பார்கவி பக்கங்கள் (8)

இறைவனிடமிருந்து ஒரு வாரண்ட்!

தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்து நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார் காந்திஜி.

பலத்த வரவேற்பு. பணமாகவும் பொருட்களாகவும் குவிந்தன. பெண்கள் மனமுவந்து, அணிந்திருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தார்கள். ‘தீண்டத்தகாதாருக்கு’ மறுக்கப்பட்ட பல ஆலயங்களும் வீதிகளும் கிணறுகளும் ஆங்காங்கே திறந்து விடப்பட்டன. என்றாலும் தீண்டாமை ஒழிப்பை விரும்பாத பழமைவாதிகள் இந்த இயக்கத்துக்குப் பல வகைகளிலும் இடைஞ்சல் செய்தார்கள். அந்த அணியின் முக்கிய தலைவர் லால்நாத் சாஸ்திரி என்பவர். ஆஜ்மீரில் கூட்டம் நடப்பதற்கு முன் வந்து குழப்பம் விளைவித்த லால்நாத்தைத் தொண்டர்கள் தாக்கி விட்டார்கள். அவருக்குத் தலையில் பலத்த அடி. வந்து செய்தி அறிந்த காந்திஜி, தொண்டர்களை வன்மையாகக் கண்டித்தார். லால்நாத்துக்கு அந்தக் கூட்டத்திலேயே தம்முடைய கருத்தை வெளியிடவும் வாய்ப்பளித்தார். இயக்கத்தில் ஈடுபடுபவர்கள், ஐந்து கோடிப் பேர்களைக் கொடுமையின் கோரப்பிடியிலிருந்து விடுவிக்க முயலும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், வன்முறையில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படைப் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லையே என்று அங்கலாய்த்தார். பயணம் முடிந்ததும் ஏழு நாட்கள் தாம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

காசியில் பயணம் முடிவடைந்தது. வெற்றிகரமான பயணத்துக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் முடிந்து காந்திஜி புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஓர் இளைஞன் வந்து ஒரு காகிதத்தைக் கொடுத்தான் "என்ன அது?" என்று வினவினார் காந்திஜி. "காசி இறைவனிடமிருந்து உங்களுக்கு ஒரு வாரண்ட்" என்றான் இளைஞன்

"எதற்காக?"

"சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களைத் தூண்டி விடும் பாவத்துக்காக!"

"இதை உன்னிடம் யார் கொடுத்தது?"

"இறைவன் என்னைத் தூண்டினார்!"

"அந்த இறைவன் என்னை வாங்கிக் கொள்ளச் சொல்லித் தூண்டவில்லையே?" என்று பொக்கைவாய்ச் சிரிப்புடன் சொன்னார் காந்திஜி.

இதற்குள் லால்நாத் சாஸ்திரி வந்து விட்டார். "உங்கள் புகைப்படத்தைக் கொளுத்தப் போகிறோம். இரண்டு பிரதி கொடுங்கள்!" என்றார்.

"புகைப்படமெல்லாம் வைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை" என்று காந்தி சொன்னதும், தாமே எங்கிருந்தோ புகைப்படத்தை வாங்கிக் கொளுத்தி விட்டுப் போய் விட்டார்.

இத்தனைக்குப் பிறகும் லால்நாத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பிராயச்சித்தமாக 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து முடித்தார் மகாத்மா.

About The Author