தென்ஆப்பிரிக்க இந்தியர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் விவாதிப்பதற்காகக் காந்திஜி 1909ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்திருந்தார். நான்கு மாதங்கள் அங்கு தங்கியிருந்தார்.
காந்திஜிக்கு அப்போதிருந்தே அஹிம்சையில்தான் நம்பிக்கை. ஆனால், அதே காலக்கட்டத்தில் லண்டனில் தங்கியிருந்த வ.வே.சு ஐயர், சாவர்க்கர், டி.எஸ்.எஸ்.ராஜன் மூவருக்கும் அஹிம்சையில் நம்பிக்கையில்லை. வன்முறையின் மூலமே விடுதலை பெற முடியும் என்று நம்பினார்கள். (பிற்பாடு, ராஜன் காந்திஜியின் ஆதரவாளராக மாறி, வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டது வரலாற்றுச் செய்தி). இவர்கள் மூவரும், எப்படியாவது காந்திஜியைத் தங்கள் வழிமுறையை ஏற்கச் செய்துவிட வேண்டுமென்று விரும்பினார்கள். ‘இந்திய இல்ல’த்தின் தீபாவளி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச அவரை அழைத்தார்கள். வன்முறையில் நம்பிக்கை வைத்திருந்த அந்தச் சபையின் நடுவே, அழுத்தம் திருத்தமாக அறவழியே தீர்வு என்று காந்திஜி எடுத்துரைத்தார்.. இந்த நிகழ்ச்சி சம்பந்தமான ஒரு சுவையான தகவலைத்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
காந்திஜி லண்டன் வந்து விட்டார் என்பது இவர்களுக்குத் தெரியும். ஆனால் எங்கு தங்கியிருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை. பெரிய பெரிய ஹோட்டல்களிலெல்லாம் தேடிப் பார்த்தார்கள். கடைசியில் ஒரு சின்ன வீட்டில் அவர் தங்கியிருப்பது தெரிய வந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், சில நிபந்தனைகள். சைவ உணவுதான் வழங்கப்பட வேண்டும், விருந்து உணவை நிகழ்ச்சியாளர்கள் தாங்களே தயார் செய்ய வேண்டுமே தவிர, எந்த ஹோட்டலிலிருந்தும் தருவிக்கக் கூடாது என்று. வேறு வழியின்றி இந்த நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன. "நானே வந்து விடுகிறேன். யாரும் வந்து அழைத்துச் செல்லத் தேவையில்லை" என்றுவிட்டார் காந்திஜி.
16, அக்டோபர் 1909 அன்று நிகழ்ச்சி. சமையல் பொறுப்பு ஓர் அறுவர் குழுவின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. நூறு பேருக்கான உணவைத் தயாரிக்க அவர்கள் திக்கித் திணறிக்கொண்டிருந்தபோது, ‘எங்கிருந்தோ வந்தான்’ என்பது போல மெலிந்த உருவமும், பசித்திருப்பது போன்ற வயிறுமாக ஒருவன் உள்ளே வந்தான். மளமளவென்று காரியத்தில் ஈடுபட்டான். சப்பாத்திகளை இட்டுக் குவித்தான். இட்ட ஏவல்களைப் பரபரவென்று செய்து முடித்தான். "பாவம்! பசியோடிருக்கிறான் போல் இருக்கிறது. விருந்து முடிந்ததும் இவனுக்கு வயிறார உணவு அளிக்க வேண்டும்" என்று அறுவர் குழுவினர் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்.
சமையல் வேலை முடிந்தது. கூட்டம் துவங்கும் நேரம் வந்து விட்டது. பிரதம விருந்தினரை எதிர்நோக்கி எல்லோரும் வாசலை வாசலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘காந்திஜி நேரம் தவறாதவர் ஆயிற்றே! ஏன் இன்னும் வரவில்லை?’ என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். இந்த நிலையில் நமது ‘எங்கிருந்தோ வந்தவன்’ விறுவிறுவென்று நடந்து பிரதம விருந்தினர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். அறுவர் குழுவுக்கு ஒரே பதைப்பு. "சரிதான், சரியான லூசு போல. ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன் இவனைக் கிளப்பி விட வேண்டும்" என்று பேசிக் கொள்கிறார்கள். இந்தச் சமயத்தில் சாவர்க்கர் உள்ளே நுழைகிறார், "சாரி காந்தி! நான் வருவதற்குத் தாமதம் ஆகி விட்டது" என்று ‘எங்கிருந்தோ வந்தவ’னிடம் கை கொடுக்கிறார்.
அறுவர் குழுவினருக்கு உண்மை என்னவென்று புரிந்துகொண்டு மனதில் பதிவாகச் சில கணங்கள் பிடித்தன. கடுமையாக வேலை வாங்கியதற்காகக் காந்திஜியிடம் மன்னிப்பு கோரினார்கள்.
அவர் புன்னகைத்தார்.
“