பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – ஈட், ப்ரே, லவ் (1)

பார்த்ததில் ரசித்ததும் படித்ததில் பிடித்ததும் மாறி மாறி வாரந்தோறும் இந்தத் தொடரில் வெளியாகும். வாசகர்கள் தங்கள் பின்னூட்டத்தை உடனே கீழே பதிவு செய்யலாம் – ஆசிரியர்.

ஒரு பெண்ணானவள் அவளது தந்தை, சகோதரர்கள், கணவன் மைத்துனர்கள் ஆகியோரால் மதிக்கப்பட வேண்டும். எங்கே பெண்கள் கௌரவப்படுத்தப்படுகிறார்களோ அங்கே கடவுளர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

– மனுஸ்மிருதி III – 55,56

எலிஸபத் ஜில்பெர்ட்டின் சுயசரிதை

Julia Robertsஆஸ்கார் அவார்ட் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த "ஈட் ப்ரே லவ்" அனைவரும் பார்க்க வேண்டிய, அழகான ஒரு படம். 2010 ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம். எலிஸபெத் எம்.ஜில்பெர்ட் என்ற அமெரிக்க நாவலாசிரியை தனது அனுபவங்களின் நினைவுத் தொகுப்பை எழுதி 2006ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார். "ஈட், ப்ரே, லவ்" படம் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு தான் எடுக்கப்பட்டுள்ளது.

எல்லாமே பெற்றுவிட்டதாக நினைக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து அதைப் பிடிக்க ஏங்கும் இன்றைய அவல நிலையைப் பற்றிச் சிந்திக்க இந்தப் படம் நம்மைத் தூண்டுகிறது!

ஒரு பெண்ணின் உண்மைத் தேடல்

படத்தில் வரும் கதாநாயகி எலிஸபத் ஜில்பர்ட் (ஜூலியா ராபர்ட்ஸ்) வளமான வாழ்க்கைக்கான அனைத்தையும் பெற்றவள். கணவன், நல்ல உத்தியோகம், வீடு என எல்லாம் இருந்தாலும் ‘தன்னை’ இழந்தது போல உணர்ந்து தன்னை அறியத் துடிக்கிறாள். உலகெங்கும் சுற்றும் அவள் இத்தாலியில் நன்கு சுவையாகச் சாப்பிடுகிறாள். இந்தியாவில் பிரார்த்தனை புரிகிறாள். இந்தோனேஷியாவில் பாலித் தீவில் அன்பை உணர்கிறாள்.

ஆக "ஈட் ப்ரே லவ்" ஒரு பெண்ணின் உண்மையான தேடலைச் சுட்டிக் காட்டுகிறது. படத்தில் பாலியில் வாழும் ஒரு வயதான மெடிசின் மேன் ஒருவர் – பாரம்பரிய மருத்துவர் – நம்மை வெகுவாகக் கவர்கிறார். கெடுட் லீயர் என்பது அவர் பெயர். முகத்தையும் கையையும் பார்த்துக் குறி சொல்பவர் அவர். எலிஸபத்தைப் பார்த்தவுடன் உனக்கு ஒரு சிறிய காதல் வாழ்க்கையும் இன்னொரு நீண்ட மண வாழ்க்கையும் உண்டு என்று கூறுவதோடு இன்னும் ஆறு மாதத்தில் மீண்டும் நீ பாலிக்கு வருவாய் என்றும் குறி சொல்கிறார்.

அப்படியே நடக்கிறது. முதல் மண வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்து விடுகிறது. பின்னர் இந்தியா வந்து தியானத்தைக் கற்கிறாள் எலிஸபத். வாழ்க்கைத் தத்துவம் இலேசாக அவளுக்குப் புரிய ஆரம்பிக்கிறது. தன்னைச் சமச்சீர் செய்யும் முயற்சியில் இறங்கித் தன்னை உணர ஆரம்பிக்கிறாள். பாலித் தீவுக்குச் சென்று அங்கு விவாகரத்தான ஒரு வணிகர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட நிஜமான காதல் மலர்கிறது.

தி பிஸிக்ஸ் ஆஃப் தி க்வெஸ்ட்

‘தி பிஸிக்ஸ் ஆஃப் தி க்வெஸ்ட்’ அவளுக்குப் புரிகிறது. மெய்யான அன்பில் தன்னை இழப்பதும் கூடச் சமநிலைக்கான ஒரு வழி தான் என்பதைக் கடைசியில் அவள் புரிந்து கொள்கிறாள்.

