நல்ல படங்களை மட்டுமே பார்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு திரைப்படம் பார்ப்போருக்குச் சுவையான ஒரு கலை விருந்து ‘ஃபாரஸ்ட் கம்ப்’!
1994இல் வெளிவந்த ஹாலிவுட் படம் இது. 13 ஆஸ்கார் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அற்புதப் படம். ஆறு விருதுகளை வென்றது.
1) சிறந்த நடிகர், 2) சிறந்த இயக்குநர், 3) சிறந்த திரை இயக்கம், 4) சிறந்த திரைப்படம், 5) சிறந்த திரை வண்ணம், 6) சிறந்த திரைக்கதை ஆகிய ஆறு விருதுகளைப் பெற்ற இந்தப் படத்திற்கு இன்னும் எவ்வளவு விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
காமடி, உணர்ச்சிச் சித்திரம், வாழ்க்கை முறையைக் கற்பிக்கும் படம், ஆக்ஷன் படம், சிறந்த திரைக்கதை உள்ள படம்… இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு செல்லுங்கள்! அனைத்தையும் உள்ளடக்கி முன்னணியில் வந்து நிற்கும் இந்தப் படம்!
அற்புத நடிகர் ‘டாம் ஹாங்க்ஸ்’ தான் இதில் கதாநாயகன். கதாநாயகன் தன் கதையைத் தானே சொல்லும் பாணி, கதையின் சிறப்பு அம்சம். இதற்காக டாம் ஹாங்க்ஸ் விசேஷப் பயிற்சி எடுத்தாராம்.
ஒரு பஸ் ஸ்டாப்பில் கதை ஆரம்பமாகிறது. அப்போது பறவை ஒன்றின் இறகு அங்கு பறந்து வந்து விழுகிறது. படம் முடியும்போதும் அதே காட்சியுடன் முடிகிறது. ஆனால் இடையில் செல்லும் மணித்துளிகள் ஓர் உணர்ச்சிப் பிரவாகத்தையே நம்முள் எழுப்பி விடுகின்றன!
ஃபாரஸ்ட் கம்ப்பின் ஐ.க்யூ 75. ஆகவே, அவனை வழக்கமாக அனைவரும் சேரும் பள்ளியில் அனுமதிக்க முடியாது. அதற்குக் குறைந்தபட்சம் 80ஆவது ஐ.க்யூ இருக்க வேண்டும் என்கிறார் பள்ளியின் பிரின்ஸிபால். ஐந்து குறைந்தால்தான் என்ன என்று ஆதங்கத்துடன் ஃபாரஸ்ட்டின் தாய் வினவுகிறாள். விதிகளைச் சுட்டிக் காட்டுகிறார் பிரின்ஸிபால். ஃபாரஸ்ட்டுக்குத் தாயேதான் எல்லாம். படம் முழுவதும் வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்கோள்கள், வைர வரிகள்!
"My mama always said life was like a box of chocolates. You never know what you are going to get" என்பதிலிருந்து, வாழ்க்கை முழுவதும் அற்புதங்கள் நிரம்பியது என்பது வரை அற்புதமான வரிகளை நாம் நினைத்து நினைத்து மகிழலாம்.
சிறிது அறிவுத் திறன் குறைவுபட்ட ஃபாரஸ்ட், நன்கு ஓடுவான். ஃபுட் பால் டீமில் விளையாடி, சிறந்த பரிசைப் பெற ஜனாதிபதி கென்னடியைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது. அத்தோடு, லிண்டன் பி.ஜான்ஸன், நிக்ஸன் ஆகிய ஜனாதிபதிகளைச் சந்திக்கும் வாய்ப்பும் பின்னால் கிடைக்கிறது. ஆகவே, அமெரிக்கச் சரித்திரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் அற்புதப் படம் இது என்றும் அமெரிக்கர்கள் பெருமைப்படுகின்றனர்.
ஃபாரஸ்டுக்கு ஜென்னி என்ற இளம் பருவத் தோழி மீது மாறா அன்பு உண்டு. அவளோ, வாழ்க்கையில் தறி கெட்டுத், திசை கெட்டு, உடலை விற்கும் அவல நிலைக்கு ஆட்படுகிறாள். ஆனால், அவள் மூலமாக ஒரு பிள்ளையைப் பெறுகிறான் ஃபாரஸ்ட்.
