சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம் (பகுதி – 2)
8) பீம சோழனின் மகன் ராஜேந்திர சோழன். சேர, பாண்டியரை வென்று சிறப்பாக அரசாட்சி நடத்தினான். திருமுல்லைவாயில், திருப்பூந்துருத்தி, திருவெண்ணியூர், திருநெல்லிக்கா, சிற்றேமம், ருஷிகான்னம் ஆகிய ஊர்களில் சிவாலயங்களை எடுப்பித்தான். இதைப் போன்று 80 ஆலயங்களைக் கட்டி முடித்தான்.
9) இவனது மகன் வீரமார்த்தாண்டன். இவன் காலத்தில் வேத பாடசாலைகளும், சாஸ்திரப் பாடசாலைகளும் தோன்றின. அக்னிஹோத்திர வேள்விச் சாலையிலிருந்து கிளம்பும் புகை மண்டலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் படி போலத் தோன்றியது. இவன் சுமார் 60 ஆலயங்களைக் கட்டினான்.
10) இவனது மகன் புகழ்ச் சோழன். இவன் முருக பக்தன். தனக்கு ஒரு மகன் இல்லையே என்று வருந்த, முருகப்பெருமான் கனவில் தோன்றிக் குக பர்வதத்தைப் புனருத்தாரணம் செய்யச் சொல்ல, அவன் அப்படியே செய்தான். முருகனின் அருளால் ஜய சோழனைப் பெற்றெடுத்தான்.
11) ஜயசோழன், ஜயசோழபுரத்தில் பெருவுடையார் கோவிலைப் போல முக்கால் பங்கு இருக்குமாறு ஓர் ஆலயத்தைக் கட்டினான். இவன் மகன் கனக சோழன். இவன் காலத்தில் திருவலஞ்சுழியில் காவிரி நீர் பாதாளத்தில் ஓடி மறைந்தது. இதனால் மக்கள் வருந்தினர். அதற்குரிய பரிகாரங்களைச் செய்து ஏரண்ட முனிவரால் காவிரியை மீட்டான். ஏரண்ட முனிவர் காவிரியை மீட்கத் தன் உயிரை அர்ப்பணிக்க, அவர் வழிபட்ட கொட்டையூர் ஆலயத்திற்குத் திருப்பணி செய்தான்.
12) கனக சோழனின் மகன் சுந்தர சோழன். மறையோன் ஒருவனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க இடை மருதூர் சென்று வழிபட்டுத் தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டான். இவன் மகன் கால கால சோழன். இவன் திருப்பனந்தாளில், குனிந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தினான். இவன் மகன் கல்யாண சோழன். இவன் சிதம்பரத்தில் உள்ள கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டினான். இவன் மகன் பத்ர சோழன். இவனும் தன் முன்னோர்களைப் போலப் பல ஆலயங்களைக் கட்டினான்.
13) நூலின் கடைசி பாரா, சிவபெருமான் பார்வதி தேவி கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பதைத் தெரிவிக்கிறது. இதன்படி, பார்வதி தேவி ஸ்தலங்களைப் பற்றிக் கேட்க சிவபிரான், காவிரிக்கும் சேதுவிற்கும் இடையே சிவ க்ஷேத்ரம் – 23000, விஷ்ணு க்ஷேத்ரம் – 1000, முருகன் க்ஷேத்ரம் – 6000, விநாயகர் க்ஷேத்ரம் – 5000, காளி க்ஷேத்ரம் – 1000, நடராஜர் க்ஷேத்ரம் – 100, துர்க்கை க்ஷேத்ரம் – 3000, சாஸ்தா க்ஷேத்ரம் – 11000 இருப்பதாக அருளுகிறார்!.
பல நீண்ட சுவையான கதைகளை உள்ளடக்கிய இந்த மாஹாத்மியம் பிரபல வரலாற்று ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களால் ஆராயப்பட்டுள்ளது. 1930ஆம் ஆண்டு சோளா லெஜண்ட்ஸ் (Chola Legends) என்று ‘ஜர்னல் ஆஃப் ஓரியண்டல் ரிஸர்ச்’ இதழில் அவர் இது பற்றி ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளார்.
இந்த நூல் வரலாற்று நூல் என்பதை விட்டு விட்டு க்ஷேத்திரங்களை விவரிக்கும் நூலாகவும் அங்கு பாவங்களுக்கான பரிகாரங்கள் மற்றும் பிராயச்சித்தங்களைத் தெரிவிக்கும் நூலாகவும் உள்ளது. அந்த அளவில் இது மதிப்பு வாய்ந்தது. குலோத்துங்கன், வீரன், கரிகாலன், ராஜேந்திரன், சுந்தர சோழன் ஆகியோரைத் தவிர ஏனைய மன்னர்களைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. கரிகாலனுக்குக் கருங்குஷ்டம் இருந்தது என்பதை இந்த ஒரு நூலில் மட்டுமே காண முடிகிறது. மனு நீதிச் சோழன் வரலாற்றை அப்படியே சிவலிங்க சோழன் வரலாற்றில் காண முடிகிறது. இருந்தாலும் காவிரித் தலங்களின் மகிமை பற்றியும் அவற்றின் புராதனப் பழமையை பற்றியும் இந்த நூல் மூலம் அறிய முடிகிறது. இந்த நூலை மேற்கோளாகப் பல ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் காட்டுவது வழக்கம்.
மக்கென்ஸி என்பவரிடம் இருந்த இந்த நூலின் ஒரு கைப்பிரதி அதிர்ஷ்டவசமாக டெய்லர் என்னும் அறிஞரால் மீட்டெடுக்கப்பட்டதால்தான் இந்த நூல் பற்றி அறிய முடிந்தது. இந்த நூலின் இதர பிரதிகள் இங்கிலாந்து சென்றிருக்கக் கூடும். அவைகள் கிடைக்கவில்லை. தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா இதைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். இதன் மூலமாகத்தான் சம்ஸ்கிருதத்தில் இருந்த க்ஷேத்திரங்களின் தமிழ்ப் பெயர்களை அறிய முடிந்தது. த்ருதிஸ்தலம் என்பது திருப்பண்டுருத்தி என்றும், கடேசம் என்பது திருக்கடையூர் என்றும், த்ரிகோடிகா என்பது திருக்கோடிக்காவல் என்பதும், வால்மீகநகரா என்பது திருவாரூர் என்பதும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாலேயே அறிய முடிந்தது.
மொத்தத்தில் சுவையான ஒரு சோழ புராணத்தைப் படித்த மகிழ்ச்சியை இந்த நூல் ஏற்படுத்துகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான சுவடிகளில் தமிழ் மொழி பற்றியும், தமிழ் இலக்கியம், பண்பாடு, கோவில்கள், மன்னர்கள் பற்றியும் பல நூல்கள் உள்ளன. அவை அனைத்தும் வெளி வரும் நாள் எந்த நாளோ! அந்த நாளும் வந்திடாதோ… வெகு விரைவில்!
“