விஸ்வத்தின் கல்யாணத்திற்குப் பூரணி வரவில்லை. ஆச்சரியமாகத்தான் இருந்தது, கூட வேலை பார்க்கிற எல்லோருக்கும்.
“ஏன் வரலே..”
“தெரியலே..”
“அவங்க பழகினதைப் பார்த்த..” என்று ஒருத்தி இழுத்தாள்.
“பத்திரிகையில அவ பேருதான் இருக்கும்னு நெனச்சேன்..”.
“எனக்கும் ஷாக்காதான் இருந்தது. விஸ்வம் வேற ஒருத்தியைக் கல்யாணம் செய்துக்கிட்டது…”
“ஏம்பா? ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாப் பழகக் கூடாதா…?”என்றான் ஒருவன் பாதி கேலியாக!
“மறுக்கலே. நல்ல நண்பர் கல்யாணத்திற்கு, அதுவும் ஊர்ல நடக்கிற கல்யாணத்துக்கு வர முடியாதா? அன்னைக்கு ஆபீஸே காலி… இவ மட்டும் போயிருக்கா.. ஆபீஸுக்கு..”
“ஆசைப்பட்டு நிறைவேறலைன்னு வருத்தமா..”
“இருக்கலாம்..” என்றான் விஷமமாக.
செவிகளை மூடிக் கொண்டாலும், புலன்களை திசை திருப்பினாலும் மனிதர்கள் பாதிக்கிறார்கள்.
அவளுக்கு அப்போது சிரிப்புதான் வந்தது.
பூரணிக்கு இந்தப் பேச்சுகளினால் வருத்தம் இல்லை. இவர்களின் இயல்புதான் என்று தோன்றியது. இப்படிப் பேசாதிருந்தால்தான் அதிசயம். ஆனால்..
“ஏம்பா.. விஸ்வம் என்ன சொன்னான்… இவ வராமல் இருந்ததற்கு..”
“தெரியலே…ஆனா நிச்சயமா ஃபீல் பண்ணியிருப்பான்…”
பண்ணியிருப்பானா…?
விஸ்வமும் பூரணியும் அறிந்து கொண்டதே ஒரு புத்தகத்தினால்தான். அவள் செக்ஷனுக்கு வந்தவன் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து செக்ஷன் ஆபீசருடன் பேசிக் கொண்டிருந்தான். அருகிலேயே ஒரு மேஜை. அவள் வெளியே போயிருந்த நேரம்.
மேஜை மீதிருந்த ஒரு புத்தகத்தை – கலீல் கிப்ரான் – தற்செயலாகப் பிரித்தவன், சுவாரசியமாக மூழ்கிவிட்டான். இவள் திரும்பியதும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“பிளீஸ்… இதை நான் நாளைக்குத் தரலாமா…”என்றான் அவளிடம்.
“ம்..”
பழக்கம் ஆரம்பித்தது. தினசரி உணவு இடைவேளையில் பேச்சு வளர்ந்தது. இவள் லீவில் போய்த் திரும்பிய ஆறாவது நாள், அவன் முகத்தில் தெரிந்த பரவசம் அவளை அதிசயப்படுத்தியது. இவர்களின் நட்பைக் கேலி பேசிய சகாக்களை அலட்சியப்படுத்தினர்.
“ஆச்சர்யமா இல்லே…! இவ்வளவு நாள் பழகியிருக்கோம்… பர்சனலா நாம பேசியதே இல்லே…”என்றான்.
“அதனாலதான் உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு”
“நான் சொல்ல வந்தது… உங்க பெற்றோர்… மத்தவங்க… இந்த மாதிரி கூட விவரம் தெரியாம இருக்கறதை…”
“ஓ…! அதுவா… நீங்க கேட்கலே… நான் சொல்லலே…”
“இப்ப கேட்கிறேன்..”என்றான் சிரிப்புடன்.
சொன்னாள். தன் சம்பளம் எந்த அளவு குடும்பத்திற்கு அவசியம் என்பது வரை சொல்லிவிட்டாள்.
தன்னைப் பற்றி சொன்னான். வீட்டிற்கு வரச் சொன்னான். அவள் வீட்டிற்கு இவனும் போனான்.
பரஸ்பரம் இருவரின் ரசனைகள் அறிமுகமான பின் இயல்பாக நிகழ்ந்த குடும்ப அறிமுகமும் இருவரின் நட்பை மேலும் வலுப்படுத்தின.
“கல்யாணத்தைப் பத்தி உங்க ஒப்பீனியன் என்ன…?” என்றான் ஒரு நாள்.
“என்ன..!”
“ஜென்ரலா…மேரேஜ் பத்தி…”
“ம்… மனசு நிர்ணயிக்க வேண்டியதை பணம் நிர்ணயிக்கிற ஓரு சடங்கா இப்ப மேரேஜ் எல்லாம் இருக்கு…”
“அப்படீன்னா…லவ் மேரேஜை ஆதரிக்கிறீங்களா…”
“அந்த மாதிரி சொல்லலே… பெற்றோர் பார்த்து வெச்சாலும்… கணவன், மனைவிகிட்ட லவ் இருக்கக் கூடாதா? என்ன… வெட்டிச்செலவுகள், ஆடம்பரம், அந்தஸ்து இப்படி கல்யாணங்களில் பணம்தான் முக்கியமா போயிருச்சுன்னேன்…”
“சடங்குகள்ள நம்பிக்கை இல்லையா…?”
“அர்த்தமற்ற ஆயிரம் சடங்குகளைக் காட்டிலும் மனசுபூர்வமா சொல்ற ஒரு வார்த்தை போதும்…”
“அப்ப…என் மேரேஜூக்கு நீங்க வரமாட்டிங்களா…?”
“மாட்டேன்…” என்றாள்
“ஏன்? இதுதான் என்னோட நட்பை நீங்க அங்கீகரிக்கிற விதமா…?”
“தப்பா புரிஞ்சுக்காதீங்க. சடங்குகளினால் மட்டும் நிச்சயக்கப்படுகிற கல்யாணத்துல எனக்கு ஆர்வம் இல்லே. நான் வந்துதான் உங்களை மதிக்கிறேன்னு நீங்க நினைச்சா. ஸாரி…அது என் தப்பில்லை..”
“நீங்க புறக்கணிக்கறதால என்ன மாற்றம் வந்திரப் போவுது? ”
“என் உணர்ச்சிகளை நானே மதிக்கலேன்னா? அவ்வளவுதான் நான் செய்யிறது…”என்றாள்.
“ஓ..!”என்றான்.
“நான் வந்தாலும் வராவிட்டாலும் என் மனசுபூர்வமான வாழ்த்துக்களும் அன்பும் உங்களுக்கு உண்டு விஸ்வம்”
அவள் போகவில்லை அவன் திருமணத்திற்கு.
தன்னைத் தவறாக நினைக்க மாட்டான் என்றுதான் நம்பினாள். தன்னைச் சரியாகப் புரிந்துகொண்டிருப்பான்.
அலுவலகத்தில் சுற்றியிருப்பவர்களின் பேச்சு மட்டும் ரகசிய சிரிப்பைத்தான் வரவழைத்தது அவளுக்குள்.
இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது.
Very nice story!
கதை நல்லாக இருக்கு எல்லாரும் அப்படி தொடங்கினால் நல்லாக இருக்கும்