பாரிவள்ளல் (1)

வழக்கம்போல இந்த வீட்டிலும், சொந்தக்காரர் காலி செய்ய நிர்ப்பந்திப்பதும் அவர்கள் வேறு வீடு தேடுவதும் என ஆகிப் போயிற்று. தரகர் வந்து, பெரிய பங்களா அவுட்ஹவுஸ் ஒன்றைப் பற்றிச் சொன்னார். வீட்டுக்கு வீடு கார் இருக்கிற, பெரிய மனிதர்கள் வசிக்கும் பகுதி அது. வாடகை வேறு அதிகம். அம்மா "பரவால்ல" என்றபோது ஷீலாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

காம்பவுண்டுச் சுவரெடுத்து உள்ளே சதுரத்தில் அடைபட்டிருந்த புல்வெளி. ஓரங்களில் வாதமரங்கள், பச்சை சிவப்பு என்று தினுசான வண்ணங்களில் இலை பரப்பித் தண்ணென்று நின்றிருந்தன. நடுவே பங்களாவும், அதை ஓரமாய்ச் சுற்றிப் போக, பின்னால் அவுட்ஹவுசும். அந்த வழியே ஷீலாவுக்குக் கல்லூரி பஸ் போனது. முன்பு போல இரவானால் வெளிச்சம் இல்லாத தெரு வழியே பயந்து பயந்து வீடு வர வேண்டியதில்லை. ஆனால் வாடகை அதிகம்.

"அதையே நினைச்சிட்டிருக்காதே ஷீலா. சில சௌகரியங்கள் கிடைச்சா, சில கஷ்டங்களும், சில தியாகங்களும் இருக்கத்தான் இருக்கும். விஷயத்தச் சொல்லி அப்பாவுக்கு எழுதலாம். பணம், கூட அனுப்புவாரு" என்றாள் அம்மா.

அவளுக்கு வீடு பிடித்திருந்தது. படிக்க என்று மொட்டைமாடி. உலாத்தியபடியே படிக்கலாம். நிமிர்ந்து பார்த்தால் நீலமோ நீலமாய் வானம். வெளியே தூர தூரம் வரை கழுவிவிட்டாற் போன்ற சுத்தமான சாலை. காம்பவுண்டுக்குள் சுற்றி வரும் அல்சேஷன்.

அவளைக் கூட்டிப்போய் அம்மா புதிய உடைகளும், செருப்பும், குடையும், கேசவர்த்தினி தைலமும் வாங்கிக் கொடுத்தாள். அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அம்மா அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். "நம்ம லொகாலிடி அப்டி. அதுக்குத் தக்ன வாழ வேணாமா?" அம்மா அவள் நெற்றியில் முத்தமிட்டாள். "நாந்தான் படிக்காம திரிஞ்சு போயிட்டேன். நீ ஓகோன்னு வரணும். புரிஞ்சுதா?" இருந்த நெகிழ்ச்சியில் ஷீலா அம்மாவுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.

ஷீலா குழந்தையாய் இருக்கையில் அவர்கள் கோடம்பாக்கத்தில் பெரிய வீட்டில் வாடகைக்கு இருந்தார்கள். போர்ட்டிகோ எடுத்த வீடு. கூடத்தில் கார்ப்பெட் விரித்து, சுவரில் அம்மா நடித்த படங்களின் ஸ்டில்கள். பெரிய நடிகர் ஒருவருடன் ஒரேயொரு பாடல் காட்சியில் நடனமாடிய அந்த ஸ்டில் பெரிது பண்ணி மாட்டியிருக்கும். வீட்டில் போன் இருந்தது. வாய்ப்புகள் மங்கத் துவங்கியதும் அம்மா, பாம்பு படத்தைக் கீழே போட்டாற்போலத் தன் விஸ்தீரணங்களைச் சுருக்கிக் கொண்டாள். அவள் கவனம் முழுதும் ஷீலா மேல் குவிந்தது.

ஷீலா இயல்பாகவே நல்ல சிவப்பு. நல்ல அழகு. அவள் அழகிலும் நிறத்திலும் அப்பாவைக் கொண்டிருந்தாள். அப்பாவுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். "நீ எவ்ளோ வேணா படி குட்டி. நான் அனுப்பறேன் பணம் உனக்கு" என்றார் அப்பா.

