‘எ ப்யூட்டிஃபுல் மைண்ட்’
ஜான் போர்பஸ் நாஷ் (பிறப்பு 1928 ஜூன் 13). ஒரு பிரபலமான நோபல் பரிசு பெற்ற கணித மேதை. கேம் தியரி, டிபரன்ஷியல் ஜாமெட்ரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவரது பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. நம் அன்றாட வாழ்வில் நம்மைக் கட்டுப்படுத்தும் சக்திகளைப் பற்றிய இவரது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் சந்தைப் பொருளாதாரமே இன்று நடக்கிறது. பொருளாதார அறிவியல் நோபல் மெமோரியல் பரிசை ரெய்ன்ஹார்ட் செல்டென் மற்றும் ஜான் ஹர்சன்வி ஆகியோருடன் இவர் பகிர்ந்து கொண்டார்.
யாரையுமே நம்ப முடியாததோடு, யாரைக் கண்டாலும் பயப்படும் ஒரு விதமான உளச்சிதைவு நோயால் பீடிக்கப்பட்ட மேதை நாஷ்! இவரது வாழ்க்கை வரலாற்றை சில்வியா நாஸர் ‘எ ப்யூட்டிஃபுல் மைண்ட்’ என்ற நூலில் சுவைபட விவரித்துள்ளார். சிறந்த கணித மேதையான இவர் 1956இல் எலிப்டிக் பார்ஷியல் டிபரன்ஷியல் ஈக்வேஷனில் ஒரு தேற்றத்தை நிரூபணம் செய்தார். ஆனால் இத்தாலியக் கணித மேதையான என்னியோ டி ஜியார்ஜி என்பவர் இவருக்கு இரண்டு மாதங்கள் முன்னால் அதை நிரூபித்து விட்டார். இதனால் மனம் உடைந்து போன நாஷ் பெரும் மனச்சோர்வுக்கு ஆளானார்.
1951இல் நாஷ் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணிதத் துறையில் பணியாற்றச் சென்றார். அங்கு இயற்பியல் கற்க வந்த மாணவியான அலிசியா லோபஸ் ஹாரிஸனை மணந்தார். ஆனால் மனச்சிதைவு நோய்க்கு ஆளான நாஷை அவர் 1957இல் மருத்துவமனையில் சேர்த்தார். ஒரு ஆண் குழந்தை இருவருக்கும் பிறந்தது. 1963இல் அலிசியாவை விவாகரத்து செய்த நாஷ் மீண்டும் அவரை 2001 இல் மறுமணம் புரிந்து கொண்டார். இப்போது நாஷ் நியூஜெர்ஸியில் வசித்து வருகிறார்.
2002ஆம் ஆண்டு பி.பி.எஸ் (PBS) இவர் வாழ்க்கையைச் சித்தரிக்கும் டாகுமெண்டரி படமான ‘எ பிரில்லியண்ட் மேட்னெஸ்’ என்ற படத்தை எடுத்தது.
2001ஆம் ஆண்டு ஹாலிவுட் படமான ‘எ ப்யூட்டிஃபுல் மைண்ட்’ இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வெளியானது. 135 நிமிடங்கள் ஒடும் இந்தப் படம் 313 மில்லியன் டாலரைச் சம்பாதித்தது. நான்கு அகாடமி விருதுகளை வென்றது. சிறந்த படம், சிறந்த டைரக்டர், சிறந்த திரைக்கதை, சிறந்த உதவி நடிகை ஆகிய நான்கு விருதுகளைப் பெற்றது இந்தப் படம். இன்னும் நான்கு விருதுகளுக்கும் இது பரிந்துரைக்கப்பட்டிருந்தது!
ரான் ஹோவர்ட் இயக்கிய இந்தப் படத்தில் நாஷ் பாத்திரத்தைத் திறம்பட நடித்து உலகையே அசத்தியவர் ரஸ்ஸல் க்ரோ. அலிசியாவாக ஜெனிபர் கனாலி நடித்துள்ளார்.
