உலகையே நடுநடுங்க வைத்த தீவிரவாதிகளின் தலைவன் ஒஸாமா பின் லேடனை அமெரிக்கா எப்படிப் பிடித்தது என்பது பற்றிய படம். உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில், பத்து வருடங்களாக அவன் தேடப்பட்ட விதம் சுவாரசியமாகப் படம் ஆக்கப்பட்டுள்ளது. 157 நிமிடங்கள் ஓடும் என்றாலும் கூட அலுக்காமல் பார்க்கக் கூடிய படம் இது. 2012இல் வெளியிடப்பட்டது.
அமெரிக்க ராணுவத்தினரும், உளவுத் துறையினரும் இணைந்து எப்படிக் கஷ்டப்பட்டுச் செயல்பட்டு ஒஸாமா பற்றிய விவரங்களைச் சேகரித்து, சரிபார்த்து, வினாடி சுத்தமான ராணுவ நடவடிக்கையை சாடலைட்டின் உதவியுடன் எடுத்தனர் என்பதைச் சுவைபடப் படமாக்கியுள்ளார் டைரக்டர் காத்ரீன் பிஜ்லோ. மார்க் போல் இதை எழுதித் தயாரித்துள்ளார். காத்ரீன் பிஜ்லோ, மார்க் போல் இரட்டையர் ஆஸ்கார் விருது பெற்ற கூட்டணி என்பதால் படத்தின் அமர்க்களத்திற்குக் கேட்கவா வேண்டும்! மயிர்க்கூச்செறிய வைத்து, அடுத்த வினாடி என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலைக் கடைசி வரை தூண்டி நம்மை வியப்புற வைக்கிறது படம்!
ஹிட்லருக்குப் பின்னர் உலகின் அபாயகரமான ஒரே ஆசாமி என்று கருதப்படும் தீவிரவாதி ஒஸாமா பின் லேடன் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி தாக்கித் தகர்த்து உலகையே அலற வைத்தான். அவனைப் பிடித்துத் தன் மீது பட்ட கறையைத் துடைக்க அமெரிக்கா முயன்றது. அவனைப் பிடிக்கப் படாத பாடுபட்டு இறுதியில் வெற்றியை அடைந்தது.
மாயா என்ற இளம் பெண்மணி, சி.ஐ.ஏ எனப்படும் அமெரிக்க உளவுத் துறையில் 2003 ஆம் ஆண்டில் சேர்ந்தாள். அவளது ஒரே நோக்கம் எப்பாடுபட்டேனும் ஒஸாமாவைப் பிடிக்க வேண்டும் என்பதுதான். முதலில் பாகிஸ்தானில் டான் என்ற ஒரு அதிகாரியுடன் அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்ற அவள் செல்கிறாள். தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட அமர் அல் பலூசி என்பவனை அவர்கள் விசாரிக்கின்றனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் அபு அஹ்மத் என்ற கூரியரைப் பற்றிய தகவல் கிடைக்கிறது. அவன் ஒஸாமாவின் தொடர்பாளனாக இருந்தான். ஒஸாமாவுக்கும் அபுவுக்கும் இருந்த தொடர்பை அறிந்த மாயா அவனை விசாரிக்கிறாள்.
ஐந்து வருட காலம் இடைவிடாமல் அவள் ஆராய்ச்சி தொடர்கிறது. இடையே 2008ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் இருந்த மரியட் ஹோட்டலில் ஒரு குண்டு வெடிக்கிறது. அதில் சிக்கிக் கொண்ட மரியா அதிசயமாக உயிர் தப்புகிறாள். அபு அஹ்மத் இறந்து விட்டதாக மாயாவின் உயர் அதிகாரிகள் நம்புகின்றனர். ஆனால் மாயாவோ அனைத்துத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தித் தன் மதியூக அறிவினால் அபு அஹ்மதைக் கண்டுபிடிக்கிறாள். அதன் விளைவாக அதிசயமான ஒரு காம்பவுண்ட் சுவரைக் காண்கிறாள். அந்தத் தனிப்பட்ட கட்டடத்தில் எல்லாமே மர்மமாக இருக்கிறது. அதுதான் ஒஸாமா பின் லேடனின் மறைவிடம்.
அனைவரும் சற்றுச் சந்தேகிக்க, மாயாவோ உறுதிபட அங்குதான் ஒஸாமா இருக்கிறான் என்கிறாள். இறுதியில் அங்கு தாக்குதல் நடத்த ‘உயர் மட்டத்திலிருந்து’ சிக்னல் கிடைக்கிறது. ஹெலிகாப்டரில் அமெரிக்க வீரர்கள் செல்கின்றனர். ஒஸாமாவைக் கொல்கின்றனர். சுபம். கதை – இல்லை, இல்லை உண்மை நிகழ்வு முடிகிறது.
