பாரதியார் புதுச்சேரியில் குடியேறி வாசம் செய்த வரலாறு எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவர் பிரிட்டிஷ் அரசின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இடையில் ஒருமுறை பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் வந்து போன செய்தி பலருக்குத் தெரிந்திராது. வ.ரா இந்தச் சம்பவத்தை அவர் எழுதிய பாரதியார் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கிறார்.
கொடியாலம் ரங்கஸ்வாமி ஐயங்கார் ஒரு நிலக்கிழார்; தேசபக்தர். அவருக்குப் பாரதியாரிடம் அன்பு உண்டு. என்றாலும் பாரதியார் கவிதைகளைப் பற்றி அவர் அவ்வளவு ஒன்றும் சிலாக்கியமாகக் கருதவில்லை. பாரதியாருக்கு வ.வே.சு.ஐயர் அளவுக்குத் தைரியம் கிடையாது என்று அவருக்கு ஓர் அபிப்பிராயம். வ.வே.சு.ஐயர் பிரிட்டிஷார் கண்ணில் மண்ணைத் தூவியது பற்றி அவருக்கு ஒரு பிரமிப்பு.
ஒருமுறை வ.வே.சு.ஐயர் மாறுவேஷத்தில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். தலைப்பாகை, தாடி சூடிய சீக்கியர் வேடம். பிரிட்டிஷ் போலீஸ் என்னதான் சிரமம் மேற்கொண்டும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, அவர் பெட்டியின் மீது எழுதியிருந்த V.V.S என்ற எழுத்துகளைப் பார்த்து விட்டார்கள். விசாரித்ததற்கு, கண் இமைக்காமல், வாய் குழறாமல் சொல்லி விட்டார், "என் பெயர் வீர் விக்ரம் சிங்!" என்று. இப்படிப்பட்ட துணிச்சலும் சாமர்த்தியமும் பாரதியாருக்கு உண்டா என்பது ஐயங்காரின் கேள்வி.
ஐயங்கார் தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய சம்பவம் ஒன்று நடந்தது. மன்னார்குடியை அடுத்த நாகல் என்ற கிராமத்தில் ஐயங்காருக்கு ஒரு பிரம்மாண்டமான பங்களா இருந்தது. புதுச்சேரியில் வசித்தாலும் அடிக்கடி அவர் நாகல் பங்களாவில் சென்று தங்கி வருவார். இப்படி ஒருநாள், அவர் அங்கு திண்ணையில் உட்கார்ந்து நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது பங்களா வாசலில் ஒரு குதிரைவண்டி ஜல் ஜல் என்ற சப்தத்துடன் வந்து நின்றது. வழுக்கைத்தலை, வழவழ முகம், பொத்தான் அணியாத சட்டை, அதன்மீது திறந்த கோட்டு, கோட்டுக்கு மேலே ஜரிகை அங்கவஸ்த்ரம், பஞ்சகச்சம் இத்யாதி கோலத்துடன் ஒருவர் இறங்கினார். இந்நேரத்தில் இந்த ஊருக்கு யார் வருவது என்று கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தால் – அட, நம்ம பாரதியார்! ஐயங்காருக்குத் தம் கண்களையே நம்ப முடியவில்லை! "புதுச்சேரி வாழ்க்கை அலுத்துப் போச்சு! ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்டேன்" என்று நகைத்தபடியே சொல்லுகிறார் பாரதியார்!
வ.வே.சு.ஐயரின் துணிச்சல் பாராட்டத்தக்கதுதான். என்றாலும் பிரிட்டிஷ் போலீசார் அவரை அவ்வளவாகப் பார்த்ததில்லை. ஆனால், பாரதியார் அனைவருக்கும் பரிச்சயமான உருவம். புதுச்சேரியை ஒட்டிய பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு போலீஸ் படையே அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தனை பேர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு அவர் வந்தது வ.வே.சு-வின் சாகசத்தைவிடப் பலமடங்கு பெரியது!
நாகல் கிராமத்தில் பாரதியார் ஒரு வாரம் தங்கியிருந்தார். மன்னார்குடியைச் சேர்ந்த சுந்தரேச ஐயர் என்று அவரை நண்பர்களுக்கெல்லாம் அறிமுகம் செய்து வைத்தார் கொடியாலம். அவர் அங்கு இருந்த ஒரு வாரமும் கூத்து, கும்மாளம் அட்டகாசம்தான்! என்றாலும் ஜாக்கிரதையாக அரசியல் சம்பந்தமாக மூச்சுக் கூட விடவில்லை!
இந்த நிகழ்விலிருந்து கொடியாலம் ரங்கஸ்வாமி ஐயங்கார் கற்றுக் கொண்ட பாடம் – அவசரப்பட்டு யாரைப் பற்றியும் எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது என்பது!
நம் அனைவருக்கும் கூட இந்தப் பாடம் பொருந்தும்தானே?
“