பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (14.3)

பூதான இயக்கம் கண்ட புனிதர்! (3)

வினோபாஜியின் வாழ்வில் ஏராளமான அற்புதச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று, அவர் கடவுளுடன் பேசியது. 1951ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி. தெலிங்கானாவில் போச்சம்பள்ளியில் அவரிடம் ஹரிஜன்கள் நிலம் கேட்ட அன்று இரவு அவருக்கு உறக்கம் வரவில்லை. சாதாரணக் கணக்கின்படிப் பார்த்தாலும் கூட நிலமற்றவருக்கு நிலம் வேண்டும் என்றால் 5 கோடி ஏக்கர் நிலம் வேண்டுமே! அவ்வளவு நிலத்தைக் கேட்டால் யார் கொடுப்பார்கள்! அவர் சிந்தனை சுழன்றது. உள்முகமாக ஆழ்ந்தார். கடவுளிடம் நேருக்கு நேர் பேச ஆரம்பித்தார் – சக மனிதர் ஒருவருடன் பேசுவது போல!

Vinoba Bhavaeகடவுள் சொன்னார்: "நீ இதற்குப் பயந்தால் அஹிம்சை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை விட்டு விடு! நம்பிக்கையோடு கேள்! ஒரு குழந்தையின் வயிற்றில் பசியை வைத்தவன் தாயின் மார்பகங்களில் பாலையும் வைத்திருக்கிறான் அல்லவா? அவன் தனது வேலையைப் பாதியில் விடுபவன் அல்ல!"

வினோபாஜி பூதான இயக்கத்தை ஆரம்பித்தார்!

டிசம்பர் 17, 1952. அவருக்கு மலேரியாக் காய்ச்சல். மரணம் தழுவ வந்துவிட்டது போன்ற நிலை என்றே அவர் நினைத்தார். தன்னைச் சுற்றி இருந்தோரிடம் தன்னை உட்கார வைக்குமாறு வேண்டினார். ஆழ்ந்த தியானத்தில் அற்புதமான நிர்விகல்ப சமாதியை அவர் அனுபவித்தார். இதற்கு முன்னர் இப்படி ஒரு உயரிய நிலையைத் தான் ஒருபோதும் அடைந்ததில்லை என்று அவர் பின்னர் சொன்னார்.

1970 அக்டோபர் மாதம் 6ஆம் தேதி வார்தாவில் அவர், இனி தான் எங்கும் செல்லப் போவதில்லை என்றும் ஒரே இடத்திலேயே இருக்கப் போவதாகவும் அறிவித்தார். இதை ஜைனர்கள் ‘ஸ்தானக் வாசம்’ என்பர். ஹிந்து மதத்திலோ இதை ‘க்ஷேத்ர சந்யாசம்’ என்பர். இதற்கு நவீன உலகில் உள்ள ஆங்கில வார்த்தை detention camp! உள்ளுணர்வில் உதித்தது இது! இது முதல் அனைவரும் வினோபாஜியைத் தரிசிக்க வார்தா செல்வதை வழக்கமாகக் கொண்டனர்.

நாளாக நாளாக அவர் உள்முகமாகத் திரும்பினார். ஏழு லட்சம் இந்தியக் கிராமங்களை முன்னேற்ற ஊருக்கு ஒரு சேவா வீரர் வேண்டுமென்றாலும் கூட ஏழு லட்சம் பேர் வேண்டும். அடிக்கடி ஞானதேவர் சொல்லிய வார்த்தைகளை வினோபாஜி அனைவரிடமும் கூறலானார். அது இதுதான்: "அரசியல் என்பது பிசாசுகளின் விஞ்ஞானம்!" அதிலிருந்து ஒதுங்கி ஆக்கப்பூர்வமான பணிகளில் அனைவரும் ஈடுபடவேண்டும் என்று உள்ளார்ந்து வினோபாஜி விரும்பினார்.

1975ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் கிறிஸ்துமஸ். அன்றிலிருந்து ஒரு வருடம் மௌனத்தைக் கடைப்பிடித்தார்.

1978இல் மரணத்தின் அழைப்பிற்காகக் காத்திருக்கிறேன் என்றார் அவர்.