அம்மா வெகு கண்டிப்பாக இருந்தாள் அவளிடம். பள்ளிக்கூடம் விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளிக்கூடம். ரிக்ஷா வந்து அழைத்துப் போகும், கொண்டு விடும். இங்கே அங்கே என்று நிற்கிறதோ வேடிக்கை பார்க்கிறதோ வேண்டாம். படிக்கிற குழந்தை கவனங்களைச் சிதறவிடக் கூடாது.
தினசரி காலையில் அவளை உட்கார்த்தி வைத்து, தழையத் தழையப் பின்னி விடுவதும், இராத்திரி அவளுக்குக் கையிலும் கால்களைச் சுற்றிலும் மருதாணி இடுவதும் என்று ரசனைமிக்க அருமையான அம்மா.

புதிதாய் யார் குடி வந்திருக்கிறார்கள், என்ன ஏது என்றெல்லாம் பரபரப்படையாத அந்தச் சூழ்நிலை ஷீலாவுக்குப் பிடித்திருந்தது. பக்கத்து வீடு, எதிர் வீடு, இவர்களுக்கு வாடகைக்குக் கொடுத்த வீடு என்று எல்லா வீட்டிலும் பையன்கள் இருந்தார்கள். என்றாலும் முறைத்து முறைத்துப் பார்க்காத, காரும் பைக்குமாய் வெளியே போய்வருகிற பையன்கள். தமிழில் அவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பிடித்திருந்தது. அரட்டையடிக்கவும் கூடிப் பேசிச் சிரித்து மகிழவும் அவர்கள் தெருமுனையில் காத்திருக்கவில்லை. கிளப்களுக்கும், பெரிய நட்சத்திர ஹோட்டல்களுக்கும் போவார்கள் ஒருவேளை என நினைத்துக் கொண்டாள்.

முன் இருந்த வீட்டைவிட இந்த வீடு சௌகரியமாய் இருந்தது. வீட்டுக்குள்ளேயே குழாயில் தண்ணீர் கொட்டியது. கிணற்றில் கயிறு கையை அறுக்கத் தண்ணீர் எடுக்க வேண்டியதிருக்கவில்லை. ரொம்ப அமைதியாய் இருந்தது அந்தப் பகுதி. வீட்டுக்காரர்கள் தனியே தள்ளியே இருந்தார்கள். இரவுப் பறவைகள். அவர்கள் படுத்துக் கொள்ள நேரம் ஆனதால், காலையில் மெதுவாகத்தான் எழுந்து கொள்வார்கள். அதிகாலை எழுந்து மொட்டைமாடியில் உலாத்தியபடி படிக்க ஆனந்தமாய் இருந்தது. பாடங்கள் மனதில் நன்றாய்ப் பதிந்தன.

"அம்மா உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா?" என்று கேட்டாள் ஷீலா.

"உனக்குப் பிடிச்சிருக்கா, அதைச் சொல்லு முதல்ல…"

"ம்."

"இந்த வீடு வேணான்னியே மொதல்ல?…" என்று அம்மா அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
ஷீலாவைக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க அம்மா புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டு வாசல் வரை வந்தாள். அப்போது பக்கத்து வீட்டு மாமியும் வாசல் பக்கம் வந்து நின்றிருந்தாள். “பாத்துப் போ குட்டி, ஜாக்கிரதை” என்றாள் அம்மா. தலையாட்டியபடியே ஷீலா காம்பவுண்டுக் கதவைத் தாண்டி வெளியேறி திரும்பக் கதவைச் சாத்தியபோது அந்தப் பக்கத்து வீட்டு அம்மாள் அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஷீலாவும் புன்னகைத்துவிட்டு, "வரேம் மம்மி… பை" என்று கிளம்பிப் போனாள்.

"எம்.ஏ வாசிக்கிறா" என்றாள் அம்மா. பக்கத்து வீட்டு மாமி புன்னகைத்தபடியே உள்ளே பார்த்து, "நேரம் ஆச்சிடா… இன்னும் கிளம்பலியா?" என்று குரல் கொடுக்க, உள்ளேயிருந்து பரபரப்பாய் ஓர் இளைஞன் வெளியே வந்தான். சிவப்போ சிவப்பாய் இருந்தான். மழுமழுவென்று கன்னமெல்லாம் பச்சையாய் இருந்தான். வெள்ளைக் கோட்டைத் தோளில் மாட்டியபடியே, வந்த வேகத்தில் ஹீரோ ஹோண்டாவில் ஏறி உட்கார்ந்து, கிளம்பி, வேகமெடுத்தான்.

