உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 1
தமிழனாகப் பிறக்கும் பேறு பெற்ற ஒவ்வொரு தமிழனும், தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு உத்தமர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் ஆவார். (1855-1942) அவரது ‘என் சரித்திரம்’ அற்புதமான தமிழ் உரைநடைக்கு ஒர் எடுத்துக் காட்டு. இந்த நூலைப் படிப்பதால் பல பயன்கள் உண்டு. தமிழைக் காத்து அரிய ஓலைச்சுவடிகளைச் சேகரித்து அவற்றை முறையாக ஆராய்ந்து அதில் உள்ள உண்மைப் பொருளைக் கண்டறிந்து பல அற்புத நூல்களைப் பதிப்பித்த ஒரு தமிழறிஞரின் வாழ்வை அறிந்து கொள்ளும் பேறு இதைப் படிப்பதால் முதல் பரிசாக நமக்குக் கிடைக்கிறது. அடுத்து தமிழின் ஆழத்தையும் அற்புதத்தையும் அறியும் பேறு கிடைக்கிறது. அடுத்து ஜிலு ஜிலுவென்ற தெளிந்த ஓட்டத்தை உடைய தூய பளிங்கு நீர் மானசசரோவரிலிருந்து கங்கை பிரவாகமாக நாடு முழுவதும் பாய்வது போன்ற தமிழ் பிரவாகம் நம்மை பரவசப்படுத்துகிறது.
கவிகளுள் மகாகவி கம்பன். பத்தாயிரம் பாடல்களைப் பாடியவன். அவன் போல் பத்து மடங்கு அதாவது நூறாயிரம் – ஒரு லட்சம் பாடல்களைப் பாடி ‘பத்துக் கம்பன்’ என்ற பெயரைப் பெற்ற மகாவித்துவான திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. அவரின் மாணாக்கரே உ.வே.சா.
தமிழுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மாமேதையின் வீட்டில் ஒரு சிறிய சம்பவம்! அதை அவர் சொற்களாலேயே பார்ப்போம்:
"சென்னையிலிருந்து பைண்டர் நூறு சிந்தாமணி பிரதிகள் வரையில் பைண்டு செய்து ஒரு பெட்டியில் அனுப்பியிருந்தார். அதைப் பிரித்துப் புஸ்தகங்களை எடுத்துக் கோலம் போட்ட ஒரு பலகையின் மேல் வைத்து மாலை சுத்திக் கற்பூர நீராஞ்சனம் செய்து மஞ்சள் நீர் சுற்றி என் தாயார் என் கையில் எடுத்து அளித்து ஆசீர்வாதம் செய்தார். என் தந்தையார் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தார்"
எப்படிப்பட்ட வைபவம்! எப்படிப்பட்ட தாயார்! எப்படிப்பட்ட தந்தையார்! என் சரித்திரம் என்ற நூலில் உ.வே.சா. இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
தனக்குக் குடும்பக் கவலையே இல்லாமல் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டதால் தமிழ்ப் பணியைத் தன்னால் தொடர்ந்து ஆற்ற முடிந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். சங்க நூல்களைச் சேகரித்து அவற்றைப் பதிப்பித்து தமிழர்களுக்கு ஒர் முகவரியைத் தந்தவர் உ.வே.சா. தனது வாழ்நாளில் 91 அரிய நூல்களைப் பதிப்பித்தவர் அவர். சுமார் 3067 ஏட்டுப் பிரதிகளை அவர் சேகரித்தார். அதற்காக அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.
என் சரித்திரத்தில் வரும் சில நிகழ்வுகளை இங்கே நினைவு கூர்வோம்!
அந்நாளில் எல்லா நூல்களையும் பாடம் கேட்டுப் பயில்வதே பழக்கமாக இருந்தது. பெரியபுராணத்தை மகாவித்துவான் விளக்கமாகப் பாடம் சொன்ன போது நடந்த சம்பவம் இது.
"கண்ணப்ப நாயனார் செயலைக் கண்டு சிவகோசரியார் வருத்தமுற்றதாகச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் மேலே படித்தோம். உடனே பிள்ளையவர்கள், "இங்கே சில செய்யுட்கள் இருக்க வேண்டும். சிவபெருமான் கண்ணப்ப நாயனாரது அன்பின் பெருமையைச் சிவகோசரியாருக்கு வெளியிடுவதாக அமைந்துள்ள பகுதியில் சில அருமையான செய்யுட்களைப் பதிப்பிக்காமல் விட்டு விட்டார்கள்" என்று சொல்லித் தம் பெட்டியில் இருந்த பெரியபுராண ஏட்டுப் பிரதியை என்னை எடுத்து வரச்செய்து அதனைப் பிரித்துப் பார்த்தார். அவர் கூறியபடியே அங்கே ஐந்து செய்யுட்கள் காணப்பட்டன. அவற்றைப் படிக்கச் செய்து பொருள் கூறினார். நாங்கள் யாவரும் அந்த உயிருள்ள புஸ்தகசாலையின் ஞாபகசக்தியை அறிந்து வியந்தோம்."
