பூதான இயக்கம் கண்ட புனிதர்! – 1
பூதான இயக்கம் கண்ட புனிதர் வினோபா பாவே. அவர் சுயசரிதம் எதையும் எழுதவில்லை. ஆனால், அவர் அருகில் இருந்த சிஷ்யை காளிந்தி ‘Moved by love’ என்ற அற்புதமான புத்தகத்தை எழுதியுள்ளார். தனது 87 வருட வாழ்க்கையில் வினோபாஜி ஏராளமான கூட்டங்களில் பேசியுள்ளார். அவற்றில் தன்னைப் பற்றி உதாரணமாகச் சொல்லும்போது சில விவரங்களைக் கூறியுள்ளார். இதையெல்லாம் தொகுத்து இந்தப் புத்தகம் தொகுப்புப் புத்தகமாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பெரிய மனிதரின் சரித்திரம் என்பதால் தொட்ட இடமெல்லாம் புனிதம் தென்படுகிறது.
அவரது வாழ்க்கை வரலாற்றின் சில துளிகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
மஹராஷ்டிரத்தில், கொலாபா மாவட்டத்தில், ககோடே என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார் வினோபாஜி. அவரது தாயார் எப்போதும் இறைவன் நாமத்தை ஜெபித்த வண்ணமாகவே இருப்பார். வினோபாஜியின் வாழ்க்கையை உருவாக்கியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. "வின்யா! எப்போதும் கொடுக்க வேண்டும். பின்னர்தான் சாப்பிட வேண்டும்" என்ற அன்னையின் வாக்குதான் அவரை பூதான இயக்கத்தின் நாயகனாக ஆக்கியதோ என்னவோ! அவரது தந்தையோ ஒரு யோகியின் வாழ்க்கையை வாழ்ந்தவர். காந்திஜியின் கொள்கைகளால் கவரப்பட்டவர்.
1916ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி அகமதாபாத் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார் வினோபாஜி. அங்கிருந்த ஆசிரமத்திற்கு அவர் சென்றபோது காந்திஜியிடம் புதிதாக வந்தவரைப் பற்றி விவரம் தெரிவிக்கப்பட்டது. "அவரை என்னிடம் அனுப்புங்கள்" என்றார் மகாத்மா. வினோபாஜி அவரிடம் சென்றார். அப்போது மகாத்மா, கறிகாய்களை நறுக்கிக் கொண்டிருந்தார். இது வினோபாஜிக்கு வியப்பாக இருந்தது. ஒரு பெரும் தேசியத் தலைவர் எதற்காகக் கறிகாய்களை வெட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவருக்குப் புரியவில்லை. ஆனால் பாபுஜியோ கத்தியை வினோபாஜியிடம் கொடுத்துக் கறிகாய்களை நறுக்கச் சொன்னார். அதுதான் அவர் காந்திஜியிடம் பெற்ற முதல் பாடம்! அடுத்து, "நீ மிகவும் பலஹீனமாக இருக்கிறாய். தன்னை அறிய விரும்பும் எவனும் பலஹீனனாக இருக்கவே கூடாது" என்றார் மகாத்மா. அதுதான் அவர் கற்ற இரண்டாம் பாடம். "சேவை செய்ய விரும்பினால் நீ ஆசிரமத்திலேயே தங்கலாம்" என்று மகாத்மா கூறவே வினோபாஜி அங்கு தங்கலானார். உள்ளும் புறமும் ஒத்திருந்த ஒரு அதிசய புருஷரைக் கண்ட ஆனந்தம் அவருக்கு ஏற்பட்டது.
1921 முதல் 1951 முடிய முப்பது ஆண்டுகள் கல்வி மற்றும் ஆக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் வினோபாஜி. தீவிர அரசியலில் இறங்க அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. சிறைக்குச் சென்ற நாட்களைத் தவிர மற்ற நாட்கள் எல்லாம் கல்விப் பணிதான்!
மகாத்மா கொடுத்த பணிகளை எல்லாம் திறம்படச் செய்தார்.
