பாரிவள்ளல் (2)

ஷீலாவுக்கு பயமாய் இருந்தது.

"சொல்லுடி… அதான் சொல்ல ஆரம்பிச்சிட்டியே… அப்பறமென்ன?"

"இல்ல… ப்ரெண்ட்ஸ்லாம் சேர்ந்து… சினி…மா!"

"சினிமாவா?”

அவள் தலையாட்டினாள்.

"என்ன சினிமா?"

"இந்திப்படம்… சல்மான் கான்."

அம்மா அவளையே பார்த்தாள். அவள் பார்வையை வைத்து, அனுமதிப்பாள் மாட்டாள் எதுவும் சொல்ல முடியவில்லை.

"எந்த ஷோ?"

தயக்கமாய் "பர்ஸ்ட் ஷோ…" என்றாள் ஷீலா.

"அத்தனை நேரங் கழிச்சி எப்டிடி திரும்பி வருவே?… அதோட மழ தண்ணியா வேற இருக்கு…" என்று யோசித்தவள், “யார்லாம் போறிங்க?” என்று கேட்டபோது ஷீலாவுக்கு உற்சாகமாகிவிட்டது.

"எல்லாரும் பொண்ணுகதாம்மா…" என்று அம்மா கன்னத்தோடு கன்னத்தை வைத்துக் கொண்டாள்.
அம்மா அனுமதிப்பாள் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.

என்ன படம், என்றிருந்தது. ஒரே பாட்டு! உக்காந்தாப் பாட்டு. நின்னாப் பாட்டு. அந்தக் காலத்தில் தமிழில் சிவகவி என்றெல்லாம் எடுத்தாற்போல. ஆனால், யார் படம் பார்த்தார்கள்? அத்தனை பெண்களும் ஒருசேரச் சேர்ந்ததே அவர்களுக்கு உற்சாகமாய்ப் போயிற்று. ஒரே கேலியும் அரட்டையுமாய்ப் போனது. சனியன்கள்! படம் முடிந்ததே என்று விட்டார்களா? எல்லாருமாய் ஐஸ் கிரீம் ஷாப் போனார்கள். "வேணாண்டி.. அம்மா தேடுவாங்க…" என்றாள் ஷீலா. அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. அத்தோடு மழை வேறு வருகிறாப் போலிருந்தது. அவள் குடை எடுத்து வந்திருக்கவில்லை. அவளவளுகள் ஆட்டோ பிடித்துப் போய்விடுவார்கள். ஷீலா என்ன பண்ணுவாள்?… யாராவது கொஞ்சமாச்சும் யோசிக்கிறாளுகளா… எரிச்சல் எரிச்சலாய் வந்தது.
மழை பெய்ய ஆரம்பித்தே விட்டது. அம்மா வாசலுக்கு வந்து பார்த்தாள். சட்டென்று சுறுசுறுப்பான மழை. இப்போதைக்கு விடாது போலிருந்தது. இந்தப் பெண் இன்னும் வரவில்லையே என்றிருந்தது அம்மாவுக்கு. அம்மா மொட்டை மாடிக்குக் குடையுடன் போனாள். மாடியில் மழையின் உக்கிரம் தெரிந்தது. பக்கத்து வீட்டு மாடியைப் பார்த்தாள். மாடியில் விளக்கெரிந்து கொண்டிருந்தது.
"ஷேக்கர்!" என்று அம்மா கூப்பிட்டாள்.

"என்ன ஆன்ட்டி?" என்று சட்டையை மாட்டிக் கொண்டே எட்டிப் பார்த்தான் அவன்.

"சாய்ராம்!"

"சாய்ராம்!… சொல்லுங்க ஆன்ட்டி!"

"அவள் இன்னும் வீட்டுக்கு வரலப்பா!"

"ஓ!" என்றான்.

"கவலையா இருக்கு!"

"எங்க போயிருப்பாங்க ஆன்ட்டி?"

"தெர்ல…" என்றாள் அம்மா. "சாதாரணமா இந்நேரத்துக்குள்ள வந்திருவா… அதோட… மழையா வேற இருக்கா…"

"நான் வேணா பஸ் ஸ்டாண்டு வரை போயிப் பாத்திட்டு வரட்டுமா?"

"உனக்குப் படிக்க எவ்வளவோ இருக்கும், பாவம்…"

"பரவால்ல ஆன்ட்டி… நடந்துக்கிட்டே படிச்சதை ரிவைஸ் பண்ணிக்குவேன்."

