இசைப் பேரரசியின் வாழ்வில் ஒரு சம்பவம்! – 1
இணையத்தில், மின்னஞ்சலில் வந்த ஒரு சம்பவம் படிக்கப் படிக்கப் புல்லரிக்க வைத்தது. அதுதான் கீழே தரப்படுகிறது – தமிழில்!
அது 1979ஆம் ஆண்டில் ஒருநாள். திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் எக்ஸிகியூடிவ் ஆபிசராக இருந்த பி.வி.ஆர்.கே பிரசாத்திற்குக் காஞ்சி மஹா பெரியவாளிடமிருந்தும் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களிடமிருந்தும் அவசரத் தந்திகள் வந்தன. தந்தியின் வாசகம்: "சீரிய தம்பதிகளான எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மி – சதாசிவம் பெரும் பணக் கஷ்டத்தில் உள்ளனர். அவர்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது. இந்தச் சங்கடத்திலிருந்து மீள்வதற்கு உடனடியாக ஏதேனும் ஒரு வழி செய்யவும்!"
மகோன்னதமான இரு அருளாளர்களிடமிருந்து வந்த இந்தத் தந்தி யாரையுமே அசைத்து விடும் இல்லையா? பிரசாத்தும் இதற்கு விதிவிலக்கு அல்ல! அருளாளர்கள் அதை அனுப்பியதால் ஏற்பட்ட பிரமிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் தந்தியின் வாசகம்தான் அவரை நிஜமாகத் திகைக்க வைத்தது!
எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மிக்கு என்ன நேர்ந்தது? எதற்காகப் பணக்கஷ்டம்? அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காகப் பிரசாத் ஏதேனும் செய்ய வேண்டும்?
எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மிக்கோ லக்ஷக்கணக்கில் ரசிகர்கள் உலகெங்கும் உள்ளனர். அவருக்கு ஒரு கஷ்டம் என்றால் தங்கள் உயிருக்கும் மேலாக அவரை நேசிக்கும் ரசிகர்கள் சும்மாவா இருப்பார்கள்? அவருக்கு ஒரு விஷயம் இப்போது புரிய வந்தது. சீரிய தம்பதிகளான அவர்கள் ஒருபோதும் மற்றவரிடமிருந்து வரும் உதவியை ஏற்க மாட்டார்கள். திருமலா திருப்பதி தேவஸ்தானம்தான் ஏதேனும் செய்ய முடியும்!
திருமலா திருப்பதி தேவஸ்தானம் முன்பு ஒரு சமயம் இதே போல வெற்றிகரமாக உதவி இருக்கிறது. இந்த முறையும் அதே போல்தான் ஏதாவது செய்ய வேண்டும்!
இதைத்தான் இரு அருளாளர்களும் பிரசாத் செய்ய வேண்டுமென சூசகமாக அருளியிருக்கிறார்கள்.
ஆனால், இது சுலபமான பணி அல்ல என்பது பிரசாத்திற்கு நன்கு புரிந்திருந்தது! முதலில் அவர்களுக்கு என்ன கஷ்டம் என்று தெரிய வேண்டும்…
பிரசாத் உடனே விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். சென்னையில் அவருக்கு நெருக்கமானவர்களை விசாரிக்க ஆரம்பித்தார். விவரம் ஒருவாறாகப் புரிந்தது. கல்கி ஸ்தாபனத்தில் ஒரு நெருக்கடி! எம்.எஸ் தம்பதியினர் கல்கி எஸ்டேட்டை விற்று விட்டு வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் குடியேறி விட்டார்கள். அந்தக் காலத்தில் அது ஒரு ஒதுக்குப்புறமான பகுதி!
சதாசிவம், கல்கி வாரப்பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்! அதில் ஒரு பெரும் நஷ்டம் ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்கள் எஸ்டேட்டை விற்று விட்டு, எல்லாக் கடனையும் அடைத்து விட்டுச் சிறிய வீட்டில் குடியேற நேரிட்டு விட்டது!