பிறவி மேதையான ஜான் நாஷின் இளம்பருவ வாழ்க்கையில் ஆரம்பிக்கிறது படம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி இருக்கிறது. இளம்பெண்கள் கூட்டத்தில், ஆபாசமான ஜோக்குகளையோ அவர்களைக் கவர அசட்டுத்தனமான சேஷ்டைகளையோ செய்யாமல் அவர்களைக் கணித உத்திகளின் மூலம் எப்படி அவர் கையாளுகிறார் என்பது சுவாரசியமான காட்சி. அவர்களின் நன்மதிப்பை அவர் பெறுவதே அவரது கணித மேதாவித்தனத்திற்கு அத்தாட்சி. அடுத்து, அவருக்குக் கணிதத் தீர்வுகள் பேப்பரிலிருந்து தாவிக் குதித்து வருவதை டைரக்டர் திறம்பட இயக்கியதைப் பார்க்கலாம். குறியீடுகள் போர்டு முழுவதும் நிரம்பிக் கிடக்க, அதில் மறைந்து கிடக்கும் ரகசியச் சங்கேதச் செய்தியைக் கண்டுபிடிக்குமாறு நாஷிடம் கூறப்படவே, போர்டில் உள்ள நூற்றுக்கணக்கான குறியீடுகளை வெவ்வேறு விதமாக அவர் மூளை அலசி ஆராய்ந்து சிக்கென்று ரகசியச் செய்தியைக் கண்டுபிடித்து எல்லோரையும் அசத்தும் காட்சியில் ரசிகர்களான நாமும் அசந்து விடுகிறோம்.
மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்ட படத்தில் ஏராளமான தவறுகளும் உள்ளன. மேலைநாட்டு ரசிகர்களில் பலர் வெகு சீக்கிரமே அவற்றைக் கண்டுபிடித்து உலகிற்குப் பறைசாற்றி விட்டனர்.
அவற்றுள் சில – ஒரு காட்சியில் டைமக்ஸ் கடிகாரம் வருகிறது. இது தவறு. சிம்ப்ளெக்ஸ்தான் சிங்க்ரனைஸ்ட் சுவர்க் கடிகாரத்தைத் தயாரிக்கும் கம்பெனி!
பென்டகனிலிருந்து நாஷ் வரும்போது அமெரிக்கக் கொடி காண்பிக்கப்படுகிறது. இது தவறான கொடி. இதில் இப்போதுள்ள 50 நட்சத்திரங்கள் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் 1950-களில் ஐம்பது நட்சத்திரங்கள் ஏது அமெரிக்கக் கொடியில்!
நாஷின் மனைவி கோப்பையில் இருந்த தண்ணீரைக் குடித்து விட்டு அதைக் கண்ணாடி மீது வீசி எறியும் காட்சியில் ஒரு தவறு இருக்கிறது. தண்ணீர் முழுவதும் குடித்த பின்னர் கோப்பை காலியாக இருக்க வேண்டும். ஆனால் கண்ணாடி மீது வீசி எறிகையில் கோப்பை நீர் நிரம்பியதாகக் காண்பிக்கப்படுகிறது.
நோபெல் என்ற வார்த்தை நாஷ் பரிசைப் பெறும்போது நோபிள் என்று உச்சரிக்கப்படுகிறது. இப்படிப் பல பிழைகள்!
அத்தோடு, நாஷின் நிஜ வாழ்க்கைக்கும் படத்தில் சித்தரிக்கப்படும் வாழ்க்கைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் திரைக்கதை அமைப்பிற்கேற்ப சில மாறுதல்கள் அவசியமே என்று தயாரிப்பாளர் சொல்லலாம்.
படத்தில் வரும் நறுக்குத் தெறித்தாற்போல உள்ள பல வசனங்கள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன. மாதிரிக்குச் சில:-
நாஷ்: Classes will dull your mind, destroy the potential for authentic creativity.
நாஷ்: There has to be a mathematical explanation for how bad that tie is.
நாஷ், அலிசியாவைப் பார்த்துக் கூறுவது:- What truly is logic? Who decides reason? My quest has taken me to the physical, the metaphysical, the delusional, and back. I have made the most important discovery of my career – the most important discovery of my life. It is only in the mysterious equations of love that any logic or reasons can be found. I am only here tonight because of you .
படத்தில் வரும், தானே உருவாக்கிக் கொண்ட கற்பனை மனிதனைக் கண்டு நாஷ் பயப்படுவது, மனைவி அலிசியாவுடன் உள்ள உணர்ச்சி மிக்க தருணங்கள் உள்ளிட்ட காட்சிகள் அனைத்தும் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளன.
பார்க்க வேண்டிய படங்களின் வரிசையில் ‘எ ப்யூட்டிஃபுல் மைண்ட்’ நிச்சயம் இடம் பெறும்!
அடுத்த வாரம் "படித்ததில் பிடித்தது"…
“