"அப்ப சரி… கீழே வரியா குடை தரேன்?…"

"தோ வரேன் ஆன்ட்டி" என்று கீழே இறங்கி வந்தான்.

குடையை வாங்கிக் கொண்டு அவன் போனான். பாதி தூரம் போய்க் கொண்டிருக்கும்போது அடாடா, ஒரேயொரு குடைதான் தந்து விட்டாள் என்று பட்டது. ரெய்ன் கோட் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம். ஆன்ட்டியிடம் இன்னொரு குடை கேட்டிருக்கலாம். அவளிடம் இல்லாவிட்டால் தன் வீட்டிலிருந்தாவது ஒரு குடை எடுத்து வந்திருக்கலாம்… இனி திரும்பிப் போக முடியாது, என்றிருந்தது. பரவாயில்லை என்று பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்து போனான்.
அந்தப் பெண், அவள் பேரென்ன… அன்னிக்கு அவன் சிகரெட் குடிப்பதை நிறுத்தியபோது ஆன்ட்டி சொன்னாளே… ம்… ஷீலு, அவளை அவன் ஒரே நாள்தான் கிட்டத்தில் பார்த்திருக்கிறான். அன்றைக்கு அவர்கள் வீட்டில் பஜனைக்கு வந்திருந்தபோது. முதல் பார்வைக்கே அவளது அழகு அவனைப் படபடக்க வைத்தது. பஜனை சமயத்தில் என்ன இது, என்று அந்த தூரத்திலிருந்தே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டுப் போனாலும்… மனசு பஜனையிலேயே இருந்தது. ஒருவேளை ஷீலு… அவளும் பாடுவாளா என்று காத்திருந்தான். புதிய குரல்கள் கேட்டன. அதில் ஷீலு குரல் எது, தெரியவில்லை. ஒருவேளை பாடவே இல்லையோ என்னமோ!

அவளிடமிருந்து கிளம்பி அவனைத் தொந்தரவு செய்த அந்தக் கேசவர்த்தினி வாசனை இந்த நனைந்த இரவில் ஞாபகம் வந்தது அவனுக்கு. உண்மையில் படிக்க அவனுக்கு நிறைய இருந்தது. ஆன்ட்டி சொன்னபோது மறுத்துப் பேச மனமில்லை. அம்மாவிடம் கூடச் சொல்லாமல் அவன் கிளம்பியிருந்தான். மழையில் குடை இல்லாமல் அவள் எப்படி வீடு திரும்புவாள் பாவம், என்றிருந்தது.

பஸ்ஸிலிருந்து இறங்கி விறுவிறுவென்று வீட்டைப் பார்க்க வருகிறவள்… அது அவள்தான். அவனுக்குப் படபடப்பாய் இருந்தது. அவனை அவள் கவனித்தாளா, தெரியவில்லை. ஒருவேளை கவனித்துவிட்டுக் கூட அவள்பாட்டுக்குப் போகலாம். அவன் அவளுக்காகக் காத்திருந்தான் என்று அவளுக்கு எப்படித் தெரியும்?

தயக்கத்துடன் அவன் அவள் பின்னால் போனான். "எக்ஸ்கியூஸ் மி…"

"ஒய் ஷுட் ஐ" என்றபடி திரும்பினாள். பார்த்தால் இவன். அவள் வெட்கத்துடன் "சாரி" என்றாள்.
"நெவர் மைன்ட்… ஐயம் ஜஸ்ட் வெய்ட்டிங் பார் யூ."

"பார் மீ?" என்று ஆச்சரியப்பட்டாள். அட படவா ராஸ்கல், இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்றிருக்கிறான். அம்மா பார்த்தால் அவ்வளவுதான்… என்று பயமாய் இருந்தது. ஆனால் அவனிடம்… என் குடை! "ஆன்ட்டிதான் என்னை அனுப்பிச்சாங்க."

அவளுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அவனிடம் அதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. பேசியபடியே அவர்கள் நடந்தார்கள். மழை வேகமாய்க் குறைய ஆரம்பித்திருந்தது.  நின்றால் முழுக்க நனைந்து விடுவோம் என்றிருந்தது அவளுக்கு.

"இந்தாங்க…" என்று குடையை நீட்டினான்.

"அப்ப உங்களுக்கு?"

அவன் பதில் சொல்லவில்லை. "பரவால்ல… ஐ லைக் தி ரெய்ன்."

