பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 24.2

அனுதினமும் ரமணருடன்! – 2

தேதி வாரியாகத் தொகுக்கப்பட்ட டயரியில் ஏராளமான சுவாரசிய உரையாடல்களும், சந்தேக விளக்கங்களும், அற்புதமான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

அவற்றில் இன்னும் சில:-
1936ஆம் வருடம் 5ஆம் தேதி:
பிரான்ஸ் நாட்டிலிருந்து, சில பெண்மணிகள் உள்ளிட்ட பிரெஞ்சுக்காரர்களும், அமெரிக்காவிலிருந்து சிலரும் ஆசிரமத்திற்கு வந்திருந்தனர். அவர்கள், "கிழக்கு, மேற்கிற்குச் சொல்லும் செய்தி என்ன?" என்று கேட்டனர்.
"அனைத்தும் ஒரே லட்சியத்தை நோக்கியே செல்கின்றன" என்று அருளினார் ரமணர்.

6-1-1936.
ஒரு முதியவர் மறுபிறப்புகளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார். ஒருவரின் இறப்பிற்குப் பின்னர் இரண்டே வருடங்களில் அவர் மீண்டும் பிறப்பது சாத்தியம்தானா என்பது அவரது கேள்விகளுள் ஒன்று. இதற்குப் பகவான் பின்வருமாறு பதில் அளித்தார்:
"நிச்சயமாக! அதுமட்டுமில்லை, இரண்டு வருடம் கழித்துப் பிறந்தாலும் இந்தப் பிறப்பில், இருபது அல்லது நாற்பது, ஏன் எழுபது வயது வரை
கூட வாழலாம்". இதற்கு யோக வாசிஷ்டத்திலிருந்து லீலாவின் கதையை அவர் மேற்கோள் காட்டினார்.

"ஸ்ரேயோ ஹி ஞானம் அப்யாசாத் ஞானாத் த்யானம்
த்யானாத் கர்மபல த்யாகா"

இங்கே ஞானம் என்பது பயிற்சி இல்லாத அறிவைக் குறிக்கிறது. அப்யாசம் என்பது அறிவு இல்லாத பயிற்சியைக் குறிக்கிறது. தியானம் என்பது அறிவுடன் கூடிய பயிற்சியைக் குறிக்கிறது. பயிற்சி இல்லாத ஞானத்தை விடப் பயிற்சியுடன் கூடிய ஞானம் மேலானது! கர்மபல த்யாகா நிஷ்காம கர்மா – ஒரு ஞானியுடைய பற்று இல்லாத செயல் – பயிற்சியுடன் கூடிய அறிவை விட மேலானது.

28-1-1936.
திரு.கெல்லி, அவர் மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவருக்கு ஒரு சந்தேகம். கொசுக்கடி முதலான எல்லாவிதச் சிரமங்களுடன் உட்கார்ந்து ஒருமுனைப்படுவது எப்படி என்று!

பகவானின் பதில்: உங்கள் தியானம் சரியாக இருந்தால் இந்தச் சிரமங்கள் உங்களுக்குக் கவலையை அளிக்காது! இந்த வசதிக்குறைவுகளைப் பற்றி மனதில் நினைக்க வேண்டாம்! தியானத்தில் மனதை நேராகச் செலுத்துங்கள்!. உங்களுக்குக் கொசுக்கடிகளைத் தாங்கும் சக்தியும் பொறுமையும் இல்லை எனில் ஆத்மாவை அறிவது எப்படி? வாழ்க்கையின் எல்லாவிதக் கஷ்டங்களுக்கும் இடையில்தான் ஆத்ம ஞானம் இருக்கும். நீங்கள் உங்களுக்கு வசதிகளைச் செய்து கொண்டால் நேராகப் படுக்கைக்குச் சென்று தூங்கி விடுவீர்கள். தொந்தரவுகளை எதிர்கொள்ளுங்கள்! தியானத்தில் சீராக இருங்கள்!

11-2-1936.
ஒரு சுவாரசியமான உரையாடலை ஃப்ரைட்மேன் ஆரம்பித்தார்:
ஜனகர் ஒரு ஞானி. என்றாலும் கூட அவர் (செயல் புரிவதை விடாது) தனது நாட்டை ஆண்டார். மனம் செயல்படச் செயல்கள் வேண்டுமில்லையா? ஞானியின் மனம் செயல்பட என்ன காரணம்?