நெற்றியில் சிறு கீற்றாய்த் திருநீறு பூசிய பிள்ளை.

"என் ஒரே பிள்ளை. எம்.பி.பி.எஸ் பைனல்" என்றாள் மாமி. அவள் குரலில் பெருமிதம் இருந்தது.
"மாடி ரூம்ல எப்பப் பார்த்தாலும் படிச்சிட்டே இருக்காரே!…"

"வருஷா வருஷம் அவன்தான் கோல்ட் மெடலிஸ்ட். எம்.பி.பி.எஸ் முடிச்சி உடன்னே மேல படிக்க அமெரிக்கா போறான்."

"ராஜ் டி.வி-ல காலைல காலைல சாய் பஜனை… பாக்கறேளோ? ரொம்ப நன்னாயிருக்கு" என்றாள் அம்மா.

"அச்சோ, பாபான்னா இவனுக்குப் ப்ரீதி… வருஷா வருஷம் புட்டபர்த்தி போய்வராம இருக்கமாட்டான்" என்றாள் மாமி. "நிறைய வேலை கெடக்கு… பிரீயா இருக்கச்சே ஆத்துக்கு வாங்கோ" என்றபடி மாமி உள்ளே போனாள்.

அம்மாவுக்குத்தான் தனியே அடைத்துக் கிடந்தாற் போலிருந்தது. ஷீலா போய்விட்டால் அத்துடன் அவள் வேலைகள் முடிந்து விட்டாற்போல. தோசைக்கு அரைப்பதோ, துணி துவைப்பதோ மிஷினில் போட்டுவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். இஸ்திரி போடப் பத்து நிமிஷம். பக்கத்து வீட்டுக்கும் எதிர்வீட்டுக்கும், முன் இருந்தாற்போலப் போய்வர, இங்கே அவளால் முடியவில்லை. கிழக்கு மூலையில் எப்படியோ முளைத்துக் கனகாம்பரம் மண்டிக் கிடந்தது. பறிக்க ஆளில்லை. அம்மா அரும்புகளைப் பறித்துப் பூத் தொடுத்து ஷீலாவுக்கு வைத்திருந்தாள்.

"சாப்பிட என்ன வெச்சிருக்கே மம்மி… பசிக்கிறது" என்றபடி ஷீலா உள்ளே வந்தாள்.

"அடை… உனக்குப் பிடிக்குமேன்னு அரைச்சேன். அடையும் வெல்லமும் தொட்டுக்கோ. சூப்பரா இருக்கும்!"

"ஏதோ ஒண்ணு… நான் படிக்கணும்மா… நாளைக்கு டெஸ்ட்டு."

"தோ ஒரே நிமிஷம்… நீ டிரஸ் மாத்திக்கறதுக்குள்ள ஆயிரும். தெரு முக்கில் உன்னைப் பார்த்ததுமே நான் அடுப்புல கல்லைப் போட்டாச்சி."

சாப்பிடும்போது அம்மா அவளிடம் "ஷீலு, எனக்கு இங்க தனியா போரடிக்கறது. வர்றச்ச பாபா கேசட் ஏதாச்சும் வாங்கிண்டு வரியா?" என்று கேட்டாள்.

"இதென்னம்மா…"

"மருதாணி… பௌடர் வாங்கிண்டு வந்து அரைச்சேன். உக்காரு இட்டுவிடறேன்."

"நான் படிக்கணும்மா…"

"நீ பாட்டுக்குப் படி குட்டி… நான் இட்டு விடறேன்."

"வேணாம்மா… இன்னொரு நாளைக்கு இட்டுக்கறேன்…" என்று ஷீலா கொஞ்சினாள்.