ஃபாரஸ்ட் வியட்நாம் போரிலே ஈடுபட்டுச் சிறப்பாகச் செயல்படுகிறான். அவனது படைப்பிரிவின் தலைவனிடம் அவன் பேசும் பேச்சு, பாரஸ்டின் உண்மையான மன நிலையை விளக்கும். "நீ என்னதான் செய்வாய்" என அவர் கேட்கும்போது, படைப்பிரிவின் தலைவரான அவரை நோக்கி, "நீங்கள் சொல்வதை நான் கேட்பேன்" என்கிறான் ஃபாரஸ்ட்.
"அடடா! உனக்கு ஐ.க்யூ 160 என்று அல்லவா சொல்ல வேண்டும்!" என அவர் கூறுகிறார்! அர்த்தமுள்ள, இது போன்ற சிறு சிறு பொறிகள் படம் முழுவதும் வசனங்களாக நிரம்பி ஃபயர் ஒர்க்ஸ் செய்கின்றன!
1984இல் வின்ஸ்டன் க்ரூம் எழுதி வெளிவந்த நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இதற்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் எரிக் ரோத். டைரக்டர் ராபர்ட் ஜெமெக்கிஸ். ஃபாரஸ்டின் அன்பிற்குகந்த தோழியாக வந்து, பின் மனைவியாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துத் தந்த ஜென்னி கரனாக, ராபின் ரைட் சிறப்பாக நடித்துள்ளார்! வாழ்க்கையில் வருவதையெல்லாம் திறம்பட எதிர்கொள்ளும் ஃபாரஸ்ட்டிடம் ஒவ்வொருவருக்கும் கற்க வேண்டிய பாடம் ஏதேனும் ஒன்று உண்டு!
ஜனாதிபதிகளுடனான டாம் ஹாங்க்ஸின் சந்திப்பில் ஸ்பெஷல் எபெக்டின் திறமை பளிச்சிடுகிறது. ஜென்னியின் கல்லறையில் ஃபாரஸ்ட் புலம்புவது, தன் பையனைக் கடைசிக் காட்சியில் பள்ளிக்கு அனுப்புவது போன்ற சிறு சிறு காட்சிகளிலும் கூட டாம் ஹாங்க்ஸ் நம் மனத்தை உருக வைக்கிறார்! தன் நண்பனுக்குக் கொடுத்த வார்த்தையை நிலைநாட்ட ஒரு படகை வாங்கி, அதன் மூலமாக ஒரு பெரும் நிறுவனத்தின் தலைவராக ஆவதும், சர்வ சாதாரணமாக பஸ் ஸ்டாப்பில், தனது நிறுவனமே அது என்பதை அவர் சொல்வதும் மறக்க முடியாத காட்சிகள் வரிசையில் சேரும்.
ஒரு ஹாலிவுட் நடிகையின் உச்சபட்ச ஆசையைக் காதரீன் ஹெப்பர்ன் இப்படிக் கூறுகிறார்: "The average Hollywood film star’s ambition is to be admired by an American, courted by an Italian, married to an Englishman and have a French boyfriend."
ஆனால் டாம் ஹாங்க்ஸிற்கு எல்லா நாட்டிலிருந்தும், எல்லாப் புகழும் பெருமையும் இந்தப் படத்தினால் வந்து விட்டது எனலாம்!
இந்தப் படத்தின் சிறப்புகளைச், சொல்லிக் கேட்பதை விடப் படத்தை ஒருமுறையோ அல்லது விரும்பினால் பலமுறையோ பார்த்து விடுவதே சிறந்தது!
பார்த்த்தில் ரசித்தது மட்டும் அல்ல ஃபாரஸ்ட் கம்ப்; பார்க்கும்போதெல்லாம் ரசிக்க முடிவது ஃபாரஸ்ட் கம்ப்!
அடுத்த வாரம் படித்ததில் பிடித்தது…
“