எம்.எஸ்-ஸின் சிறந்த ரசிகரான பிரசாத்திற்குப் பெரும் துக்கம் ஏற்பட்டது. கண்களில் வழிந்த நீரைத் துடைத்து விட்டுக் கொண்டு அவரது அலுவலகத்தில் இருந்த வெங்கடாசலபதியின் படத்தின் முன்னர் பிரார்த்தனை புரிந்தார் "ஓ! பகவானே! ஸ்வாமி வெங்கடேஸ்வரா!
ஆழ்ந்த பக்தியுடன் உன்னுடைய பஜனையை வாழ்நாள் முழுவதும் உலகெங்கும் செய்வதன் மூலம் இந்த அரிய பெண்மணி உன்னுடைய சேவையைச் செய்து வந்துள்ளார். அவரது பணி திறம்பட நிறைவேற சதாசிவம் உறுதுணையாக இருந்து வந்திருக்கிறார்.
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அவரது கச்சேரிக்கு அவரால் கேட்க முடியும் என்றாலும் அவர் ஒருபோதும் அப்படிக் கேட்டதில்லை. கொடுத்ததை வாங்கிக் கொள்வதே அவரது சுபாவம். அது மட்டுமல்ல, வந்த பணத்தில் பெரும் பகுதியைத் தர்ம காரியங்களுக்கே அவர் செலவழித்தார்.
அப்படிப்பட்டவருக்கு வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் இப்படி ஒரு சோதனை ஏன் ஸ்வாமீ?!! இது அநியாயம் என்று உனக்குத் தெரியவில்லையா! கடவுளிடமிருந்து கூடத் தவறான வழியில் ஒன்றையும் பெற விரும்பாத அபூர்வத் தம்பதி அவர்கள்! இனி அவர்களால் எப்படிச் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும்! எனக்குப் பெரும் துயரமாக இருக்கிறதே! ஸ்வாமி வெங்கடேஸ்வரா! நீதான் எனக்கு வழிகாட்டி அருள வேண்டும்!"
இப்படி மனமுருகப் பிரார்த்தித்தார் பிரசாத்.
பின்னர் உடனடியாகத் திருமலா திருப்பதி தேவஸ்தான போர்டின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். எம்.எஸ்ஸிற்கு என்ன செய்ய முடியும் என்று குழுமியிருந்த நிபுணர்களிடம் வினவினார். விஷயத்தைக் கேட்டு அனைவரும் மிகவும் வருத்தம் அடைந்தனர். அதே சமயம் அவர்கள் "ஸார்! அவர் நமது திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான். அவருக்கு உரிய சலுகைகளையும் ஒரு சன்மானத்தையும் பெற்று வருகிறார். அவருக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பமும். ஆனால் நாமோ அறநிலையத்துறை அமைச்சகத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள். தனித்து நம்மால் எந்த முடிவையும் எடுக்க முடியாது"" என்று தெளிவாக நிலைமையை எடுத்துக் கூறினர்.
பிரசாத் குழம்பிப் போனார். அன்றைய மாலை நேரத்தில் வழக்கம் போல வெங்கடேஸ்வரனைத் தரிசிக்கச் சென்றார். தரிசனம் முடிந்த பின்னர் பிரதான வாயிலிலிருந்து வெளியேறியவர், கோவிலுக்கு முன்னால் பஜனைப் பாடல்களைப் பாடித் துதிக்கும் எளிமையான பக்தர்கள் சிலர் பாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். யாரோ தடுத்து நிறுத்துவதைப் போல அவர் அந்த இடத்திலேயே சில நிமிடங்கள் நின்றார். அற்புதமாகப் பாடும் அந்த நாடோடிப் பாடகர்களின் இசை அவரை ஈர்த்தது.
சில நிமிடங்கள் கழிந்தன. பிரசாத்திற்குப் புன்சிரிப்பு வந்தது. ஒரு பெரும் பாரம் நீங்கிய உணர்வு ஏற்பட்டது. அந்தக் கணம் அவர் மனதில் அபாரமான எண்ணம் ஒன்று உதித்தது. அந்த எண்ண விதை விருட்சமாகி, எம்.எஸ்ஸின் புகழைப் புதிய உயரத்திற்கு ஏற்றிப் பின்னால் அவர் பாரத ரத்னா பட்டத்தைப் பெற வழி வகுத்தது.
அந்த எண்ணம் சரிதானா என்று யாரிடம் கேட்பது?
-தொடரும்…
“