"ராத்திரி தூக்கம் முழிக்கறே… காலைல சீக்கிரம் எழுந்துக்கறே… ஒடம்பு சூடாயிரும்டி குட்டி. மருதாணி உடம்புக்குக் குளிர்ச்சி. அம்மா சொன்னா கேக்கணும்" என்று அம்மா அவள் முகவாய்க் கட்டையைத் தாங்கினாள். எவ்வளவு கண்டிப்பானவளாய் இருந்தாள் அம்மா! குழந்தை நேர் பாதையில் வளர்கிறது என்று தெளிந்ததும் அம்மா கண்டிப்பைத் தளர்த்திவிட்டாற் போல இருந்தது. சூட்சுமமான அம்மா… என நினைத்து ஷீலா தனக்குள் புன்னகை செய்து கொண்டாள்.

அந்த வியாழக்கிழமை அடுத்த வீட்டு மாமி ஷீலா கல்லூரிக்குக் கிளம்பும் சமயத்தில் வாசலில் காத்திருந்தாள். அம்மாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஷீலா மாமியைப் பார்த்துப் புன்னகைத்தாள். இருவருக்கும் ஏதாவது பேசிக்கொள்ள வேண்டுமாய் இருந்தது. என்ன பேச என்றுதான் தெரியவில்லை.

"இன்னிக்கு சாய் பஜன் நம்பாத்துல. ரெண்டு பேரும் வாங்கோளேன்!…"

ஷீலா புன்னகையுடன் அம்மாவைப் பார்த்தாள். "உனக்கு நாளைக்கு டெஸ்ட் எதும் இருக்கோடி?" என்று அம்மா கேட்டாள். இல்லை, என்று ஷீலா தலையாட்டினாள்.

"அப்ப நீயும் வரியா, பஜனைக்கு…" என்று நிறுத்தியவள், "எத்தனை மணிக்கு?" என்று மாமியிடம் கேட்டாள். “ஆறரைதானே? பின்னென்ன… வரோம்" என்றாள் ஷீலாவின் பதிலை எதிர்பார்க்காமல்.
ஷீலா கல்லூரி கிளம்பினாள்.

பஜனைக்கு அம்மாவும் ஷீலாவும் போனார்கள். ஷீலா பட்டுப்புடவை எடுத்து உடுத்திக் கொண்டாள். அம்மா அவளைக் கூப்பிட்டு அவளது ஸ்டிக்கர் பொட்டுக்கு மேல் சிறு கீற்றாய் சந்தனம் வைத்தாள். "புருவம் ரொம்ப வளர்ந்துட்டாப்ல இருக்கே, ட்ரிம் பண்ணிக்கலியா?" என்று கேட்டாள். "வா போலாம். நேரமாச்சி."

முதல் முதலில் அவர்கள் அடுத்த வீட்டுக்குள் போனார்கள். பஜனை என்றெல்லாம் அவர்கள் போனதே கிடையாது. ஷீலாவுக்குக் கூச்சமாய் இருந்தது. அம்மா தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள். கூடத்தில் பெரிதாய் பாபா படம் வைத்து அதற்குமுன் ஊதுபத்தி கமழ்ந்து கொண்டிருந்தது. நிறையப் பெண்களும், செக்கச் சிவந்த ஆம்பிளைகளும் வந்து குழுமியிருந்தார்கள். இன்னும் உறை பிரிக்காமல் மிருதங்கம் ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது.
"வாங்கோ வாங்கோ" என்று முகம் மலர மாமி அவர்களை வரவேற்றாள்.

"நீங்க ஆரம்பிச்சிட்டேளோன்னு நினைச்சி வேக வேகமா வந்தோம்" என்றாள் அம்மா.

"ஆச்சி… இப்பதான் ஒத்தொருத்தரா வந்திண்டிருக்கா… ஆரம்பிச்சிர்லாம்."

"நீ வேணா படிக்கணும்னா போய்க்கோடிம்மா" என்று அம்மா சொல்லவும், மாமி "நன்னாருக்கு, கொழந்தை வந்திருக்கு… இப்டித் திருப்பியனுப்பறதா? இருந்து சுவாமி பிரசாதம் வாங்கிண்டுதான் போணும்…" என்று ஷீலாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். மருதாணியிட்ட அழகான மிருதுவான குளிர்ந்த கைகள், "உக்காந்துக்கோடி கொழந்தை…" என்றவள், "ஆச்சி… ஆரம்பிச்சிர்லாம்" என்றாள் பொதுவாக.

