சுவாமி விவேகானந்தருடன் பழகிய நினைவலைகளைப் பல அன்பர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் சுவாமிஜியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்ற ஹரிபாத மித்ரா என்பவர் சில சுவையான தகவல்களைத் தருகிறார். சுவாமிஜியின் மனம் குவிந்து பணிபுரியும் பேராற்றலை அவை வெளிப்படுத்துகின்றன.
ஒரு நாள் உரையாடிக்கொண்டிருக்கும்போது சுவாமிஜி சார்ல்ஸ் டிக்கன்ஸின் ‘பிக்விக் பேப்பர்ஸ்’ என்ற புத்தகத்திலிருந்து இரண்டு மூன்று பக்கங்களை வார்த்தை மாறாமல் மேற்கோள் காட்டினார். மித்ராவுக்கு ஒரே ஆச்சரியம். ஆங்கிலம் படித்த சாமியார் என்பதே பெரிய அதிசயம். அதிலும் சார்லஸ் டிக்கன்ஸ் படித்திருக்கிறார், போதாததற்கு பக்கம் பக்கமாக ஒப்பிக்கிறார்! "எத்தனை தடவை இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்கள், சுவாமி?" என்று வியப்பு விரியக் கேட்டே விட்டார். "பள்ளிக்கூடத்தில் ஒருமுறை படித்தேன். அதற்குப் பிறகு ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு ஒருமுறை படித்தேன்" என்று சுவாமிஜி சொன்னதும், "அதெப்படி உங்களால் மட்டும் முடிகிறது? எங்களுக்கு இத்தகைய நினைவாற்றல் இல்லையே?’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். சுவாமிஜி நிதானமாகச் சொன்னார், "அதொன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. செய்யும் காரியத்தை மனம் ஒன்றிச் செய்ய வேண்டும். நமக்கு உணவு சக்தியைத் தருகிறது. அந்த சக்தியை வீணே விரயம் செய்யாமல் இருந்தால் போதும்!"
மித்ரா சொல்லும் இன்னொரு நிகழ்ச்சி. சுவாமிஜி தமது அறைக்குள் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். அவர் அறையிலிருந்து திடுமென பலத்த சிரிப்பு சப்தம் கேட்டது. எட்டிப் பார்த்தார் குப்தா. சுவாமிஜி பாட்டுக்கு வாசித்துக் கொண்டிருந்தார். அங்கேயே பதினைந்து நிமிடங்கள் நின்றார். சுவாமிஜி அவரைக் கவனித்ததாகவே தெரியவில்லை. புத்தகத்திலேயே அவர் பார்வை ஆணி அடித்தது போலப் பதிந்திருந்தது. குப்தாவின் மீது அவர் பார்வை பட்டதும் உள்ளே வரச் சொல்லி அழைத்தார். "பதினைந்து நிமிஷமாக இங்கேயே நிற்கிறேன். நீங்கள் கவனிக்கவே இல்லையே? அப்படி என்ன சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார் குப்தா. சுவாமிஜி சொன்ன பதில், "எந்தக் காரியத்தைச் செய்தாலும் அந்த நேரத்துக்கு அதிலேயே முழு கவனமும் பதிந்திருக்க வேண்டும். முழு ஆற்றலையும் அதில் செலுத்த வேண்டும். பவாஹாரி பாபா என்று ஒருவர் இருக்கிறார். அவர் தியானம், ஜபம், பூஜை, வாசிப்பு, இவற்றை எவ்வளவு மனம் குவிந்து செய்வாரோ, அதே அளவு மனம் குவிந்து பித்தளைப் பாத்திரத்தைத் தேய்ப்பதையும் செய்வார். அவர் தேய்த்த பாத்திரம் அப்படி பளபள என்று இருக்கும்!"
“