பாரதியாருடைய உறவினரும் தத்துவ மேதையுமான டி.ஜி.நாராயணசுவாமி அவர்கள் சொன்ன உண்மைக் கதை இது.
பாரதியார் புதுச்சேரியில் இருந்தபோது நடந்தது இது. அவரது நெருங்கிய நண்பர் பொன்னுமுருகேசன் மரணப் படுக்கையில் இருந்தார். அவரது புதல்வன் வர்த்தக நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்தான். கப்பலில் திரும்பி புதுச்சேரி வர வேண்டும். இடி தாக்கியது போல ஒரு செய்தி வந்து சேர்ந்தது. கப்பல் கவிழ்ந்து விட்டது. பொன்னுமுருகேசனின் மகன் மரணம் அடைந்து விட்டான்.
மரணப்படுக்கையில் இருந்த பொன்னுமுருகேசன் தவித்துப் போய்விட்டார். கடைசிகாலத்தில் அவர் மன அமைதி இழக்கக் கூடாது என்பதற்காக அவரது உறவினர்கள் ஒரு பொய்த் தந்திக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள். கவிழ்ந்த கப்பல் வேறு கப்பல் என்பதாக! பொன்னுமுருகேசன் இதை நம்பத் தயாராக இல்லை! "பாரதியார் வந்து சொல்லட்டும்; நம்புகிறேன்" என்றுவிட்டார். பாரதியாரிடம் உறவினர்கள் இந்த ஒரு பொய்யை மட்டும் அவர்களுக்காகச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நீங்களும் நானுமாக இருந்தால் "பொய்மையும் வாய்மை இடத்த" என சமாதானம் சொல்லிக் கொண்டு மனமொப்பி அந்தப் பொய்யைச் சொல்லி இருப்போம். பாரதியாருக்கோ பொய் சொல்ல மனம் ஒப்பவில்லை. அதே நேரத்தில் மரணப்படுக்கையில் இருக்கும் நண்பர் மன அமைதி இழக்கக் கூடாது!
என்ன செய்தார் பாரதியார்? அவருக்கே உரித்தான கம்பீரமான நடையில், பொன்னுமுருகேசனின் கட்டிலை நெருங்கினார். "ஓய் முருகேசன்! கப்பல் கவிழ்ந்தது உண்மைதான். ஆனால், உம் மகன் இறக்கவில்லை! அவன் சீக்கிரமே வந்து விடுவான்! இதை நான் சொல்லவில்லை; பராசக்தி சொல்கிறாள்!" என்று சொல்லி விட்டு விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு அகன்றார்.
அதிசயத்திலும் அதிசயம்! சில தினங்களிலேயே கவிழ்ந்த கப்பலிலிருந்து தப்பிய மகன் வீடு வந்து சேர்ந்தான்.
12 ஆண்டுகள் ஒருவன் உண்மையே பேசி வந்தால், அவன் சொல்வது எதுவுமே உண்மையாகும் என்று முன்னோர்கள் சொன்னதாகப் படித்தது நினைவுக்கு வருகிறது. அது உண்மையே என்பது இதன் மூலம் நிதர்சனமாகி விட்டது.
“