போனஸ் அயர்ஸ் 1977
போனஸ் அயர்ஸ் 1977 – ஓர் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். அர்ஜெண்டினாவில் கொடூரமான ராணுவ ஆட்சி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் நடந்தபோது சுமார் 30,000 பேர் கொல்லப்பட்டனர். 1976லிருந்து 1983 வரை நடந்த இந்தக் கொடூர ஆட்சியில் கேள்வி கேட்பாரின்றி ராணுவ குண்டா ஆட்சி நடந்தது. அப்போது நடந்த சம்பவம் இது.
1977இல் க்ளாடியோ தாம்புரினி என்ற ஒரு கோல்கீப்பரைத் தீவிரவாதி என்று ராணுவத்தினர் கடத்திக் கொண்டு சென்றனர். அவரை மொரான் என்ற இடத்தில் ஒரு சிறிய வீட்டில் வைத்துச் சித்திரவதை செய்தனர். ஒரு சிறிய ஃபுட்பால் டீமின் கோல்கீப்பர் எப்படி ஒரு தீவிரவாதியாக இருக்க முடியும்? போலீஸாரால் இழுத்துச் செல்லப்பட்ட க்ளாடியோவைத் தகவலைத்” தருமாறு உளவுத்துறையினர் இடைவிடாது படாதபாடு படுத்தினர். இல்லாத தகவலுக்கு எங்கே போவார் க்ளாடியோ! அவருடன் கில்லர்மோ, டனோ என்ற இருவரும் கூடக் கைதிகளாக இருந்தனர். நான்கு மாதச் சித்திரவதைக்குப் பின்னர் மூவரும் எந்த நேரமும் கொல்லப்படலாம் என்ற நிலையில், ஒரு நாள் நல்ல மழை பெய்தது. இரவு நேரம். க்ளாடியோ ஒரு ஜன்னல் வழியே குதித்துத் தப்பி ஓடினார். அவருடன் மூவர் இணைந்தனர். ஆக நான்கு பேர்கள் தப்பி ஓட, அவர்களை வேட்டையாடி ராணுவத்தினர் துரத்துகின்றனர். கைகளில் விலங்குகள். பயங்கரக் குளிர். சட்டை வேறு இல்லை. அரை நிர்வாண நிலையில் உயிருக்குப் பயந்து ஓடியவர்கள் ஒரு பட்டறையில் விலங்குகளை அறுத்தெறிகின்றனர். தப்பிய ஒருவர் சக கைதியின் தந்தைக்கு அவர் இருக்குமிடத்தை போனில் கூற, தந்தை ஓடி வந்து மூவரையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். பத்திரமான ஓர் இடத்தில் இரண்டு கைதிகளை இறங்கச் சொல்ல, அவர்கள் தம் தம் வழியே செல்கின்றனர்.
அருமையான இந்தப் படத்தில் க்ளாடியோவாக ரோட்ரிகொ டி லா செர்னாவும் கில்லர்மோவாக நஜாரினோ கசெரோவும் டனோவாக மார்டின் உருடியும் நடித்துப் பாராட்டுதலைப் பெறுகின்றனர்.
2006இல் டொரோன்டோ திரைப்பட விழாவில் இது திரையிடப்பட்டது. அர்ஜெண்டினாவில் மக்கள் இதைப் பெருமளவில் வரவேற்றனர். படம் வசூலை அள்ளிக் குவித்தது. 104 நிமிடம் ஓடும் இப்படம், முதலில் ஸ்பானிய மொழியில் எடுக்கப்பட்டது. இஸ்ரேல் அட்ரியன் கடானோவால் இயக்கப்பட்டது. இதை இயக்குவதற்கு முன்னர், க்ளாடியோ இப்போது வாழும் ஸ்டாக்ஹோமுக்கு அட்ரியன் சென்று அவரை நேரில் சந்தித்தார். கில்லர்மோவையும் சந்தித்தார். பின்னரே திரைக்கதை தயாரிக்கப்பட்டது.
நான்கு சுவர்களுக்குள் ஒரு சிறைச்சாலை. அதில் தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். இது ஒரு சவாலான விஷயம்! ஆனால் நன்கு எடுக்கப்பட்டது. வெளியில் தப்பி ஓடியபோது ராணுவ வாகனங்கள் இரவு நேரங்களில் ரோந்து வர, நான்கு கைதிகளும் நடுநடுங்கி ஓடி ஒளிவது, ஒரு வீட்டுக் கதவைத் தட்டி உதவி கேட்பது, அதிலிருந்த பெண்மணி அனுதாபத்துடன் சிறிது பணத்தையும் ஒரு பழைய சட்டையையும் தருவது என்று இப்படி மனதை உருக்கும் காட்சிகள் நிறையவே உண்டு.
பாரதியார் பாடியபடி ‘பேய் அரசு செய்யில் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ – அல்லவா! மிலிடரி ஆட்சியின் கொடுமையை மனம் நெகிழப் பார்க்கலாம்.
சிறைப்பட்ட நான்கு பேரும் பின்னால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளின் பிற்பகுதியில், பொதுமக்கள் பார்க்கும்படியான பொது விசாரணையின்போது நடந்ததையெல்லாம் சாட்சியமாக அளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சாட்சியங்களே படத்தின் அடிக்கருவாக – கதையாக – அமைந்தன.
ஒரு ராணுவ ஆட்சியின்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதை உலக மக்கள் உணர ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இந்தப் படம் உருவாக்கியது. இதே கொடுமைதான் ராணுவ ஆட்சி உள்ள எண்ணற்ற நாடுகளில் இன்று நடக்கிறது.
கடுமையான ஒரு கதைக்களத்தை எடுத்து மென்மையாக அதைச் சொல்ல முடிவதோடு, பார்க்கும்படியான காட்சிகளில் அடக்க முடியும் என்பதற்கு ‘போனஸ் அயர்ஸ் 1977’ ஓர் எடுத்துக்காட்டு!
படத்தை ஒருமுறை பாருங்கள்!
அடுத்த வாரம் ‘படித்ததில் பிடித்தது’…
“