ஷீலாவும் அம்மாவும் மாடிப்படியோரமாய் உட்கார்ந்து கொண்டார்கள். வித்வான் மிருதங்கத்தை முடிச்சவிழ்த்தார். பஜனை ஆரம்பிக்க இருக்கும்போது, மாமி மாடியைப் பார்த்து "ஷேக்கர்!" என்று குரல் கொடுத்தாள். "தோ வரேம்மா" என்று பதில் வந்தது.

ஒவ்வொருத்தராய் நிறையப் பேர் வந்து விட்டார்கள். கூடம் நிரம்பி வழிந்தது இப்போது. ஷேகர் கீழே இறங்கி வந்தபோது ஷீலாவுக்கு ஒதுங்கிக் கொள்ள இடம் இல்லை. அவனுக்கு வழிவிட அவள் எழுந்து நிற்க வேண்டியதாயிற்று. கதர் ஜிப்பா அணிந்திருந்தான் ஷேகர். நேரே ஷீலாவைப் பார்த்தபடியே அவன் இறங்கி வந்தான். தூய வெள்ளையாய்ப் பட்டு வேஷ்டி கட்டியிருந்தான். கல்லூரி விட்டு வந்து குளித்திருந்தான் போலிருந்தது. வெற்றிலை போடாமலேயே அவன் உதடுகள் சிவப்பாய் இருந்தன. ஷீலா தலையைக் குனிந்துகொண்டு அவனுக்கு வழிவிட்டபோது அவனது சென்ட் அவளுக்கு மணத்தது. அவனுக்கும் கேசவர்த்தினி மணத்திருக்கலாம்.

ஷேகர் போய் பாபா சொரூபத்துக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்ப மாடியேறிப் போய்விட்டான். பஜனை ஆரம்பித்தது. ஷீலாவுக்கு அது புது அனுபவம். அங்கே வந்திருந்த அத்தனை பேரும் பெரிய பணக்காரர்கள் என்று பார்த்தாலே தெரிந்தது. பொம்மனாட்டிகள் அத்தனை பேர் காதிலும் வைரம் டாலடித்தது. கழுத்தில் தடியான செய்ன் போடாத ஆண்கள் இல்லை. ஷேகரும் செய்ன் போட்டிருப்பான் என நினைத்து அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
அம்மாவைப் பார்த்தாள் அவள். அங்கிருந்த எல்லாருமே மிகவும் மெய்மறந்து பஜனையில் ஒன்றிப் போய்ப் பாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு பாட்டு முடிய அடுத்து அடுத்து என்று ஆளாளாய் அவர்கள் பாட்டு எடுத்தார்கள். கேட்க மிகவும் இனிமையாய் இருந்தன அந்தப் பாட்டுக்கள். அதைவிட அவர்களின் பக்தியும் சிரத்தையும் அருமையாய் இருந்தது. அம்மாவும் கைகூப்பியபடியும் தாளம் தட்டியபடியும் கூடவே பாடினாள்.

திடீரென்று ஓர் இடைவெளியில் அம்மா "அல்லா துமகோ ஈஷ்வரு துமகோ…" என்று பாட்டெடுத்தாள். யார் பாடுவது என்று கவனித்துவிட்டு எல்லாரும் கூடப் பாட ஆரம்பித்தார்கள். ஷீலாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அம்மா அருமையாய்ப் பாடினாள். வீட்டில் பொழுது போகாதிருக்கையில் அம்மா ஏதாவது பாடுவது உண்டு. அவை மெல்லிசையாகவோ, செமி கிளாசிக்காகவோ இருக்கும். தீராத விளையாட்டுப் பிள்ளை… என்கிறாற் போல. ஆனால் பாபா பாட்டை அவள் பாடியதேயில்லை. ஷீலாவுக்கு திடீரென்று அவள் வாங்கி வந்த பாபா கேசட் ஞாபகம் வந்தது.

கற்பூரம் காட்டும்போது மங்கள ஆரத்திப் பாடல், எல்லாருமாய் "நாராயண நாராயண ஓம் சத்ய…" என்று பாடியபோது ஷேகர் திரும்பவும் வந்தான். மாடியிறங்கும்போதே கையால் தாளம் தட்டிக்கொண்டு பக்திப் பரவசமாய் வந்தான். அவனைப் பார்க்க ஷீலாவுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டாள்.

