சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம் (பகுதி – 1)
அற்புதமான தமிழ் ஏடுகளையும் அரிய புத்தகங்களின் கைப் பிரதிகளையும் நூல்களையும் சேர்த்து வைத்துள்ள சரஸ்வதி மஹால், நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அறிவுக் கோவில்!
சரஸ்வதி மஹால் பல அரிய நூல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால், சரஸ்வதி மஹாலின் தமிழ்ப் பணிக்கு உரிய மதிப்பும் மரியாதையும் என்றுமே இருந்ததில்லை. இது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம்!
சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள அரிய நூலான ‘பிருகதீஸ்வர மாஹாத்மியம்’ நம்மை வியக்க வைக்கும் ஒரு நூல். சோழ மன்னர்களில் 16 பேர்களின் வரலாற்றை விவரிக்கும் இந்த நூலை, பல தமிழறிஞர்களும் மேற்கோள் காட்டுவது வழக்கம்!
இந்த நூல், நானூறு வருடங்களுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. 30 அத்தியாயங்கள் கொண்டது. 49 பக்கங்கள் கொண்ட கைப்பிரதியை ஆராய்ந்து மூலத்தையும் தமிழாக்கத்தையும் (டி.ஆர்.தாமோதரன், எஸ்.ராஜலெக்ஷிமி, என்.சீனிவாசன் ஆகியோர் தமிழாக்கத்தைச் செய்துள்ளனர்) 1985ஆம் ஆண்டு சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள சில அரிய விஷயங்களை மட்டும் சுருக்கமாகச் சில வரிகளில் காண்போம்.
1) கர்வட என்ற கிராமத்தில் குலோத்துங்கன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தனான அவனைச் சிவபெருமான் சோதிக்க வந்தார். அவனும் அவன் துணைவியும், தக்க முறையில் சிவனடியாரை வரவேற்று உபசரித்தனர். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவனைச் சோழ வம்சத்தின் அரசனாக்கினார். மது, மயன், விஸ்வகர்மா, தாதா விதாதா ஆகிய தேவ சிற்பிகள் மூலம் காவிரிக் கரையில் சோழ தேசம் அமைக்கப்பட்டது. ஐயாரப்பர் ஆலயத்தையும் திருப்பழனம் ஆலயத்தையும் குலோத்துங்கன் கட்டுவித்தான்.
2) தஞ்சாசுரனைச் சிவபெருமான் சூலத்தால் வீழ்த்தும்போது, அவன் உயிர் பிரியும் தருணம், "என் பெயரால் இந்த நகரம் விளங்க வேண்டும்" என்று வேண்டிக் கொள்ள, அந்த நகருக்குத் தஞ்சாவூர் என்று பெயர் வழங்கலாயிற்று.
3) தேவ சோழனின் மகன் சசிசேகர சோழன் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில், திருவாலங்காடு உள்ளிட்ட 60 ஆலயங்களை எடுப்பித்தான். ஒரு சமயம், காவிரியில் பெரு வெள்ளம் வர, நாடே அழியும் சூழ்நிலை ஏற்பட்டது. 48 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து இறைவனை வேண்ட, இறைவன் ‘காவிரியின் குறுக்கே அணை கட்டுக’ என்று அருள் பாலித்தான். அதன்படியே மன்னனும் அணை கட்டினான்.
4) சசிசேகர சோழனின் மகன் சிவலிங்க சோழன் திருவாரூரை ஆண்டு வந்தபோது, பசுங்கன்று ஒன்று தேர்ச்சக்கரத்தில் வந்து சிக்கிக் கொண்டு இறந்தது. தாய்ப் பசு, அரண்மனை வாயிலை அடைந்து கதறியது. இதைக் கண்ட மன்னன், தன் மைந்தன் மீது தேர்ச் சக்கரத்தை ஏற்றி நீதி பரிபாலித்தான். இறைவன் அருளால் இருவரும் மீண்டு எழுந்தனர். சிவலிங்க சோழன் 119 ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தான்.
5) சிவலிங்க சோழன் மகன் வீர சோழன், காவிரிக்குக் கிளை ஆறு ஒன்றை வெட்டி உருவாக்க, அது ‘வீர சோழன் ஆறு’ என்ற பெயரைப் பெற்றது.
6) வீர சோழனுடைய மகன் கரிகாலன். இவன் ஹரதத்த சிவாச்சாரியாரைத் தன் குருவாகப் பெற்றான். கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினான். துர்கேஸ்வரம், மங்களேசம், ஆம்ரவனம் ஆகிய இடங்களிலும் ஆலயங்களை அமைத்தான். ஆனால் விதி வசமாக, கருங்குஷ்டம் இவனைப் பிடித்தது. ஹரதத்தர், ஒரு மண்டல காலம் ஆலயத்திலேயே வாசம் செய்து, நூற்றெட்டு மறைவல்லோரை அழைத்து ‘ஏகாதசருத்ர’ ஜபம் செய்தார். சிவபெருமான் ஹரதத்தரின் கனவில் தோன்றி "தஞ்சாபுரீஸ்வரர் ஆலயத்திற்குத் தென் மேற்கில் உள்ள சிவகங்கா பொய்கையில் மன்னரை நீராடச் சொல்! சக்தி கூபம் கிணற்றுக்கு அருகில் உள்ள கந்தனின் ஆலயத்தில், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் அன்று தரிசனம் செய்யச் சொல்! அதற்கு முன், துந்தில விக்னேசர் (தொந்தி விநாயகர்) ஆலயத்தை நிர்மாணம் செய்யச் சொல்!" என்று, இப்படி வரிசையாகக் கட்டளைகளை இட, மன்னனும் அனைத்தையும் செய்து கருங்குஷ்டம் நீங்கப் பெற்றான்.
7) கரிகாலனின் மகன் பீம சோழன், கேரள ராஜகுமாரி வித்யுல்லதா(மின்னற்கொடி)வை மணந்தான். திருவண்ணாமலையில், கோபுரங்களை அமைத்தான். 77 ஆண்டுகள் இவன் உயிர் வாழ்ந்தான்.
மிக நீண்ட வரலாற்றைக் கூறும், மஹாத்மியத்தின் இதர பகுதிகளையும், இதைப் பற்றி ஆங்கிலேய அறிஞர்களின் கருத்தையும், பிரபல சரித்திர ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் கருத்தையும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்!
தொடரும்…
“