"சேவகரால் பட்ட சிரமம் மிகவுண்டு" என்று பாரதியார் பாடினார். கூலி மிகக் கேட்பாராம்; கொடுத்ததெல்லாம் தான் மறப்பாராம்!
என்றாலும் பாரதியின் நிஜ வாழ்வில் அன்பு மிக்க சேவகர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர்களுள் ஒருவர் அம்மாக்கண்ணு. அம்மாக்கண்ணு, வயது முதிர்ந்தவர். பார்ப்பதற்கு அவ்வளவு லட்சணமாக இருக்க மாட்டார். படிப்பறிவு கிடையாது. பாரதியின் கவித்திறமையைப் பற்றியோ தேசப் பணியைப் பற்றியோ அப்படி ஒன்றும் அதிகம் தெரிந்து வைத்திருக்க நியாயமில்லை. என்றாலும் ஏதோ ஒரு மந்திர சக்தியால் ஈர்க்கப்பட்டவர் போல் பாரதியாரிடம் அவ்வளவு பக்தி வைத்திருந்தார்.
1917இல், புதுச்சேரியில் நடந்தது இது. ஏதோ ஒரு சின்னக் குடும்பச் சச்சரவு காரணமாகப் பாரதியார் உணர்ச்சி வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அம்மாக்கண்ணுவும் குடும்ப நண்பர்கள் சிலரும் புதுச்சேரி எங்கும் சல்லடை போட்டுச் சலித்து விட்டார்கள். பாரதியார் கிடைத்தபாடில்லை. கடைசியாக, பாரதிதாசன் அவரை ரயில்வே ஸ்டேஷனில் கண்டுபிடித்து ஓரளவு சமாதானப்படுத்தித் திரும்பி வரச் சம்மதிக்க வைத்து விட்டார். ஆனால், பாரதிதாசன் வீட்டில்தான் தங்குவேன் என்று சொல்லிவிட்டார் பாரதியார். எனவே, ஒரு புஷ் வண்டி ஏற்பாடு செய்து இருவரும் பாரதிதாசன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் அம்மாக்கண்ணு ஒரு கூடை நிறையப் பணியாரங்களுடன் நின்று கொண்டிருக்கிறார்.
காலையிலிருந்து பாரதியார் ஒன்றுமே சாப்பிடவில்லை என்பது அவருக்குத் தெரியும். அதற்காக, அக்கறையுடன் சுவையான உணவு வகைகளைத் தயார் செய்து எடுத்துக் கொண்டு வந்திருந்தார். அம்மாக்கண்ணுவையும் உணவையும் பார்த்தவுடனே பாரதியாரின் ‘மூட்’ முற்றிலுமாக மாறி விட்டது. பாரதியும் அவர் தாசனும் உணவை ஒரு பிடி பிடித்தார்கள். "அமிர்தம் அமிர்தம்!" என்றார் பாரதிதாசன். "தேவாமிர்தம்!" என்று எதிரொலித்தார் பாரதியார். உடனடியாகப் பாரதியார் ராஜ கவியாக மாறி விட்டார். "சேவகா! வண்டியை எடு!" என்று கம்பீரமாக ஆணையிட்டார். மலர்ந்த முகமாக வீடு திரும்பினார்.
இந்த அம்மாக்கண்ணுவைத் தமது கவிதை ஒன்றின் மூலம் அமரத்துவம் அடைய வைத்து விட்டார் பாரதியார். பாட்டின் தலைப்பு ‘அம்மாக்கண்ணு பாட்டு’!
இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த நல்ல கவிதையைத்தான் ரசிப்போமே!
"பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனம் திறப்பது மதியாலே!
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே!
ஏட்டைத் துடைப்பது கையாலே-மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே!
வேட்டையடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே!
காற்றை அடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையிலே!
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணிவுறுவது தாயாலே!"
“
படிக்கும் போதே மெய் சிலிர்த்து போனது.. அந்த மகாகவியின் குழந்தை உள்ளம் பளிச்சென்று தெரிகிறது
ரிஷபன்