இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தி கவுண்டர்ஃபெய்டர்ஸ்’.
சாலமன் சோரோவிச் என்ற கள்ள நோட்டுத் தயாரிப்பு மன்னனை நாஜி ஜெர்மனி 1944ஆம் ஆண்டு கைது செய்து ஜெர்மானியச் சித்திரவதை முகாம் ஒன்றில் அடைத்தது.
எப்படியேனும் நேச நாடுகளின் பொருளாதார பலத்தை உடைக்க வேண்டும் என்று எண்ணிய ஹிட்லர் அதற்கான ஒரு கருவியாக பிரிட்டிஷ் பௌண்டுகளையும் டாலர் நோட்டுகளையும் கள்ளத்தனமாகத் தயாரித்துப் புழக்கத்தில் விடத் திட்டமிட்டர். அதற்கு சோரோவிச் ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்பட்டார். 13 கோடி ஸ்டர்லிங் பௌண்ட் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. உலகில் இந்த அளவில் பிரம்மாண்டமாகக் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதே கிடையாது! சசென்ஹாஸன் என்ற இடத்தில் இருந்த சித்திரவதை முகாமில் இதற்காக இரண்டு பிரிவுகள் ஏனைய பிரிவுகளிடமிருந்து தனித்துப் பிரிக்கப்பட்டன. ஒரு தனிக் கள்ள நோட்டு ஒர்க் ஷாப் அமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ‘ஆபரேசன் பெர்ன்ஹார்ட்’ என்று பெயர்.
அச்சுக்கலையில் தேர்ந்த நிபுணர்கள் இதர கைதி முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்டனர். நாஜி அதிகாரிகளுடன் ஒத்துழைத்தால் அவர்களின் சிறைவாசம் தங்கக் கூண்டு வாசமாக மாறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்தக் கள்ள நோட்டுக் குழுவில் அடால்ஃப் பர்கர் என்ற கைதியையும் இணைத்தனர் நாஜி அதிகாரிகள். அடால்ஃப் எப்படியாவது இந்தத் திட்டத்தை நிறைவேற விடாமல் செய்ய எண்ணினார். சோரோவிச்சுக்கு ஒரு தர்மசங்கடமான நிலை. எதிரிக்கு உதவுவதா அல்லது உதவாமல் இருந்து சக கைதிகளை பெரும் துன்பத்திற்குள்ளாக்குவதா?
The Counterfeiters
கைதிகளின் மனப் போராட்டங்களை அற்புதமாகச் சித்தரிக்கிறது படம்.
பிரிட்டிஷ் பௌண்டை வெற்றிகரமாக அச்சடிக்கும் சோரோவிச் டாலர் அடிப்பதைத் தாமதமாக்குகிறார். இதற்கிடையில் போரின் போக்கும் முடிவும் நாஜிகளுக்கு எதிராக அமைகின்றன. திடீரென்று ஒருநாள் அனைத்துப் பிரிண்டிங் மெஷின்களும் பிரித்து வேறிடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குழுவினருக்கோ பயம், ஒருவேளை தங்கள் கதை முடிக்கப்பட்டு விடுமோ என்று! ஆனால் நடப்பதோ வேறு. ரஷியாவின் செம்படை அதி வேகமாக முன்னேறுவதையொட்டி ஜெர்மானியக் காவலாளிகள் முகாமை விட்டுப் பறந்து விடுகின்றனர். சிறையின் இதர பிரிவைச் சேர்ந்தவர்கள் கள்ள நோட்டு அடிக்கும் குழுவினரைப் பார்த்துச் சந்தேகப்பட அவர்கள் தங்கள் செயல் பற்றி விளக்குகின்றனர்.
கதை மான்டி கார்லோவுக்குத் திரும்புகிறது. சோரோவிச் தான் தயாரித்த கள்ள நோட்டுக்களையெல்லாம சூதாட்டத்தில் செலவழித்து விடுகிறான். அவன் அனைத்துப் பணத்தையும் இழப்பதைப் பார்த்த பிரான்ஸைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனியே இருக்கும் சோரோவிச்சை பீச்சில் சந்திக்கிறாள். இருவரும் நடனமிடுகின்றனர். அந்தப் பெண்மணி பண இழப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் அளிக்கிறாள். சோரோவிச் சிரித்தவாறே இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தயாரிக்கலாம் என்கிறான்.
இத்துடன் முடிகிறது இந்த உண்மைக் கதை! ஆஸ்திரிய ஜெர்மன் படமான இதில் கார்ல் மார்கோவிக்ஸ் சோரோவிச்சாக நடித்து அனைவரையும் கவர்கிறார். அகஸ்ட் டியல் அடால்ஃப் பர்கராக நடித்துள்ளார்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த டைரக்டர் ருஜோவிட்ஸ்கி எழுதி இயக்கிய இந்தப் படம் 2007இல் வெளியானது. அயல் மொழிப் படங்களுக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றது.
இரண்டாம் உலகப் போர் பற்றிய அனைத்துப் படங்களுமே அற்புதமான படங்கள்தான். உண்மைச் சம்பவங்களில் இருக்கும் உணர்ச்சிப் பிரவாகமும், வீர சாகஸமும், சஸ்பென்ஸும், தியாக உணர்வும், நாட்டுப் பற்றும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
1) Saving Private Ryan (Steven Spielberg, 1998),
2) Das Boot (Wolfgang Peterson, 1981),
3) The Thin Red Line (Terrence Malick, 1998),
4) Schindler’s List (Steven Spielberg, 1993)
5) Ice Cold in Alex (J Lee Thompson, 1958)
6) Casablanca (Michael Curtiz, 1942)
7) Where Eagles Dare (Brian G Hutton, 1968),
8) The Great Escape (John Sturges, 1963)
9) The Dirty Dozen (Robert Aldrich, 1967)
10) The Bridge on the River Kwai (David Lean, 1957 ) ஆகிய பத்துப் படங்கள் தலைசிறந்த உலக மகாயுத்தப் படங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன. ஆனால் "கன்ஸ் ஆஃப் நவரோன்" உள்ளிட்ட இன்னுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படங்களும் இவற்றுக்கு இணையானவையே. அனைத்துமே பார்த்து ரசிக்கப்பட வேண்டியவையே! பெரும் இயக்குநர்களால் நன்கு ஆய்வு செய்து படைக்கப்பட்ட இந்த உலகப் போர்ப் படங்கள் அனைத்தும் தொகுப்புகளாகவே கிடைக்கின்றன என்பதால் வாங்கிப் பார்ப்பது சுலபம்தான்!
உலகப் போர்ப் படங்களை நமது திரைப்பட கலெக்ஷனில் சேர்ப்பது அவசியமே!
அடுத்த வாரம் ‘படித்ததில் பிடித்தது’…
“