அவள் அவனைக் குறும்புடன் பார்த்துச் சிரித்தாள். "ஏன் மிஸ்டர் ஷேகர், மழைல வர்ற ஆளுக்கு ஓராளு குடை எடுத்திட்டு வந்தா, ஒரு குடை… அதும் இத்தனை சின்னக் குடையா எடுத்துக்கிட்டு வர்றது?"

உங்க அம்மா ஒண்ணுதான் குடுத்தாங்க… என்று சொல்ல நினைத்தான். தன்னை அவள் கேலி செய்வதை எண்ணி மேலே பேசவில்லை. ஆனாலும் இந்தக் காலக் காலேஜ் பொண்ணுகளுக்கு அநியாயத்துக்குக் கொழுப்பு என்று நினைத்துக் கொண்டான்.

"எப்பப் பார்த்தாலும் படிச்சிட்டே இருக்கீங்களே?…"

அவன் பதில் சொல்லத் தெரியாமல் சிரித்தான்.

"நீங்க காலைல எழுந்து படிக்கறீங்க… நான் எப்பவுமே நைட்ல படிச்சிப் பழகிட்டவன்."
"ஆனாலும் இப்பிடி விழுந்து விழுந்து படிக்க மாட்டேன் நான்" என்று நேரே அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் அந்த இருட்டிலும் குறும்பாய் மின்னின.

"எனக்கெல்லாம் ஒரு தடவை பார்த்தாலே பாடம்லாம் புரிஞ்சிரும்.”

"உன்னை, சின்ன வயசிலயிருந்தே உங்கம்மா ஒதைக்காம வளத்தது தப்பாப் போச்சு" என்றான் அவன்.

"உதை வாங்கற அளவுக்கு நான் நடந்துக்கறதில்ல" என்று அதற்கும் அவனையே முட்டாளாக்கி மடக்கினாள். திடீரென்று அவளுக்கு அவனைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. உலகம் தெரியாத, சூது வாது தெரியாத குழந்தை போலிருந்தான். எனக்காக, எனக்குக் குடையைக் கொடுத்துவிட்டு நனைந்தபடி வருகிறான்.

"நான் கொஞ்ச நேரம் குடைல வந்தாச்சி… நீங்க கொஞ்ச நேரம்… வீடு போகிற வரைக்கும் மாத்தி மாத்தி பிடிச்சிக்கலாம்."

"வேணா… ஒருத்தராவது நனையாமப் போவோம்…"

"நோ நோ, ஐ ஷுட் நாட் பனிஷ் யூ பார் யுவர் கைண்ட் ஹார்ட்டட்னெஸ்… இந்தாங்க" என்று அவள் சற்றும் எதிர்பாராமல் அவன் கையைப் பிடித்துக் குடையைக் கொடுத்தாள்.

அவன் குடையை வாங்கி மடக்கி வைத்துக் கொண்டான். "இருவரும் நனைவோம்… அதுதான் இருவருக்கும் சரியாய் இருக்கும் போலிருக்கிறது…" என்று சிரித்தான். முதன் முறையாக அவளிடம் அழகாகப் பேசிவிட்டதாய் நினைத்துக் கொண்டான். அதையும் அவள் மேலடி அடித்திருந்தால் தன் கதி அதோகதி என்றிருந்தது.

"இங்கிலீஷ் பிக்ஷன் ரைட்டர்ஸ்ல யாரைப் பிடிக்கும்?" என்று அவள் கேட்டாள்.

"ஐயய்ய, நான் அதுல வீக். வெறும் லுட்லும், ஆர்ச்சர்… இப்படிப் படிக்கிறவன். நீ இங்கிலீஷ் எம்.ஏ இல்லே?"

அவள் தலையாட்டியபடியே, "நம்ம ஏரியா வந்திட்டது… நாம ரெண்டு பேரும் நனைஞ்சிட்டு வர்றதைப் பார்த்தா அம்மா திட்டுவாங்க" என்றாள்.

அம்மா காத்திருந்தாள். இங்கிருந்தே தெருமுனை வரை ஒரே நீள்ரோடு. விளக்குகள் சீராய் எரிந்து கொண்டிருந்தன. மழை பெய்து கொண்டிருந்தது. தண்ணீர் தேங்காத தார்சாலைதான். அம்மா குடையை விரித்து நின்றபடி வீட்டு வாசலில் காத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அவனும், அவளும் ஒரே குடையில் வந்து கொண்டிருப்பதை அம்மா பார்த்தாள்.

About The Author