அனைத்துச் செய்யுள்களையும் மனப்பாடமாக அறிந்த பெரும் வித்தகர் பற்றிய அரிய செய்தியைக் கூறும் உ.வே.சா அடுத்துச் சொல்லும் நிகழ்ச்சி நம்மை வேதனை அடையச் செய்கிறது. தமிழன் இப்படி இருக்கலாமா என்று வெட்கமடையச் செய்கிறது.
பிற்பகலில் தொடங்கிய கண்ணப்ப நாயனார் புராணம் இரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவேறியது.
அப்பால் மடத்திலேயே ஆகாரம் செய்து கொள்ளும்படி என் ஆசிரியரைத் தம்பிரான் வற்புறுத்திக் கூறினர். அவர் அவ்வாறே இசைந்து அங்கு உணவு உட்கொண்டார். நான் அதற்குள் என் சாப்பாட்டு விடுதிக்குச் சென்று போஜனம் செய்துவிட்டு வந்தேன்.
ஆகாரம் ஆன பிறகு என் ஆசிரியர் தம்பிரான்களிடம் விடை பெற்றுக்கொண்டு தம் வீடு சென்றார். நானும் அவருடன் சென்றேன். அப்போது அவர், "மடத்தில் ஆகாரம் செய்தமையால் இன்று நெய் கிடைத்தது" என்றார்.
அந்த வார்த்தை என் உள்ளத்தை வருத்தியது. அவர் சில நாட்களாக நெய் இல்லாமல் உண்டு வந்தார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் கையில் இல்லை. குறிப்பறிந்து யாரேனும் உதவினாலன்றித் தாமாக ஒருவரிடம் இன்னது வேண்டுமென்று சொல்லிப் பெறும் வழக்கம் அவரிடம் பெரும்பாலும் இல்லை. இடைவிடாது பாடம் சொல்லி வந்த அவர் நெய் இல்லாமலே உண்டு வருவதை நான் அறிந்தவனாதலால் "இன்று நெய் கிடைத்தது" என்று அவர் கூறும்போது அவர் உள்ளம் எவ்வளவு வெம்பியிருந்ததென்பதை உணர்ந்தேன்.
வறுமையின் கொடுமை எனக்குப் புதிதன்று. அதனால் விளையும் துன்பத்தை அறிவு வந்தது முதலே நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். ஆயினும் பிள்ளையவர்களிடம் அதனை நான் எதிர்பார்க்கவில்லை.
"பெரிய கவிஞர், தக்க பிரபுக்களால் நன்கு மதிக்கப்படுபவர், தமிழுலகமுழுதும் கொண்டாடும் புகழ் வாய்ந்தவர், ஒரு பெரிய சைவ ஆதீனத்துச் சார்பிலே இருந்து வருபவர், சில நாள் நெய் இல்லாமல் உண்டார், ஒரு வேளை கட்டளை மடத்தில் உண்ட உண்வு அவர் நெஞ்சப் புண்ணுக்கு மருந்தாயிற்று" என்ற விஷயங்களை அவரோடு நெருங்கிப் பழகினவரன்றி மற்றவர்களால் அறிய முடியாது. அவரும் அந்நிலையை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
அவருடைய வாழ்க்கையே நிலையற்றதாகத்தான் இருந்தது. "இருந்தால் விருந்துணவு; இல்லாவிட்டால் பட்டினி" என்பதே அக்கவிஞர் பிரானுக்கு உலகம் அளித்திருந்த வாழ்க்கை நிலை. எனக்கு அதனை உணர உணர ஆச்சரியமும் வருத்தமும் உண்டாயின.
உ.வே.சா அவர்கள் வருத்தத்துடன் பதிவு செய்யும் இந்த வார்த்தைகள் தமிழன் எப்படி வாழும் போதே பெரிய கவிஞர்களை இனம் கண்டு கொண்டதில்லை என்பதை நன்கு உணர வைக்கிறது.
பாரதியார் பட்ட சிரமம் போலவே மகா கவிஞரும் வேதனைப் பட்டு வாடியிருக்கிறார்.
– தொடரும்
“