ஏ.கே.செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! – பகுதி: 2
தெய்வப் பணி, நாட்டுப் பணி, தமிழ்ப் பணியை முனைந்து செய்து வந்த செட்டியார் குலத்தில் தோன்றிய உலகம் சுற்றிய தமிழன் திரு.ஏ.கே.செட்டியார், ‘குமரி மல’ரில் வெளியிட்ட மகாமேரு யாத்திரையின் சென்ற இதழ்த் தொடர்ச்சியைக் கீழே படிக்கலாம்.
இவ்விடத்தில் ஒரு ஆப்சர்வேடரி (நக்ஷத்திர யந்திரசாலை) வைக்கப்பட்டிருக்கிறது. கணித சாஸ்திரம், வான சாஸ்திரங்கள் படிக்கும் ஐரோப்பியர், அமெரிக்க மாணவர்கள் பள்ளிக்கூடப் படிப்பு முடிந்தவுடன் ஒரு வருஷம் இவ்விடம் வந்து பயிற்சி பெற்றுப் போவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களில் ஜர்மன் தேச மாணவருடன், சூரியன் நாடோறும் மாறும் வர்ணங்களைக் குறித்துப் படவுதவியுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது இதற்கு அடுத்தது உருக்கின தங்க வர்ணம் நாளைக்குப் படத்தில் வருமென்று நான் சொன்னவுடன் அவருக்கு ஆச்சரியமுண்டாயிற்று. "எப்படி ஐயா, தங்களுக்கு இவ்வளவு நிச்சயமாகத் தெரியும்?" என்று என்னைக் கேட்டார். உடனே நான், உத்தராயண முதலில் தாமிர வர்ணமும், பிறகு அருணம், அப்புறம் பப்புரு நிறம் கடைசியில் ஸுமங்கல் (உருக்கின தங்க வர்ணமென்று) ஸ்ரீ ருத்திரத்தில் கூறியிருப்பதைச் சொன்னேன். உடனே அம்மாணவர் வியப்புற்றார். ருக் வேதத்தில் சூரியனுக்குத் தங்க வர்ணத்திற்கு மேலான வெண்மை நிறத்தை வர்ணிக்கவில்லை என்பது ஆர்க்டிக் பிரதேசச் சூரியனைக் குறிப்பதாகும். இதற்கு நேரே வடக்கில் "மேரு நுனி" இருக்கிறது. இந்த இடத்திலிருந்துதான், பௌதிக நூல் வல்லார் மேரு நுனியைக் காணப் போய்க் காலமடைந்தார்கள். அவர்களது யந்திரம் முதலியவற்றை ஞாபகார்த்தமாக இவ்வூர்க் கோவிலில் வைத்திருக்கிறார்கள்.
இது முதல் வடக்கே சென்றால் அவிச்சின்ன சூரியனைப் பார்க்கலாம். ஆகையால் ‘உதயாஸ்தமனம் இல்லாத’ சூரியனைச் சில விரதக்காரர் உபாசிக்க வேண்டுமென்று வேதத்தில் கூறியதை அனுஷ்டிக்க விரும்பினால் அவர்கள் இந்த ஸ்தானத்தை அடைய வேண்டும்.
என் வாழ்நாள் முழுதும் கண்ணுக்குக் கண்ணாடியில்லாமலும், கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பவர்களை யோகப்பயிற்சியின் பலனாக எடுக்கும்படியும் செய்திருப்பதுண்டு. நாம் அதை உபயோகியாததினால் ஸம்ஸ்கிருதத்தில் கண்ணிலணியும் கண்ணாடிக்குப் பெயர் இல்லை. நாள்தோறும் சுமார் பத்து மணி வரை பகலில் ஏட்டுச் சுவடியிலுள்ள சிறிய எழுத்துக்களைப் படித்துக் காலங் கழித்து வருவேன். ஒருநாள் பகலில் சூடான ஓரிடத்தில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது சூரிய ஒளி மூளையில் (ஸன் ஸ்ட்ரோக்) விழக் கண்களுக்குக் கெடுதல் நேர்ந்தது. கர்ம விபாக சாஸ்திரப்படி உதயாஸ்தமனமில்லாத சூரியனைத் தரிசித்து அவனைப் பார்த்துக் கொண்டே சூரிய அஷ்டோத்திரத்தைச் சில ஆயிரம் ஜபித்துப் பிறகு ஸ்ரீ ருத்திரத்தினாலும் ‘வயஸ் ஸுபர்ணா’ என்கிற மந்திரத்தினாலும் புரச்சரணை செய்து விரத சமாப்தி செய்வதாக சங்கல்பித்தேன். உடனே யாத்திரையை ஆரம்பித்து ஆர்க்டிக் பிரதேசம் வந்தேன்.
நாள்தோறும் கப்பல் எஜமானனைப் பார்த்து "ட்றோம்ஸோ போனவுடன் சூரியன் மேகத்தாலும், பனிமழைகளினாலும், மறைபடாமல் எனக்குத் தரிசனம் கிடைக்குமா?" என்று ஆவலுடன் கேட்பேன். அப்பொழுதெல்லாம் அவரும் கப்பலில் அமைந்திருக்கிற யந்திரத்தைப் பார்த்துக் கொண்டே கால நிலைமையை முன்னேயறிந்து சொல்ல முடியாதென்று கூறுவார்.