பகவான்: நீங்கள் ஜனகர் ஒரு ஞானி என்றாலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்று சொன்னீர்கள். இப்படி ஜனகர் கேட்டாரா? உங்களுடைய மனதில்தான் இந்தக் கேள்வி எழுகிறது. ஞானிக்கோ ஆத்மாவைத் தவிர வேறெந்த உணர்வும் இருக்காது. இப்படியெல்லாம் எந்தவிதச் சந்தேகமும் ஜனகருக்குக் கிடையாது.

பக்தர்: ஒருவேளை அது ஒரு கனவு போல இருக்கலாம். நாம் நமது கனவுகளைப் பற்றிப் பேசுவது போல அவர்கள் தங்களின் செயல்களை நினைக்கக்கூடும்.

பகவான்: கனவு என்பது கூட உங்கள் மனதிலேதான் இருக்கிறது. இந்த விளக்கம் கூட உங்கள் மனதில்தான் இருக்கிறது.

பக்தர்: ஓஹோ! எல்லாமே ரமண மாயைதான் – ஆத்மாவினால் உருவாக்கப்பட்டது.

பகவான்: அப்படி என்றால் அங்கே த்வைதம் என்பதே (இரண்டு என்பதே) இல்லை. ஆகவே மேலே பேச்சே இல்லை.

பக்தர்: ஒரு மனிதன் ஆத்ம ஞானம் பெற்ற பின்னர், உலகிற்குத் திறம்பட உதவலாம் அல்லவா?

பகவான்: உலகம் என்பது ஆத்மாவை விட அன்னியமாக இருந்தால்!

20-7-1936.
பகவானின் அணுக்க பக்தரான டி.கே.எஸ் ஐயர் பரபரப்பாக இருந்தார். ஏனெனில் பகவானைப் பற்றித் திருவண்ணாமலை நகரில் ஒருவர் தவறாகப் பேசி விட்டாராம். அவரை மறுத்துப் பேசாமல் வந்து விட்ட அவர் பரபரப்பாக இருந்தார். ஆகவே பகவானிடம் தான் பகவானுக்காகப் பேசாமல் சும்மா இருந்து விட்ட தவறுக்காக என்ன தண்டனை பெற வேண்டும் என்று கேட்டார்.

பகவான்: பொறுமை! இன்னும் அதிகப் பொறுமை; சகிப்புத் தன்மை! இன்னும் அதிகச் சகிப்புத்தன்மை!

இரண்டாம் பாகத்திலிருந்து சில சுவையான பகுதிகள்:

10-1-1937
ரங்கசாமி ஐயர் ஒருநாள் மலைப் பகுதிக்குச் சென்றிருந்தார். அங்கே ஒரு சிறுத்தை இருந்தது. அதன் மேல் அவர் ஒரு கல்லை விட்டெறிந்தார். அது அவரை நோக்கி வந்தது. உயிருக்குப் பயந்து அவர் ஓட ஆரம்பித்தார். வழியில் பகவான் அவரைச் சந்தித்தார். என்ன விஷயம் என்று கேட்டார். ரங்கசாமி ஐயர். "சிறுத்தை" என்று மட்டும் சொல்லி விட்டு ஓடிக் கொண்டிருந்தார். பகவான் சிறுத்தை இருந்த இடத்திற்குச் சென்றார். அது உடனே அந்த இடத்தை விட்டு அகன்றது. இது நடந்த காலத்தில் திருவண்ணாமலை கொடிய ப்ளேக் நோய் பரவி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் சிறுத்தைகள் அடிக்கடிச் சுதந்திரமாகக் கோவிலின் அருகே வந்து போகும். சில சமயம் இரண்டு அல்லது மூன்று சிறுத்தைகள் கூட ஒன்றாகச் சேர்ந்து வரும்.

பகவான் எந்த மாதிரி சூழ்நிலையில் மலைப் பகுதியில் வசித்து வந்தார் என்று அறிய மேற்கூறிய சம்பவம் ஒரு சிறிய உதாரணம்!

-தொடரும்…

About The Author