கைதட்டிப் பரவசக் குறுக்கலாய் வந்தான் ஷேக்கர், என்ன பேர் பொருத்தம்!

பிரசாதம் வாங்கிக்கொண்டு அவர்கள் வீடு திரும்பினார்கள்.

"பாபா பாட்டு நன்னாயிருந்ததுல்ல?" என்றாள் அம்மா.

"சூப்பர்ம்மா!"

"நீயும் கத்துக்கோ இவளே…"

"திடீர்னு நீ பாடுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லம்மா… அதும் ஈஸ்வரு துமகோன்னு பாடாம, ஷ் போட்டுப் பாடினியே…" என்று ஷீலா அம்மாவைக் கிண்டல் பண்ணினாள்.

அம்மா பதில் சொல்லவில்லை. ராத்திரிக்கு ஏதாவது பண்ண வேண்டும். அவளுக்கு உள்ளே வேலையிருந்தது. பஜனை முடியும்போது அந்த மிருதங்க வித்வான் அம்மாவிடம் "உங்களை எங்கியோ பாத்தாப்ல இருக்கே?" என்றார். "என்னையா?" என்று அம்மா ஒரு விநாடி யோசித்தாள். "எங்க பாத்திருக்கப் போறேள்… மியூசிக் அகாடெமில எங்காவது பாத்திருக்கலாம்… பாம்பே ஜெயஸ்ரீ… யார் கச்சேரிலயாவது…"

"இருக்கும், இருக்கும்" என்று அந்த மனிதர் புன்னகைத்தார். "நீங்க ரொம்ப அழகாப் பாடினேள்."
குக்கரில் வெய்ட் போட்டபடியே அம்மா "பாம்பே ஜெயஸ்ரீ கேசட் ஏதாவது இருந்தா வாங்கிண்டு வாடி" என்றாள்.

"ஷரிம்மா" என்று ஷீலா கிண்டல் செய்தாள்.

அடுத்த நாள் மார்க்கெட்டுக்குப் போய்க் கறிகாய் வாங்கி வந்தாள் அம்மா.

ஒரு வாரத்துக்கு வாங்கி ப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் அடிக்கடி கடைக்கு ஓட வேண்டிய தொல்லை இல்லை. இரண்டு பெரிய பைகள். கனமாய் இருந்தன. வீடு வரை தூக்கிப் போக முடியுமா என்றிருந்தது.

தெருவோரத்தில் ஷேகர் நின்றிருந்தான். குனிந்து லைட்டரைப் பொருத்தி சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவனுக்கு வெட்கமாய் இருந்தது. சட்டென்று முழு சிகரெட்டையும் காலில் போட்டு மிதித்துவிட்டு அவளைப் பார்த்து சிநேகமான சங்கடத்துடன் சிரித்தான்.

"ஐம் சாரி ஷேக்கர்… உன்னைத் தொந்தரவு பண்ணிட்டேனா?" என்றாள் அம்மா.

"ஐயோ அதெல்லா ஒண்ணில்லங்க ஆன்ட்டி…" என்று தயங்கிச் சிரித்தான்.

"ஸோ… யூ ஆர் யெ டாக்டர்…"

அவன் அவளைப் பார்த்தான்.

"சிகரெட் ஸ்மோக்கிங் இஸ் இன்ஜுரியஸ் டு ஹெல்த்!"

அவன் சட்டென்று பேண்ட் பாக்கெட்டிலிருந்து 555 முழு பாக்கெட்டையும் அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டான். சற்றுத் தெம்புடன், "அது… ஒரேயடியா படிச்சிட்டேயிருக்கமா… டென்ஷனாயிடுது."

"அப்ப உடனே படிப்பை நிறுத்திட்டு மெடிடேஷன் பண்ணு… ஒரு அஞ்சி நிமிஷம். மனம் தெளிஞ்சிரும்."

"ஆகா, ஆன்ட்டி… அப்பிடியே பண்றேன்…" என்றவன், "வீட்டுக்குத்தானே ஆன்ட்டி? வாங்க" என்று அவளது பையை வாங்கிக் கொண்டான்.