பட்த்தில் வரும் முக்கியமான வசனம் இது:-

"…I’ve come to believe that there exists in the universe something I call ‘The Physics of The Quest’ – a force of nature governed by laws as real as the laws gravity or momentum. And the rule of Quest Physics maybe goes like this: ‘If you are brave enough to leave behind everything familiar and comforting (which can be anything from your house to your bitter old resentments) and set out on a truth-seeking journey (either externally or internally), and if you are truly willing to regard everything that happens to you on that journey as a clue, and if you accept everyone you meet along the way as a teacher, and if you are prepared – most of all – to face (and forgive) some very difficult realities about yourself…. then truth will not be with held from you.’ Or so I’ve come to believe."

இதன் சுருக்கமான பொருள்: "ஈர்ப்பு விசை போன்ற ஒரு சக்தி உலகில் உள்ளது என நான் நம்புகிறேன். உனது சௌகரியங்களை எல்லாம் தைரியமாகத் துறந்து உண்மையைக் காணும் பயணத்தில் நீ இறங்கினால், அந்த பயணத்தில் வரும் அனைத்தையும் ஒரு சங்கேதமாக எடுத்துக் கொண்டு, சந்திக்கும் அனைவரையும் குருவாக எடுத்துக் கொண்டு உன்னைப் பற்றிய மெய்யான சங்கடமான தருணங்களை எதிர்கொள்ள நீ தயாரானால் உண்மை உன்னிடமிருந்து மறைக்கப்பட மாட்டாது."

வாழ்க்கையைப் பாரமாக ஆக்காமல் மயிலிறகு போல வைத்துக் கொண்டு உண்மைத் தேடுதலில் இறங்கினால் சாந்தி கிடைக்கும் எனன்று நமக்குப் புரிகிறது

இந்தியாவில் ஹரியானாவிலும் டெல்லியிலும் படத்தின் ஷூட்டிங் நடந்தது. பாலியில் ஏராளமான காட்சிகள் படம் பிடிக்கப் பட்டன. அனைத்தும் அருமை! வசனங்கள் நேர்த்தியாக அமைந்துள்ளன.

ஹிந்து மதம் தழுவிய ஜூலியா

படத்தில் நடிக்கும் ஜூலியா உண்மையிலேயே ஹிந்து மதத்திற்கு மாறி விட்டார். மனச் சாந்தியைத் தரும் மதம் இது என்று கூறும் அவர் ஹிந்து வாழ்க்கை முறையையே இன்று வாழ்ந்து வருகிறார். ஹனுமான் படத்தைப் பார்த்தவுடன் அவருக்கு மனமாற்றம் வந்ததாம். அவரது படக் கம்பெனியின் பெயர் ரெட் ஓம் பிலிம்ஸ்! தீப ஒளியைத் தரும் தீபாவளியை உலக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற அவரது கருத்து பரபரப்பாகப் பேசப்பட்டது! ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தந்த ஒரு செய்தியின் படி ஸ்வாமி தரம் தேவ் என்னும் குருக்கள் ஜூலியா ராபர்ட்ஸின் குழந்தைகளுக்கு ஹிந்துப் பெயர்கள் சூட்டிய விவரம் தெரிய வருகிறது. ஹேஸல் மற்றுல் பின்னயஸ் ஆகியோருக்கு லக்ஷ்மி மற்றும் கணேஷ் என்றும் ஹென்றிக்கு கிருஷ்ண பலராம் என்று பெயர்கள் சூட்டப்பட்டதாம்!

ஜூலியா ராபர்ட்ஸ் ஏராளமான படங்களில் நடித்துப் பெயர் வாங்கிய அற்புத நடிகை!. வாழ்க்கை பற்றிய அவரது தீர்க்கமான சிந்தனையைக் கண்டு வியந்தவாறே ‘ஈட் ப்ரே லவ்’ படத்தைக் கருத்துக்காக ஒரு முறையும் அவரது நடிப்புக்காக இன்னொரு முறையும் பார்க்கக்லாம்!

(‘பார்த்ததில் ரசித்ததை’ப் படித்தீர்கள். ‘படித்ததில் பிடித்தது’ அடுத்த வாரம்)

*****************

About The Author