கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!!
வாழ்வாங்கு வாழும் சான்றோர்களுக்கு, செய்யும் காரியங்களில் பெரியது சிறியது என்கிற வித்தியாசம் கிடையாது. எடுத்துக்கொள்ளும் காரியம் ஒவ்வொன்றிலும் மனம் ஈடுபட்டுச் செய்வார்கள். காந்திஜியைப் பற்றி இப்படித்தான் சொல்வார்கள். வைஸ்ராயுடன் இந்திய விடுதலை பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துவதில் எந்த அளவுக்குச் சிரத்தை காட்டினாரோ, அதே அளவு சிரத்தையுடன்தான் புண்பட்ட ஆட்டுக்குட்டிக்கு மருந்து தடவுவதிலும் செயல்படுவார்.
இதேபோல் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் ஒரு சுவையான நிகழ்ச்சி. ஜோசஃபீன் மாக்லாய்ட் என்ற அவரது அமெரிக்க சிஷ்யை தரும் தகவல்.
சுவாமிஜி ஆயிரம் தீவுப்பூங்கா என்ற இடத்தில் ஆன்மிகம் பற்றிய தொடர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். "எழுச்சி உரைகள்" (Inspired Talks) என்று புகழ் பெற்றவை அவை. அந்தத் தொடரில் ஒருநாள் இயேசுநாதரைப் பற்றி உரையாற்றினார். இயேசுநாதரின் மாட்சியில் அப்படியே அவர் மெய்யுருகிப் போனது அவரது தோற்றத்திலேயே வெளிப்பட்டது. உடல் முழுதும் அப்படியொரு விவரிக்க முடியாத தேஜோமயம்.
சொற்பொழிவு முடிந்து காரில் மாக்லாயிடுடன் கூட அவர் வந்து கொண்டிருக்கிறார். அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்குப் பயணம். சீடர்களுடன் கூடவே தங்கியிருந்தார் சுவாமிஜி. பல நாட்களில் சமையலில் அவரது கைவண்ணம் வெளிப்படும்.
காரில் அமர்ந்திருந்த அவர், ஏதோ சிந்தனை வயப்பட்டவராக இருப்பது புலனாகியது. அவரது ஆன்மிகபரமான ஆழ்ந்த சிந்தனையைக் கலைக்கக் கூடாது என்று மிகக் கவனமாக வாய் பேசாமல் அமர்ந்து கொண்டிருந்தார் ஜோசஃபீன். திடுமென்று துள்ளிக் குதித்தார் சுவாமிஜி. "கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்!" என்று உரக்கக் கூவினார். போதிமரத்தடியில் புத்தர் பெற்ற ஞானம் போல சுவாமிஜிக்குக் காரிலேயே ஒரு மாபெரும் ஆன்மிக உண்மை புலப்பட்டு விட்டதோ என்று, ஆவலுடன் அவரது திருவாய்மொழிக்காகக் காத்திருந்தார் ஜோசஃபீன். சுவாமிஜி தொடர்ந்து சொன்னது.
"மிளகுரசம் எப்படிச் சுவையாக செய்வது என்று புரிந்து விட்டது! கறிவேப்பிலை போட வேண்டும்!"
— அடுத்த பக்கம் அடுத்த வாரம்…
“