பகவான் ஸ்ரீ பாபாவுடன் கஸ்தூரியைப் படத்தில் காணலாம்
ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அணுக்கத் தொண்டர்களில் மிக முக்கியமானவர் திரு.கஸ்தூரி அவர்கள். ‘சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற அற்புதமான நூலை எழுதி, பாபாவின் வாழ்க்கை வரலாற்றையும் விபூதி மஹிமையையும் ஏராளமான பக்தர்களிடம் கொண்டு சேர்த்தவர்.
அவர் பகவான் பாபாவுடனான தனது அனுபவங்களை ‘லவிங் காட்’ (LOVING GOD) என்ற நூலில் மிகவும் அருமையாக, சுவையுடன் பதிவு செய்துள்ளார். சிறந்த ஆங்கிலப் புலமை உள்ளவர். கன்னடக் கவிஞர். எல்லாவற்றுக்கும் மேலாக, பற்பல ஆண்டுகள் பகவானுடன் மிக நெருக்கமாக அருகில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றவர். ஆகவே 461 பக்கங்களில் அவர் கூறுகின்ற அற்புதமான சம்பவங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
நூல் விளக்கும் சில பகுதிகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1897ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்தவர் கஸ்தூரி. 21ஆம் வயதில் வரலாற்றுப் பாடத்தில் வெற்றிகரமாக ஹானர்ஸ் டிகிரியைப் பெற்று, திருவனந்தபுரத்தில் ஒரு பள்ளியில் உபாத்தியாயராகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். படிப்படியாக முன்னேறிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பும் அடைந்தார்.
குடும்பம் வளர்ந்து விட்ட நிலையில் தனது மகள் பத்மாவுக்குத் தகுந்த வரனைத் தேட ஆரம்பித்தார். அவரது நண்பர் பரமேஸ்வர ஐயரின் பையனை மாப்பிள்ளையாக்க அவருக்கு ஆசை. ஆனால் அவரோ இன்னொரு பையனைத் தேர்ந்தெடுத்துக் கஸ்தூரியிடம் சிபாரிசு செய்தார். அன்று வியாழக்கிழமை. மாலையில் பிள்ளை வீட்டார் ‘பெண் பார்க்க’ வருவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்கள் மறந்து விடக்கூடாதே என்று ஞாபகப்படுத்தப் பரமேஸ்வர ஐயர் வீட்டுக்கு விரைந்தார் கஸ்தூரி. அங்கே அவருக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது.
பரமேஸ்வர ஐயருக்கு ஒரு கனவு புதனன்று வந்திருந்தது. அதில் அவர் போற்றும் ஸ்ரீ சத்ய சாயி பாபா தோன்றி, "உடனடியாக என்னை வந்து பார்! உன்னைக் கண்டிக்க வேண்டும்" என்று சொல்லவே, விழித்துக் கொண்ட பரமேஸ்வர ஐயர் பாபாவைச் சென்று பார்த்தார்.
பாபா, "உன்னைக் கண்டிக்கத்தான் கூப்பிட்டேன். நீ யார் கஸ்தூரியின் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க? உன் பிள்ளையை அவர் மாப்பிள்ளையாக்கலாம் என்று சொன்னாரே, அதை ஏன் விட்டாய்?" என்று கண்டிக்கவே, பிரமித்துப் போன பரமேஸ்வர ஐயர் வீடு வந்து சேர்ந்தார்.
இதைக் கேட்டதும் கஸ்தூரியின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமல் போனது. அவசரம் அவசரமாக, அன்று மாலை வர இருந்த பிள்ளை வீட்டாருக்கு ‘வர வேண்டாம்’ எனச் செய்தி ஒன்று அனுப்பினார்.
யார் இந்த பாபா, அவர் சொல்லுக்கு இவ்வளவு மஹிமையா என்று சிந்திக்கலானார் அவர்.
கஸ்தூரி குடும்பத்துடன் பாபாவைச் சந்தித்தார். பக்தர்கள் ஹாலில் காத்திருக்க, அவர்களில் சிலரை மட்டும் பாபா பிரத்யேக ‘இன்டர்வியூவிற்காக’ அழைத்தார். அழைக்கப்பட்ட ஆறு பேரில் கஸ்தூரி நான்காம் நபர்.
கண்களில் அன்பு ததும்பக் கஸ்தூரியை பாபா பார்த்துக் கூறினார். "என்ன, சந்தோஷம்தானே அந்தப் பையனை நிச்சயம் செய்ததற்கு? நீ உன் பையனை இழந்திருக்கிறாய். வருகிற மாப்பிள்ளையே உனக்குப் பிள்ளையாகவும் இருப்பான். கவலைப்படாதே! பல்கலைக்கழகத்தில் உனக்கு வர வேண்டிய உரிய கௌரவம் இன்னும் தரப்படவில்லை. சீக்கிரத்திலேயே அதையும் நீ பெறுவாய்!"
