது!"

*****

About The Author

1 Comment

  1. Maalathi

    அருமையான மனதை.,கலங வைத்த வாழ்வியல் நிகழ்வு.கதையாக ,அருமை

Comments are closed.