1981 செப்டம்பர் 11. 86 வயது முடிந்து விட்டது. தன் கடமை முடிந்துவிட்டது என்ற திருப்தியை அவர் அடைந்தார்.

1982 நவம்பர் 5ஆம் நாள். வினோபாஜிக்கு லேசான ஜுரம், மாலையில் சுவாசிப்பது கடினமாக ஆனது. இதயத் துடிப்பு சீரற்ற நிலைமையில் இருந்தது. டாக்டர்கள் அவரைக் கவனித்துவிட்டு அவருக்கு மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) வந்திருப்பதைத் தெரிவித்தனர். 7ஆம் தேதியிலிருந்து அவர் எதையும் – நீர் உட்பட எதையும் – எடுத்துக் கொள்ளவில்லை. 14ஆம் தேதி நிலைமை மோசமானது. 15ஆம் தேதி காலை பிரான்ஸிலிருந்து ஆசிரமத்திற்கு வந்த ஒரு பெண் சிறிது தண்ணீராவது அருந்துமாறு வினோபாஜியை வேண்ட, அவரோ "அதை நீயே குடி!" என்று சிரித்தவாறே சைகையால் சொன்னார். அருகிலிருந்த மரப்பலகையில் ‘ராம ஹரி’ என்று எழுதி இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். "ராமஹரி!" என்று சுவாசித்தவாறே கண்களை மூடி இருந்த நிலையில் இரவு ஒன்பதரை மணிக்கு அவர் ஆவி பிரிந்தது.

"இதுதான் முடிவு. ஜெய் ஜகத்! உங்கள் அனைவருக்கும் என் நமஸ்காரங்கள். ராமஹரி!" – அடிக்கடிக் கூட்டங்களின் இறுதியில் சொல்லும் வார்த்தைகளை அவர் கூறுவது போல அனைவரும் உணர்ந்தனர்.

மகாத்மா காந்தியடிகளை ஒருவர் அஹிம்சை இயலைப் பற்றி ஒரு புத்தகம் எழுதச் சொன்ன போது அதை வாழ்ந்து காட்டுவதே தன் பணி என்று சொன்னார். அவரால் அதை எழுத முடியாவிடில் அதை எழுதக் கூடிய தகுதி வாய்ந்த மூன்று பேரைச் சொல்லுமாறு கேட்டபோது அவர் வினோபாஜி, கிஷோரிலால் மஷ்ருவாலா, ஸ்ரீகாகா கலேல்கர் ஆகிய மூவரின் பெயர்களைச் சொல்லி விட்டு "வினோபாஜி அவர்களோ ஒவ்வொரு மணியிலும் செய்ய வேண்டிய பணியைத் திட்டமிட்டுச் செய்பவர். அவரால் இதை எழுத முடியாது. உலகம் சாஸ்திரங்களுக்காக ஏங்கவில்லை. உண்மையான செயலுக்காகவே ஏங்குகிறது" என்றார்.

ஸ்தித ப்ரக்ஞனாகவும் கர்மயோகியாகவும் கீதை சொன்னபடி வாழ்ந்த வினோபாஜி மக்களுக்கு இறுதியில் சொல்ல விரும்பிய ஒரே ஒரு விஷயம் இதுதான்: "நான் உங்களுக்கு ஒரு மிக முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். என்னை மறந்து விடுங்கள். ஆனால், கீதையை நினைவிலிருத்துங்கள்!"

அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்த வினோபாஜியின் வாழ்க்கை வரலாறு உத்வேகம் ஊட்டும் ஒன்று. 225 பக்கங்கள் உள்ள Moved by Love என்ற ஆங்கில நூலைப் படிக்க விரும்புபவர்கள் இணையத்தில் நிகழ்நிலையில் – ஆன்லைனில் படிக்கலாம். அதைக் கட்டணமின்றி டவுன்லோடிங் எனப்படும் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்.

Moved by Love (The Memoirs Of Vinoba Bhave) படிக்க / பதிவிறக்கம் செய்ய இணையத்தள முகவரி :-
www.mkgandhi.org/movedbylove/preface.htm

**********************

அடுத்த வாரம் ‘பார்த்ததில் ரசித்தது’…

About The Author