காட்சிக்குக் காட்சி தத்ரூபம், பிரம்மாண்டம், சாடலைட் தொழில்நுட்பம் விளைவிக்கும் அதிசயங்கள்! இறுதியில் 2011ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதியன்று நடந்த இறுதி மரண அடித் தாக்குதல்.
இவை எல்லாம் சேர்ந்து, பார்க்க வேண்டிய முக்கிய படங்களுள் ஒன்றாக ஜீரோ டார்க் தர்ட்டியை ஆக்குகின்றன.
மாயாவாக நடிக்கும் ஜெஸ்ஸிகா சாஸ்டைன் அபாரமாக நடிக்கிறார். இந்தக் குட்டிப் பெண்ணா மாபெரும் கொலைகாரனுக்கு எமனாக வாய்த்தவள் என்று ஆச்சரியப்படும்படியான ஒரு துடிப்பான நடிப்பு!
ஹெலிகாப்டர் மூலம் தரை இறங்கும் அமெரிக்க வீரர்கள் காம்பவுண்டைச் சுற்றி வளைத்து உள்ளே புகுந்து திடீர்த் தாக்குதல் நடத்தும் உண்மை நிகழ்வை, நடந்தது போலவே அருமையாகப் படமாக்கி இருப்பதால் அசந்து போகிறோம்! இருளில் நடக்கும் காட்சிகள் நமக்கு ஓர் உள்ளொளியைத் தருகின்றன – அதர்மம் என்றேனும் ஒரு நாள் அழிந்தே போகும் என்பதுதான் அது!
எத்தனை கோடி டாலர்கள் செலவு – அந்த அரக்கனைப் பிடிக்க! எத்தனை உயிர்கள் அர்ப்பணிப்பு – மனித குலத்தைக் காக்க!!
அது சரி, படத்திற்கு ஜீரோ டார்க் தர்ட்டி என்று ஏன் ஒரு வித்தியாசமான பெயர்? டைரக்டர் பிஜிலோம் தான் பொருத்தமான பெயரைத்தான் சூட்டி இருப்பதாக விளக்குகிறார். முப்பது நிமிடமே நடந்த அற்புதமான ஆபரேஷன் அது! நள்ளிரவில் ஜீரோ ஹவருக்குப் பின்னர் இருளில் நடந்தது அது. ஆகவே ஜீரோ மணிக்குப் பின்னர் இருளில் 30 நிமிடம் நடந்ததால் அதற்கு ஜீரோ டார்க் தர்ட்டி என்ற பெயரை விட வேறு எந்தப் பொருத்தமான பெயரைத்தான் சூட்ட முடியும்! அவருடன் நாமும் இணைந்து ஆஹா பொருத்தமான பெயர்தான் என்று கூவி மகிழ்கிறோம்!
கோடிக்கணக்கான டாலர்களை வசூலில் அள்ளிக் குவித்தது இந்தப் படம். 85ஆவது அகாடமி அவார்ட் விழாவில் ஐந்து அகாடமி விருதுகளுக்கு இது நாமினேட் செய்யப்பட்டது. சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த மூலத் திரைக்கதை, சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த திரைப்பட எடிட்டிங் ஆகிய ஐந்து விருதுகள் தவிர, கோல்டன் குளோப் அவார்டுக்காக நான்கு விருதுகளுக்கு இது நாமினேட் செய்யப்பட்டது. சிறந்த மோஷன் பிக்சர், சிறந்த டைரக்டர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை! இன்னும் எத்தனை விருதுகள் இருந்தாலும் அனைத்துக்கும் தகுதியான படம்தான் இது என்பதைப் படம் பார்க்கும் ரசிகர்கள் ஒருமனதாகச் சொல்வர்.
உண்மை நிகழ்வு என்பதாலும் கதைக்களமாகப் பல வருட காலம் அமைவதாலும் பகுதி பகுதியாக நல்ல தலைப்புகளுடன் கதை ஓட்டம் காண்பிக்கப்படுவது ஒரு புதுமையான உத்தி; முயற்சி!
மறந்துவிடாமல் பார்க்க வேண்டிய, இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்லும் படம் ஜீரோ டார்க் தர்ட்டி! படத்தை ஜீரோ டார்க் தர்ட்டியில் பார்க்க வேண்டிய அவசியமில்லை; நல்ல பகல் நேரத்திலேயே பார்க்கலாம்! மகிழலாம்!! பாராட்டலாம்!!!
–அடுத்த வாரம் ‘படித்ததில் பிடித்தது’…
“