"பரவால்லப்பா…"

"இல்ல, குடுங்க ஆன்ட்டி… நானா சொமக்கப் போறேன்… வண்டிதானே?" என்று புன்னகை செய்தான்.
"அப்ப பரவால்ல, வண்டி திட்டாது…" அம்மா அவன் பின்னே ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

"எங்க ஷீலுகிட்ட நான் அதான் சொல்லுவேன். தினசரி எப்பப்ப டென்ஷனா இருக்கோ அப்படியே கண்ணை மூடிண்டு ஒரு பைவ் மினிட்ஸ் மெடிடேட் பண்ணிறணும்."

"அது ரொம்ப கரெக்ட் ஆன்ட்டி!"

"அப்பா எங்க வேலை பாக்கறார் ஷேகர்?" என்று கேட்டாள் அம்மா.

"ஹாங்க்காங் பேங்க்குல சீஃப் மேனேஜரா இருக்கார் ஆன்ட்டி… பேங்களூர்ல."

"வெரி குட்" என்றாள் அம்மா. "ரொம்ப தேங்ஸ் ஷேகர்… ஐ திங்க் ஐ ஹேவ் நாட் போர்ட் யூ." என்று இறங்கிக் கொண்டாள்.

"நாட் அட் ஆல்… தேங்க்யூ! யு ஆர் வெரி கைண்ட்" என்றபடி அவன் போய்விட்டான்.

அன்றிரவு சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொள்ளும்போது அம்மா ஷீலாவிடம் "ஏய்! புருவம் ரொம்ப வளர்ந்துட்டது, பார்லர்ல ட்ரிம் பண்ணிண்டு வான்னு சொன்னேனோல்யோ… ஏன் பண்ணல?" என்று கவனித்துவிட்டுக் கேட்டாள்.

"நேரமேயில்லம்மா…"

"வா…" என்று அவளை உட்கார்த்தி வைத்து அம்மாவே அவளுக்குப் புருவம் கத்தரித்தாள்.

அழகுணர்ச்சி மிக்கவள் அம்மா. ஷீலாவின் உடைகளையும் லேட்டஸ்ட் பாஷன்படி அவளுக்கு எது எடுப்பாக இருக்குமோ அதைப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பாள். வண்ணங்கள் பற்றி நன்றாக அம்மா அறிவாள் என்றிருக்கும். சற்று விரிந்த தோளாய் நல்ல உயரத்தில் உயரத்துக்கேற்ற எடுப்பாய் நீள முகமாய் இருப்பாள் ஷீலா. அம்மாதான் "காதில் குண்டலம் போட்டுக்கோடி. உன் அமைப்புக்கு எடுப்பா இருக்கும்" என்று சொன்னது. அம்மா சொல்லித்தான் காதில் தோட்டுக்கு மேல் இன்னொரு துளை போட்டு சிறு கல் மாட்டிக் கொண்டது. அம்மா சொல்லித்தான் மூக்கு குத்திக் கொண்டது. "இந்தப் புருவ அமைப்புக்கு புருவத்தோட மத்தில சின்னதாப் பொட்டு வெச்சிக்கோ இவளே" என்று சொல்லிக் கொடுத்ததும் அவள்தான்.

ஷீலாவின் சிநேகிதிகள் எல்லாருமாய் மறுநாள் சினிமா போவதாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளையும் வரச்சொல்லி நச்சரித்தார்கள். "ஐயோ! சினிமான்னு கேட்டாலே எங்கம்மா என்னைக் கொன்னு போட்டுருவா…" என்றாள் ஷீலா. அத்தோடு மழைக்காலம். எப்போது வரும் என்று சொல்ல முடியாமல் திடீர் திடீரென்று மழை கொட்டியது. தினசரி குடை கொண்டு போகிறதால் பரவாயில்லை. இல்லாவிட்டால் திண்டாடி விடும்.

"இப்ப எப்படி இருக்கு பார்…" என்று அம்மா அவளிடம் கண்ணாடி கொடுத்தாள். அவள் கண்ணாடியை வாங்கிப் பார்த்தாள். ஒழுங்காக அழகாகக் கத்தரிக்கப்பட்டிருந்தன புருவங்கள். அவள் அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தபடியே, "அம்மா! நீ கோவிச்சிக்கலைன்னா… ஒண்ணு சொல்லுவேன்…" என்று ஆரம்பித்தாள்.

"என்ன?" என்றாள் அம்மா. அவள் முகம் சுருங்கியது.

–முடிவு அடுத்த வாரம்..

About The Author