பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 20.3

கடவுளைத் தேடி ஒரு பயணம்! – 3

Ramadas

பல்வேறு இடங்களுக்கும் சென்ற பின்னர் ராமதாஸ் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்சவடியை அடைந்தார். அங்கு ஒரு நண்பர் அவரிடம் வந்து உணவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று கூறித் தர்மசத்திரம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். இரவில் கடும் குளிர். அதே நண்பர் கம்பளம் ஒன்றையும் அவர் மீது போர்த்தினார். ராமனின் கருணையே கருணை! வணிக நண்பரின் அன்பான உபசரிப்பிற்கிணங்க அவருடன் இரு நாட்கள் ராமதாஸ் தங்கி இருந்தார். இரண்டாம் நாள் இரவு வந்தது. மெதுவாக அவரை நெருங்கிய நண்பர், கனவில் காட்சிகளைப் பெறும் அபூர்வ சக்தி அவரிடம் உண்டா என்று வினவினார். ராமதாஸோ ராமர் பெயரைச் சொல்லும் ‘சாதனா’தான் தனக்குத் தெரியும் என்று பதிலிறுத்தார்.

"நீங்கள் நினைத்தால் அதைச் செய்ய முடியும்" என்றார் அந்த அன்பர். மேலும் தொடர்ந்த அவர், "நாளைக்கு டெரிபி ஸ்வீப்பில் வெற்றி பெறப் போகும் அதிர்ஷ்ட நம்பர்களைத் தெரிந்து கொள்ள விரும்பினால் அதைக் கனவு மூலம் பெற முடியும்" என்றார். "ராமனைத் தவிர ராமதாஸ் தெரிந்து கொள்ள வேண்டியது வேறொன்றும் இல்லை" என்றார் ராமதாஸ். "அதனால் கிடைக்கும் பெருந்தொகை சுயநலத்திற்காகச் செலவழிக்கப்படப் போவதில்லை. சாதுக்களுக்குப் பிக்ஷை அளிப்பதற்காகவே செலவழிக்கப்படும்" என்றார் அன்பர். "சாதுக்களுக்கு எப்படிப் பிக்ஷை அளிப்பது என்பது ராமனுக்குத் தெரியும்" என்றார் ராமதாஸ். அன்பர் மௌனமானார். இது ராமனால் தனக்கு வைக்கப்பட்ட சோதனை என்று தேர்ந்தார் ராமதாஸ்.

இன்னொரு சம்பவம் தர்மசத்திரத்தில் நடந்தது. நான்கு மாதங்களாக ஜுரத்தால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. அந்தச் சிறுமியின் தாய் ராமதாஸிடம் வந்து, அவள் குணமடையப் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கொண்டாள். அதன்படிச் சிறுமியின் படுக்கை அருகே சென்ற ராமதாஸ், அவள் கடுமையான ஜுரத்தால் வாடி இருப்பதைப் பார்த்தார். அருள் புரியுமாறு ராமனை வேண்டினார். ராமனின் வழி தனி வழி! இரண்டே நாட்களில் அவள் குணமடைந்தாள்.

அடுத்த நாள் மூன்று மைல்கள் நடந்து சென்ற ராமதாஸ் தபோவனம் என்று அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றார். அங்குதான் லக்ஷ்மணர் சூர்ப்பநகையின் மூக்கை அரிந்தாராம். ரம்யமான இடம் அது. கோதாவரி தாழ்வான மலையிலிருந்து பெருகி ஓடும் அற்புதக் காட்சியை அங்கு காணலாம். அங்கு ஒரு பெரிய பாறையில் நீள் சதுர வடிவில் அடுத்தடுத்து குகைகள் உள்ளன. பாறையின் கீழிருந்து 10 அடி தொலைவில், கோதாவரி சீறிப் பாயும் இடத்தில் ஒரு குகையில் ராமதாஸ் இரவில் தங்கினார். நதியில் குளித்துக் குகையில் பஜனை செய்தார். தபோவனத்தில் ஏராளமான சாதுக்களை அவர் தரிசித்தார். அடுத்த நாள் பஞ்சவடி திரும்பினார்.