நானோ இந்தியாவிலிருந்து சுமார் 8000 மைல் வரை யாத்திரை செய்து பெருஞ் செலவில் அதை நிறைவேற்றப் போனவன். ‘அவிச்சின்ன சூரிய’ தரிசனமில்லாமல் திரும்பினால் இதை விட மனோ துக்கம் எனக்கு வேறு என்ன வேண்டும்? எனக்காகக் கப்பலை நிறுத்த முடியுமா?
ஒரு நாள் மாலை என் மனத்தில் ஈசுவர கிருபையினால் ஒன்று தோன்றிற்று. அதாவது சூரியனை நினைத்து "சூரியனே! நீ நாளை முதல் மூன்று தினங்கள் மேகம் முதலியவற்றால் மறையாமல் தரிசனம் கொடுத்து என் விரதத்தை முற்றுப் பெறச் செய்யாவிடில் என் சாபத்துக்கு உட்பட நேரும். ஈசுவராதிகளெல்லாம் பக்தர் சாபத்தால் தசாவதாரம் எடுக்க நேர்ந்ததை ஞாபகப்படுத்துகிறேன்" என்று சொல்லி விட்டு என் அறைக்குள் போய் சிரம பரிகாரம் செய்து கொண்டேன்.
சில மணி நேரத்துக்கெல்லாம் கப்பல் தலைவன் என்னிடம் ஓடி வந்து "சூரியன் இனிப் பிரகாசமாகுவான்; யந்திரமும் அப்படியே தெரிவிக்கிறது. தாங்களும் விரதத்தை நிறைவேற்றலாம்" என்று சொன்னான். நான் அவரை ஒரு தேவ தூதனாக நினைத்து உடனே விரதத்தை மேற்கொண்டேன்.
கப்பல் போகக் கூடிய ‘வடக்கு முக்கு’ என்று ஓர் இடம் இருக்கிறது. அதையடைந்த பிறகு கொஞ்சம் தென் கிழக்காகக் ‘கர்கிஸ்’ என்ற சிற்றூர் போய்ச் சேர வேண்டும். அதுதான் யாத்திரா முடியும் இடம். இவ்விடத்தில் நிலக்கரி கிடைக்கிறது. ஆகையால் ஒரு காலத்தில் இந்த இடம் நம் தேசம் போல அதிக வெப்பமுள்ளதாய் மரம் செடிகள் நிரம்பப் பெற்று பூகம்பம் முதலானவற்றால் அழிந்து ஆயிர வருஷக்கணக்காக அப்படியேயிருந்திருக்க வேண்டுமென்று நம்பலாம்.
சில காலங்களில் வருஷம் பூராவும் சூரிய ஒளியின்றி, பனி மழையால் உணவுக்கு வேண்டிய பயிர் முதலாயின உற்பத்தியாகாமல் போனதினால் நம் முன்னோர் இதை விட்டுத் தெற்கே சென்றார்கள் என்று சாந்தோக்கிய உபநிஷத்தில் முதல் அத்தியாயத்தில் கூறியிருக்கிறது.
வடக்கு நுனியிலிருந்து மேற்கு நுனிக்கு சுமார் 190 மைல் இருக்கிறதென்று ஆராய்ச்சியாளர் சொல்லுகிறார்கள். அந்த இடம் எப்படியிருக்கிறதென்பதைப் பார்க்க அறிஞர்களால் முடியவில்லை. ஆகாயவிமானமாவது கப்பலாவது அவ்விடம் போகவியலவில்லை. மேரு நுனியை நெருங்கின விமானமும், கப்பலும் கிழக்கேயிழுக்கப்பட்டுச் சுமார் 500 மைலுக்கு அதிக தூரத்தில் தள்ளப்படுகின்றன.
(வடக்கே காட்டுகிற முள்ளை) நீங்கள் சாதாரணமாகப் பார்த்திருப்பீர்கள். மேரு நுனிக்குப் போனால் அந்த முள் எந்தப் பக்கம் திரும்புகிறதென்று தெரிய வேண்டும். இதுதான் ரஹஸ்யம். இந்த வடக்கு நுனியிலிருந்து கொஞ்ச தூரத்தில் வடமேற்காக ‘ஸ்விஸர்பர்கு தீவு’ இருக்கிறது. அவ்விடத்திலிருந்து மேரு நுனி சுமார் இருநூறு மைலுக்குள்ளேயே இருக்கக் கூடும். அங்கிருந்து மேரு நுனிக்குப் போனாலும் முன் நேர்ந்த கதிதான். ஆண்டுதோறும் உத்தராயணத்தில் மேல் நாட்டுப் பேரறிஞர் பலர் முயற்சி செய்துகொண்டே வருகிறார்கள். ஏதாவது ஒரு தடை நேருகிறது.
அதனாலேயே தைத்திரிய ஆரணியத்தில் ஒரு ரிஷி மற்றொருவரைப் பார்த்து "நான் மேருவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய பார்த்ததில்லை" என்றார்.
அதற்கு மற்றொருவர், "நான் நேரே பார்த்தேன்" என்றார்.
அவர் மகான்; நாம் மனிதர்; ஆகையால் மேருவைப் பார்க்க முடியாது. நான்கு தினங்களில் சூரியனைத் தரிசித்து ஜபம் செய்து திரும்பவும் ட்றோம்ஸோவுக்கு வந்தேன்.
மேரு யாத்திரை முற்றும்.
–அடுத்த வாரம் ‘பார்த்த்தில் ரசித்தது’
“