சுவாமி விவேகானந்தர் அப்பழுக்கற்ற ஒரு தேச பக்தர் என்பதில் துளிக்கூடச் சந்தேகமில்லை. என்றாலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கு கொண்டதில்லை. இந்த நிலையில் போலீசுடன் அவருக்கு ஒரு மோதல் வருவானேன்? அதை அவர் எப்படி எதிர்கொண்டார்? இவையெல்லாம் அதிகம் தெரிந்திராத விஷயங்கள்.
ஒருமுறை கல்கத்தா வீதிகளில் சுவாமிஜி நடந்து சென்று கொண்டிருக்கையில், ஒரு உயர்நிலைக் காவல் அதிகாரியைச் சந்திக்க நேர்ந்தது. அவர் சுவாமிஜியின் குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர். புலனாய்வுத் துறையில் அதிகாரியாக இருக்கிறார். சுவாமிஜியை வழியில் பார்த்ததும், மிக மலர்ச்சியுடன் குடும்ப நலன்களை எல்லாம் விசாரித்து விட்டு, "இன்று இரவு அவசியம் என் வீட்டுக்கு விருந்துண்ண வரவேண்டும்!" என்று அன்புடன் அழைத்தார்.
சுவாமிஜி அவர் வீட்டுக்குப் போனால், விருந்துக்கான எந்த அறிகுறியும் காணோம். சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவர், திடும் என்று விறைப்பாக எழுந்து நின்று, மிரட்டலான தொனியில் இவ்வாறு பேசினார்:- "இத பார்! உண்மையை ஒழுங்காக ஒத்துக் கொண்டு விடு! அத்தனை விஷயத்தையும் கக்கியாக வேண்டும்! உன்னையும் உன் கும்பலையும் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்! காவி உடை போட்டுக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராகச் சதித் திட்டங்கள் தீட்டுவது பற்றிய அத்தனை விஷயமும் என் கையில் இருக்கிறது! அத்தனை பேரையும் உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிடுவோம். ஜாக்கிரதை!"
சுவாமிஜி ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்றார். கோபம் ஒரு பக்கம், அதிர்ச்சி ஒரு பக்கம். அதிகாரி நண்பர் தொடர்ந்தார்: "நரேன்! உனக்குத் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. அப்ரூவராக மாறி அத்தனை பேரையும் காட்டிக் கொடுத்து விடு! நீ தப்பிக்க நான் கியாரண்டி!".
சுவாமிஜி ஒரே நிமிஷத்தில் சுதாரித்துக் கொண்டார். குரலை உயர்த்தியபடிச் சொன்னார், "இங்கே பாருங்க! நீங்க என்னை உங்க வீட்டுக்கு, விருந்துன்னு பொய்யான காரணம் சொல்லிக் கூப்பிட்டிருக்கீங்க! பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கறீங்க! உங்க உத்தியோகத்துக்கு அது சரி! ஆனால் சந்நியாசியான எனக்கு எங்க குரு சொல்லிக் கொடுத்திருக்கிறது, யாராவது அவமானப்படுத்தினாலும் ஆத்திரப்படக் கூடாதுங்கிறது! நான் மட்டும் ஒரு கிரிமினலாகவும் சதிகாரனாகவும் இருந்திருந்தா, யாரையும் உதவிக்குக் கூப்பிடக் கூட முடியாதபடி உங்க கழுத்தை நெறித்துப் போட்டு விட்டுப் போயிருக்க முடியும். ஒரு துறவி நான் என்கிறதாலே உங்களைச் சும்மா விட்டு விட்டுப் போகிறேன்!" என்று.
நிதானமாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார் நம்ம பயில்வான் சுவாமி. போலீஸ் அதிகாரி வாயடைத்து நின்றார்.
“
துணிச்சலாய் எதிர்கொள்ள விவேகானந்தரால் மட்டுமே முடியும். படிக்கும்போதே கம்பீரம் புலனாகிறது. – ரிஷபன்