ஒரு மனிதனுக்கு, நல்ல முறையில் வாழ மாதம் ஆறு ரூபாய் போதும் என்ற தீர்மானத்திற்கு வந்த அவர் தினமும் நூல் நூற்க ஆரம்பித்தார். அதில் வரும் சொற்பத் தொகை அவருக்குப் போதுமானதாக இருந்தது.
காந்திஜியின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் அவர் வாழ்க்கை முழுவதும் கழிந்தது. அந்த மோசமான செய்தி – காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி – அவர் இருந்த பௌனார் ஆசிரமத்தை அடைந்தது கொலை நடந்த இரண்டு மணி நேரம் கழித்து. அவர் முதல் இரு நாட்கள் அமைதியாக இருந்தார். மூன்றாம் நாள் அவரால் தாங்க முடியவில்லை. உடைந்து போனார். மாலைக் கூட்டத்தில் சேவாஸ்ரமத்தில் அவர் கண்ணீர் மழை பொழிவதைக் கண்டோர், "என்ன வினோபாஜி, நீங்களுமா…?" என்று வினவினர்.
வினோபாஜி கூறினார்: "ஆமாம் சகோதரரே! எனக்கும் இதயத்தைக் கொடுத்திருக்கின்ற அந்தக் கடவுளுக்கு நன்றி! ஆனால் ஒன்று, மகாத்மா உயிருடன் இருந்தபோது அவரை நேரில் பார்க்க வேண்டுமென்றால் அதிக நேரம் பிடித்தது. இப்போது என்றால் கண்ணை மூடிக் கொண்டாலேயே அவரை அணுக முடிந்தது!" என்றார் அவர்!
துளஸிதாஸர் கூறுகிறார்: "ஏராளமான மஹரிஷிகள் ராமரைப் பிறப்புதோறும் வணங்கியதுண்டு. ஆனால் அவர்கள் இறக்கும்போது ராம நாமத்தை அவர்கள் ஸ்மரிக்கவில்லை" என்று! ஆனால் காந்திஜியோ தன் உயிரை விடும்போது ‘ஹே! ராம்’என்று ஸ்மரித்தல்லவா உயிரை விட்டார்!
காந்திஜியின் வார்த்தையை அவர் வேதமாகவே மதித்தார் என்பதற்கு ஒரு சிறிய சம்பவம் உதாரணம். காந்திஜி இருந்த இடத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தபோது வினோபாஜி இருந்தார். மகாத்மாவிடமிருந்து, தன்னை உடனடியாகச் சந்திக்குமாறு அவருக்கு அழைப்பு வந்தது. சாதாரணமாக, காந்திஜியை வினோபாஜி சந்திப்பதே இல்லை. அவர் பணியில் மூழ்கிக் கிடப்பவர் என்பதால் காந்திஜியும் அவரை அனாவசியமாகத் தொந்தரவு செய்வதில்லை. வருடத்திற்கு இரண்டு மூன்று கடிதப் பரிமாற்றத்தோடு சரி. ஆனால் அண்ணலிடமிருந்து அழைப்பு என்றவுடன் வினோபாஜி ஓடோடிப் போனார்; சந்தித்தார்.
"உங்களுக்கு நேரம் இருக்குமா இல்லையா என்று எனக்குத் தெரியாது. எனக்கு உங்கள் உதவி தேவையாக இருக்கிறது. தனிநபர் சத்யாக்ரஹத்தைத் தொடங்க வேண்டும். அதற்காக நீங்கள் தயாராக வேண்டும். மற்ற வேலைகள் ஏதேனும் இருந்தால் அதிலிருந்து விடுபட வேண்டும்" என்றார் அண்ணல். சிரித்தார் வினோபாஜி.
"உங்கள் அழைப்பு எமராஜனிடமிருந்து வந்த அழைப்பிற்குச் சமம். நான் திரும்பிப் போக வேண்டிய அவசியமே இல்லை. இப்போதே இங்கிருந்தே நான் ரெடி!" என்றார் அவர். மகாத்மா கவலையை விட்டார். அப்படி ஒரு பரம பக்தி அண்ணலின் மீது வினோபாஜிக்கு!
(தொடரும்)
“