புட்டபர்த்தியில் கல்யாணத்தை நடத்தத் தான் விரும்புவதாகக் கஸ்தூரி விண்ணப்பித்தார். அதற்கு இசைந்த பாபா, "புட்டபர்த்தி ஒரு சிறிய கிராமம். அங்கு திருமணத்தையும், உன் நகரத்தில் வரவேற்பையும் நடத்தலாம்" என்றார்.
பிறகு, கஸ்தூரியின் தோள் மீது அன்புடன் கையை வைத்த பாபா, "கல்யாணத்தைப் புட்டபர்த்தியில் நடத்து. உனக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் சொல். பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், என் ஜீவித சரிதத்தை (வாழ்க்கை வரலாற்றை) நீ எழுதலாம்" என்றார்.
"நானா!" என்று கூவினார் கஸ்தூரி. "ஆமாம்! யாரைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். பெற்றோர், சகோதரர்கள், உறவினர், அண்டை அயலார், உபாத்தியாயர்கள் போன்றவர்கள்! நானும் உதவி செய்கிறேன்." கஸ்தூரி விக்கித்து நின்றார். அது ஜூலை, 1948ஆம் வருடம். அப்போது பாபாவுக்கு வயது 22. கஸ்தூரிக்கு வயது 51! கல்யாணம் விமரிசையாக நடந்தது!
தொடர்ந்து பாபாவுடனான நெருக்கம் அதிகரித்தது. அதிசயங்களையும் அற்புதங்களையும் நேரில் பார்த்து அனுபவிக்கும் பரம பாக்கியத்தைக் கஸ்தூரி பெறலானார். எத்தனை அனுபவங்கள்! ஒவ்வொன்றும் அவரை ஒரு பிரம்மாண்டமான அவதாரத்திற்கு முன்னர் தாம் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தின.
32 ஆண்டுகள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருந்த கஸ்தூரி, 1954ஆம் ஆண்டு ‘முட்டாள்கள் தினத்தன்று’ அதிலிருந்து விடுதலை பெற நினைத்து வெளியே வந்தார்!
திடீரென்று ஆல் இந்தியா ரேடியோ பங்களூர் நிலையத்திலிருந்து கஸ்தூரிக்கு ஓர் அழைப்பு வந்தது. அப்போதுதான் நிறுவப்பட்ட பங்களூர் வானொலி நிலையம் கன்னட மொழியில் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் தயாரிப்பாளராகச் சேருமாறு அழைப்பு விடுத்திருந்தது.
‘ஸ்வாமியைக் கேட்போம்’ என்று நினைத்தார் கஸ்தூரி.
"கஸ்தூரி என்பது கன்னட மொழியின் இன்னொரு பெயர். போய்ப் பணியில் சேர்! புட்டபர்த்தியிலிருந்து 3 மணி நேரப் பயணம்தான் பங்களூர்" என்று பாபா அன்புரை கூறவே, பணியில் சேர்ந்தார் கஸ்தூரி. 15 மாதங்கள் வானொலிப் பணி தொடர்ந்தது.
கஸ்தூரி பங்களூரில் வசித்து வந்த வீடு வில்ஸன் கார்டன்ஸ் 12ஆம் க்ராஸில் இருந்தது. அதற்கு அருகில், ஐந்து நிமிடம் நடந்தால் அடையக் கூடியதாக விட்டல் ராவின் (பாபாவின் பக்தர்) வீடு 9ஆம் க்ராஸில் இருந்தது. ஒருநாள் பாபா அங்கு வருவதாகத் தகவல் கசியவே, கஸ்தூரி தன் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணை விட்டல் ராவ் வீட்டிற்கு எதிரில் அமரச் செய்து "பெரிய காரில் ஆரஞ்சு வண்ண உடை உடுத்தியவர் வந்தால் ஓடி வந்து சொல்லு" என்று பணித்தார். பாபா அங்கு வந்த பத்தே நிமிடங்களில் கஸ்தூரி அங்கு ஆஜர்.
அவரை அன்புடன் விளித்த பாபா, "உனக்குப் புட்டபர்த்தியில் வேலை இருக்கிறது. ஒரு மாதப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட இருக்கிறது, அதன் பெயர் என்னவாக இருக்கும்? ஊகித்துச் சொல்" என்றார். ‘கோதாவரி பாத்’, ‘கர்ம தர்மா’, ‘ப்ரேம யோகா’- ஊஹூம்! கஸ்தூரி சொன்ன எதுவும் சரியாக இல்லை.
பாபாவே சொன்னார்: "சனாதன சாரதி"! 1958ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மஹா சிவராத்திரி அன்று சனாதன சாரதியின் முதல் இதழ் வெளியானது. அந்த இதழின் பணிகளைக் கஸ்தூரி உற்சாகத்துடன் பார்க்கலானார். அதன் ஆசிரியராகவும் ஆனார். ஒரு நாள்…
– தொடரும்…
“