பாரதியார் பாடிய சக்திப் பாடல்கள் காலத்தால் அழியாதவை. சக்தியின் புகழை, பெருமையைப் பேசுபவை! அவர் பாடிய மூன்று காதல் பாடல் பிறந்த கதையையும், நவராத்திரி பற்றிய அவரது அற்புதமான கருத்துக்களையும் இங்கே காணலாம்:
சர் ஜான் உட்ராபின் சக்தி பற்றிய வியப்பு
சக்தி பற்றியும் சாக்தம் பற்றியும் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதிய சர் ஜான் உட்ராப் வியந்த வார்த்தையே சக்திதான்!
"ஆழ்ந்த பொருள் படைத்த இந்த சமஸ்கிருத வார்த்தையை விட வேறொரு வார்த்தை எந்த மொழியிலும் இல்லை" (There is no word of a wider content in any language than this Sanskrit term, meaning “Power”) என்று கூறி வியந்தார் அவர்.
பாரதியாரின் கடற்கரை சந்திப்பு
ஆங்கிலேய அரசுக்கு எதிராக விடுதலை கோஷம் எழுப்பிய தேசபக்தர்கள் அடைக்கலமாக புதுச்சேரி வந்து குடியேறிய போது நடந்த ஒரு சம்பவத்தை தேசபக்தர் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் புதல்வியார் யதுகிரி அம்மாள் தனது ‘பாரதி நினைவுகள்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். அது பாரதியின் மூவர் காதல் பாடல் தோன்றிய வரலாறு!
புதுச்சேரியில் வியாழக்கிழமை தோறும் கடற்கரையில் துய்ப்ளேக்ஸ் சிலை முன் பாண்டு வாத்தியம் வாசிப்பது வழக்கம். இதைக் கேட்ட பாரதியாரின் புதல்வி தங்கம்மாள் "இப்படி நாம் பாடினால் நன்றாக இருக்குமா?" என்று பாரதியாரிடம் கேட்டார். பாரதியார் "பாடும் வகையில் பாடினால் நன்றாக இருக்கும்" என்றார்.
மூன்று வேண்டுகோள்கள்
பின்னர் நடந்த உரையாடலை யதுகிரி அம்மாள் விவரிக்கிறார்:
தங்கம்மாள் : நாளைக்கு ஸரஸ்வதி பண்டிகை. ஸரஸ்வதியின் மேல் இந்த மெட்டில் ஒரு பாட்டுப் பாடு அப்பா!
பாரதி : ஆகட்டும்!
பாண்டுக்காரர்கள் முதல் பாட்டு முடிந்து வேறு பாட்டு எடுத்தார்கள்.
யதுகிரி : இந்த மெட்டில் லக்ஷிமியைப் பாடினால் நன்றாக இருக்கும்.
பாரதி : யதுகிரி, நீ சொன்னபடி இந்த மெட்டில் லக்ஷ்மியின் மேல் பாடுகிறேன்.
செல்லம்மாள் : கல்கத்தா, காசி அங்கெல்லாம் துர் கா பூஜை செய்கிறார்கள். சக்தியின் மேல் பாடினால் நம் கஷ்டம் விடியும்.
அப்பொழுது கீழ் ஸ்தாயியில் நான்கடி, மேல் ஸ்தாயியில் நான்கடியாகப் பாண்டு வாசித்தார்கள்.
பாரதி : செல்லம்மா, நீ சொன்னதும் சரி. தங்கம்மா ஸரஸ்வதியின் மேல் பாட்டுக் கேட்டாள். யதுகிரி லக்ஷ்மியின் மேல் கேட்டாள். நீ காளியின் மேல் கேட்டாய். இங்கு மூன்று பாட்டு பாடியிருக்கிறார்கள். நாளைக்கு மூன்று பேர் பேரிலும் பாடிக் காண்பிக்கிறேன்.
தங்கம்மா: மூன்று மெட்டுகளையும் எப்படி அப்பா பாடுவாய்?
பாரதி : முதலில் ஸரஸ்வதி, இரண்டாவது லக்ஷ்மி, மூன்றாவது காளி.. மூன்று பெயர்களையும் மூன்று ராகங்களில் பாடுவது.
தங்கம்மா : நீ பாடி இருப்பதெல்லாம் நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, ஆனந்தக் களிப்பு முதலிய ஆண்டிகள் பாடும் மெட்டில் பாடியிருக்கிறாய். பாட்டு ஒரே மெட்டில் வேண்டியதில்லை.
