தாமும் தமது மனைவியும் பிறருக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமே தவிர, தவறான முன்னுதாரணங்களாக இருந்து விடக்கூடாது என்பதில் காந்திஜி கண்டிப்பாக இருந்தார். இந்த அடிப்படையில், கஸ்தூரி அன்னை பல துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது என்பது உண்மையே! காந்திஜியைக் கொடுமைக்காரக் கணவராகச் சித்தரிப்பவர்கள் பலர் உண்டு.
உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், கஸ்தூரிபா மனத்தில் என்ன நினைத்தார் என்பதே முக்கியம். பரமஹம்ஸ யோகானந்தர் ஒருமுறை வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அப்போது அன்னை, காந்திஜிக்கு எழுதிய கடிதம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. அதைத் தமது ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ எனும் நூலில் தந்துள்ளார். அதிலிருந்து சுருக்கமாகச் சில பகுதிகள்.
"தங்களது வாழ்க்கைத் துணையாகவும், உதவிபுரியும் தோழியாகவும் இருக்கக் கிடைத்த உரிமைக்காக நன்றி பாராட்டுகிறேன்.
நமது திருமணம் உடலுறவின் அடிப்படையில் அல்லாமல், பிரம்மச்சரியத்தின் அடிப்படையில் அமைந்த நிறைவான பந்தம். அதற்காக நன்றி!
இந்தியாவில் தங்கள் வாழ்நாள் பணியில் என்னையும் சமமாக ஏற்றுக் கொண்டதற்காக நன்றி!
மனைவி, குழந்தைகள் சலித்துப் போய், குழந்தை பொம்மைகளை வீசியெறிவது போல எறிந்து விட்டு மது, மங்கை, சூது என்றெல்லாம் நேரத்தை வீணடிக்கும் மற்ற கணவர்களைப் போல் அமையாததற்காக நன்றி! மற்றவர்கள் உழைப்பில் நல்ல பெயர் எடுத்துக்கொள்ளும் சிலர் போல் இல்லாததற்காக நன்றி!
கொண்ட கொள்கையில் உறுதியும், கடவுளிடம் முற்றும் முழுமையுமான நம்பிக்கையும் படைத்தவர் தாங்கள். (கொண்ட மனைவியான) என்னை விடவும், தெய்வத்தையும் தேசத்தையும் முதன்மையாகக் கருதுவதற்காகத் தங்களுக்கு நன்றி!
சின்ன வயதில் நமது வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்ததற்காக நான் சினந்தும் சீறியும் இருக்கிறேன். எனது குறைபாடுகளைப் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக நன்றி!
குழந்தைப் பருவத்திலேயே தங்கள் பெற்றோர்களுடன் வசிக்க வந்து விட்டேன். தங்கள் தாயார் மிகச் சிறந்த, நல்ல பெண்மணி. எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தங்கள் அன்பையும் மதிப்பையும் எப்படி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் பயிற்சி அளித்தார்.
கணவர் புகழேணியின் உச்சிக்குச் சென்றவுடன், மனைவியை உதறித் தள்ளி விடும் வழக்கமெல்லாம் இருக்கிறது. அப்படிப்பட்ட பயம் எதுவும் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை…
இவற்றுக்காகவெல்லாம் நன்றி!"
ஆகாகான் மாளிகையில் சிறையிருந்து, கணவரின் மடியிலேயே உயிர் துறந்தார் அன்னை. காந்தி-கஸ்தூரி இலட்சிய தம்பதிகள் என்பதில் சந்தேகம் என்ன?!
“
இது வரை படிக்காத புதிய மடல் மிக்க நன்றி