‘ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்’
2009ஆம் ஆண்டு வெளியான ஒரு வித்தியாசமான படம் ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்’. இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் ஓடும் படம் சற்று நீளமானதுதான். விறுவிறுப்பான கதை என்பதால் நேரம் போவதே தெரியாது.
அமெரிக்க எழுத்தாளரான டான் ப்ரவுன், 1993ஆம் ஆண்டு தஹிதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது சிட்னி ஷெல்டன் எழுதிய ‘தி டூம்ஸ் டே கான்ஸ்பிரஸி’ என்ற நாவலைப் படித்தார். அதனால் உத்வேகம் பெற்று ‘டிஜிடல் ஃபோர்ட்ரெஸ்’ என்ற நாவலை எழுதினார். பிறகு ‘ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்’ என்ற நாவலை எழுதினார். அவரது முதல் மூன்று நாவல்கள் அவ்வளவாகப் புகழ் அடையாத நிலையில் அவரது நான்காவது நாவலான ‘தி டாவின்சி கோட்’ பெரும் வெற்றியை அடைந்து, நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லர் பட்டியலில் இடம் பெற்றது. 2009ஆம் ஆண்டு முடிய அந்த நாவல் 810 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது!
ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸின் கதை பழைய கால இரகசிய சங்கங்களின் தொடர்பை அடிப்ப்டையாகக் கொண்டது. குறியீடு அல்லது சின்னங்களை ஆராயும் ஆராய்ச்சியாளர் (symbologist) ராபர்ட் லாங்டன் அதில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர். அவரது சேவையை வாடிகன் நாடுவதுதான் கதை!
‘இல்லுமினாடி’ என்றொரு சக்தி வாய்ந்த ரகசிய சங்கம், விஞ்ஞானத்துக்கு எதிராக சர்ச் செய்த பாவத்திற்காக அதைப் பழி வாங்கத் திட்டமிடுகிறது. வாடிகனின் முக்கியமான இடத்தில் ஒரு வெடிகுண்டை- டைம் பாமை- வைக்கிறது. அப்போது புது போப்பைத் தேர்ந்தெடுக்கும் நேரமும் கூட! லாங்டன், இத்தாலியப் பேராசிரியையான விட்டோரியா வெட்ராவ் என்ற அழகியுடன் இணைகிறார். நேரமோ குறைவு. இல்லுமினாடியின் ரகசியச் சதியைக் குறியீடுகளின் மூலம் கண்டுபிடித்து, புதிர்களை அவிழ்த்து, சதியை முறியடிக்க வேண்டும். டைம் பாமை வெடிக்காமல் செய்ய வேண்டும். முடியுமா?
லாங்டன் பாத்திரத்தில் டாம் ஹாங்க்ஸ். விட்டோரியா பாத்திரத்தில் ஆவ்லெட் ஜூரர். டைரக்டரோ ரான் ஹோவர்ட்! கலக்குகிறார்கள்!
வாடிகனில் உள்ளவை ரகசிய அறைகள் என்பதால்தான் போலும், மணிரத்னம் பாணியில் ஒரே இருட்டில் கதை வேகமாக நகர்கிறது! நறுக்குத் தெறித்தாற் போலப் பளீர் பளீர் வசனங்கள்!
மாதிரிக்கு ஒன்று:-
Camerlengo Patrick McKenna: Do you believe in God, sir?
Robert Langdon: Father, I simply believe that religion…
Camerlengo Patrick McKenna: I did not ask if you believe what man says about God. I asked if you believe in God.
Robert Langdon: I’m an academic. My mind tells me I will never understand God.
Camerlengo Patrick McKenna: And your heart?
Robert Langdon: Tells me I’m not meant to. Faith is a gift that I am yet to receive.
போப்பைத் தேர்ந்தெடுக்கும் நாள் என்பதால் ஒரு சஸ்பென்ஸ்!
புராதனச் சின்னங்கள் என்பதால் ஒரு மர்மம் வேறு. (‘இல்லுமினாடி’ என்ற வார்த்தையைத் திருப்பிப் பார்த்தாலும் அதே வார்த்தைதான் வரும்!)
ஃப்ரீமேஸன் சங்கம் என்ற ரகசிய சங்கம் பற்றித் தெரியாதவர்கள் அதைப் பற்றி அறிய ஒரு வாய்ப்பு இந்தக் கதையில் உருவாகிறது.
ரோஸிக்ரூஸியன் சங்கம் போன்ற பல ரகசிய சங்கங்கள் பல நூற்றாண்டுகளாக இயங்கி வருவதை நாம் அறிவோம். அவற்றில் பிரபலமான அறிஞர்களும், விஞ்ஞானிகளும், இலக்கியவாதிகளும், ராஜதந்திரிகளும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். ஆக்கப்பூர்வமான விஷயங்களை அதி ரகசியமாகச் செய்வது அவற்றின் வழக்கம். ஆனால் இல்லுமினாடி என்ற ரகசிய சங்கமோ தீவிர வன்முறையைக் கொண்டு கிறிஸ்தவத்தை அழிக்க முற்படுகிறது.
லாங்டன் தீவிரமாக ஆராய்ந்து ‘இல்லுமினாடி’ சங்கத்தின் சதியை முறியடித்து, சர்ச்சைக் காப்பாற்றுகிறார்.
ஒரு பிணைக்கைதி எரிக்கப்படுவது, ஹெலிகாப்டர் வானில் சுழன்று வருவது, சர்ச்சில் ஆய்வு செய்வது போன்ற காட்சிகள் விறுவிறுப்பாக, நிமிடத்துக்கு நிமிடம் நம்மை அடுத்தது என்ன என்று எதிர்பார்க்க வைக்கின்றன.
டான் ப்ரவுன் இன்னும் இது போன்ற 12 நாவல்களுக்கு விஷயங்களைத் திரட்டியுள்ளாராம். அவர் மனைவி வேறு அவருக்குத் தீவிரமாக உதவி செய்து வருகிறார். ஒரு நாவலை ஆய்வு செய்து எழுத இரண்டு வருடங்களை டான் பிரவுன் எடுத்துக் கொள்கிறார். தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து எழுத ஆரம்பித்து விடுவார். அவருக்குப் புதிர்கள், ரகசியச் சின்னங்கள், மர்மங்கள் போன்றவற்றில் ஆர்வம் அதிகம் என்பதால் இனி வரப்போகும் அவரது படங்கள் மர்மக்கதைப் பிரியர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும்.
அடுத்த வாரம் ‘படித்ததில் பிடித்தது’…
“