அங்கிருந்து த்ரயம்பகேஸ்வரம், பண்டரிபுரம் சென்று அங்கு ஆனந்த அனுபவங்களைப் பெற்றார்.

இறுதியில் ஹூப்ளி வந்தடைந்தார். அங்கு ஸ்ரீ சித்தாரூட ஸ்வாமி மடத்திற்குச் சென்றார். அவரைத் தரிசித்தார். பத்து நாட்கள் சென்றன. அங்குள்ள கபீர்தாஸரின் சமாதிக்குச் செல்வது அவர் வழக்கமானது. சித்தாரூட ஸ்வாமியுடன் சம்பாஷிப்பதும் அவருக்கு ஆனந்தம் அளித்தது.

ராமதாஸ் சித்தாரூட ஸ்வாமி மடத்தில் வந்து தங்கி இருக்கும் செய்தி அவருடைய சொந்த ஊரான மங்களூரை அடைந்தது. அவரது முன்னாள் ஆசிரமத்தில் (இல்வாழ்க்கையில்) மனைவியாக இருந்தவரும், அவர் குழந்தையும் அவரைப் பார்த்துத் தங்களுடன் அழைத்துச் செல்ல ஓடோடி வந்தனர். ஸ்வாமியும் ராமதாஸை அவர்களுடன் செல்லுமாறு அன்புடன் உரைத்தார்.

சம்சாரத்திற்குத் திரும்புமாறு அழைத்த அவர் மனைவியிடம் "ராமனே அனைத்துச் செயல்களையும் செய்பவன்" என்று கூறிய ராமதாஸ், "அவன் மீது அனைத்துப் பாரத்தையும் போடுமாறு" (முன்னாள்) மனைவியிடம் கூறி அருளினார்.

நீராவிப் படகில் ஏறி மங்களூர் வந்தடைந்தார். நேராகக் கத்ரி மலையில் ஏறி இரவு தங்கினார். மறுநாள் தன் சகோதரர் சீதாராம் ராவைச் சந்தித்தார். சில நாட்கள் கழித்துத் தன் குருவை (முன்னாள் ஆசிரமத்தில் தந்தை) தரிசித்தார்.

இது நடந்தது 1923ஆம் ஆண்டில். ராமதாஸ் கத்ரி மலையில் பஞ்ச பாண்டவர் குகை என்று அழைக்கப்படும் ஒரு குகையில் அமைதியாக ராம நாமம் ஜபித்தவாறே வாழலானார்.
இங்கு முடிகிறது ‘IN QUEST OF GOD’ புத்தகம்.

பின்னர் பெரும் மகானாக உலகம் முழுவதும் அறியப்பட்ட ஸ்வாமி ராமதாஸ், ஆனந்தாஸ்ரமத்தை கன்ஹன்காட்டில் (கேரளத்தில் உள்ள இடம்) நிறுவினார்.

அன்பர்களின் ஆன்மிகக் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் சுவாரசியமானவை. உலகப் பயணம் மேற்கொண்ட அவரை ஏராளமான அன்பர்கள் தரிசித்துப் பயன் அடைந்தனர். ஆன்மிக அன்பர்களுக்கு, அவர் எழுதியுள்ள புத்தகங்கள் அனைத்தும் அரும் பொக்கிஷமாகும். ஸ்வாமி ராமதாஸ் நிறுவிய ஆனந்தாஸ்ரமம் பற்றி அறியவும், IN QUEST OF GOD உள்ளிட்ட பல்வேறு அருமையான மின்னூல்களைத் தரவிறக்கம் செய்யவும் கீழ்க்கண்ட தளத்தை அணுகலாம்:
http://www.anandashram.org/html/text.html

–அடுத்த வாரம் ‘பார்த்ததில் ரசித்தது’…

About The Author