"Don’t say yes when you want to say No" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் இருக்கிறது. ஒருவரது வேண்டுகோளை ஏற்பதற்கு இயலவில்லை என்றாலும் அவரைச் சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காகச் சரி என்று சொல்லி ஏற்றுக்கொண்டு விடுகிறோம். இத்தகைய செயல் உண்மைக்குப் புறம்பானது என்கிறார் காந்திஜி. அவர் சொல்கிறார்:
நேற்று ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நண்பர் என்னுடன் தனியாகப் பேச வேண்டும் என்று அழைத்துப் போனார். பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மற்றொரு நண்பர் எதிர்ப்பட்டார். "நான் குறுக்கிடுகிறேனா?" என்று கேட்டார். கூட இருந்த நண்பர் சொல்கிறார், "சேச்சே! அதெல்லாம் ஒன்றும் இல்லை. தனியாகப் பேச என்ன இருக்கிறது?" என்று! எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. என்னைத் தனியாகப் பேச வேண்டும் என்றுதான் அவர் அழைத்துப் போனார். அவருடைய அந்தரங்கமான விஷயம் அது என்பது எனக்கு நன்கு தெரியும். அப்படி ஒன்றும் தனிப்பட்ட விஷயம் இல்லை அது என்றும், அவர் கலந்து கொள்ளலாம் என்றும் சொன்னது தேவையற்ற தாட்சணியம். நான் உண்மை என்று பொருள் கொண்டிருப்பதற்கு இது புறம்பானது! நண்பர் கனிவாக, "ஆமாம்; நாங்கள் தனிப்பட்ட ஒரு விஷயம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தச் சமயத்தில் நீங்கள் வருவது இடைஞ்சலாகத்தான் இருக்கும்!" என்று சொல்வது சரியாக இருக்கும். இங்கிதம் தெரிந்த மனிதர் இதைத் தவறுதலாகப் புரிந்து கொள்ள மாட்டார்! நாம் அனைவரும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிக்கொண்டிருந்தால் நமது தேசமே பொய்யொழுக்கம் உள்ள நாடாகி விடும்!”
காந்திஜியின் ஆசிரமத்தில் உள்ளதை உள்ளபடி பேசுவதையே ஒரு நெறியாக வைத்துக் கொண்டிருந்தார்கள். காந்திஜியின் கருத்து இக்காலத்து நிர்வாக இயல் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது. நிர்வாகப் பயிற்சிப் பள்ளிகள் "Assertiveness" என்பது பற்றிப் பேசும். இந்தப் பண்பின் மூன்று கூறுகள், நம் மீதே நமக்கு மதிப்பு, மற்றவர்களிடம் மரியாதை, வெளிப்படைத் தன்மை. சுய மரியாதை இல்லை என்றால் நாம் தயங்கித் தயங்கிப் பணிந்து போய்க் கொண்டிருப்போம். எதிராளியிடம் மரியாதை இல்லை என்றால் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வோம். வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் பொய்யொழுக்கம் உடையவர்களாக இருப்போம்!
நிர்வாக அமைப்புகளுக்கும் சரி, தனி மனிதர்களுக்கும் சரி, காந்திஜியின் உண்மை பற்றிய கருத்து சரியானது மட்டும் அல்ல, நலம் பயப்பதும் கூட!