பாரதி : உங்களுக்கு எந்த மெட்டு வேண்டுமோ அந்த மெட்டில் பாடிக் கொடுக்கிறேன்.
தங்கம்மா : இந்த பாண்டு மெட்டுகள் எங்களுக்குப் பிடித்ததால் கேட்கிறோம்.
மறுநாள் மூல நட்சத்திரம். ஸரஸ்வதி பண்டிகையைச் சிலர் மூல நட்சத்திரத்திலும் சிலர் மகா நவமியிலும் செய்வது வழக்கம். எங்களுக்கு மகா நவமி. சாஸ்திரத்திற்கு இரண்டு பொம்மைகளைக் கொலுவாக வைத்திருந்தோம். என் தங்கைகளும் நானும் பாட்டுப் பாடி ஹாரதி எடுக்கும் சமயம் பாரதியார் வந்தார்.
"யதுகிரி, உன் கொலுவுக்கு நான் புதிய பாட்டுப் பாடுகிறேன். அப்புறம் உன் சாஸ்திரம் நடக்கட்டும்" என்றார்.
எல்லோரும் வரிசையாக உட்கார்ந்தோம். பாரதியார் முதல் நாள் சொன்னபடி ஸரஸ்வதி, லக்ஷ்மி, காளி மூவர் பேரிலும் பாடிய ‘பிள்ளைப் பிராயத்திலே’ என்று தொடங்கும் மூன்று காதல் என்கிற பாட்டை ஸரஸ்வதி மனோஹரி, ஸ்ரீராகம், புன்னாகவராளி ஆகிய மூன்று ராகங்களில் பாடினார். எங்களுக்கு மெய் சிலிர்த்தது.
இந்தப் பாட்டில் பாரதி தன் வாழ்க்கையையும் சிறிது சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.
நலம் தரும் பக்திப் பாடல்
தங்கம்மாள், யதுகிரி, செல்லம்மாள் பாரதி ஆகிய மூவரின் வேண்டுகோளால் தமிழுக்குக் கிடைத்த அற்புதமான நவராத்திரிப் பாடல் ஆழ்ந்த பொருளைக் கொண்டுள்ளது.
"அன்னை வடிவமடா! -இவள்
ஆதி பராசக்தி தேவியடா! – இவள்
இன்னருள் வேண்டுமடா! – பின்னர்
யாவும் உலகினில் வசப்பட்டு போமடா!
செல்வங்கள் பொங்கி வரும் – நல்ல
தெள்ளறிவெய்தி நலம் பல சார்ந்திடும்" என்று பாடி
"அத்தனை கோடிப் பொருளின் உள்ளே இருந்து வில்லை அசைப்பவளின்" பெருமையை உலகிற்கு அறிவித்தார்!
பாரதியாரின் சக்தி பற்றிய பாடல்கள் நவராத்திரிக்காக அனைவருக்கும் – குறிப்பாகப் பெண்களுக்குக் கிடைத்த பெரும் பரிசுகள்!
கும்பகோணம் சங்கர மடத்திலிருந்து நவராத்திரி பற்றி விரிவாக வந்த செய்தியை இரு கட்டுரைகளில் அலசிய பாரதியார், முத்தாய்ப்பாக, "விக்ரமாதித்யன் வணங்கிய தெய்வம்; காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்; பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்; ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி; பிரம்மதேவன் தலைவியாகிய ஸரஸ்வதி, மூன்று மூர்த்திகள்; மூன்று வடிவங்கள்; பொருள் ஒன்று; அதன் சக்தி ஒன்று; பொருளும் அதன் சக்தியும் ஒன்றே. இங்ஙனம் ஒன்றாக விளங்கும் சக்தி என்ற தெய்வத்தை ஹிந்துக்கள் உபாஸனை செய்வதற்கு விசேஷ பருவமாக இந்த நவராத்திரியின் காலத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறி அதன் காரணத்தையும் விளக்குகிறார்.
சக்தி என்ன தருவாள்?
சக்தியை தியானத்தில் நிறுத்துவதால், நாவிலே புகழ்வதால், செய்கையில் பின்பற்றுவதால் என்ன கிடைக்கும்?
பாரதியாரே இந்தக் கேள்விக்கான விடையைக் கூறுகிறார்:
"நமது மதி தெய்வ மதியாகின்றது. நமது நாவு புதிய வலிமையும் மஹிமையும் பெறுகின்றது. நமது செய்வினை தர்மமாகின்றது. ஒரே வார்த்தையாகச் சொன்னால், சக்தியை வேண்டினால் சக்தி கிடைக்கும்."
"நம்பினோர் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்"
– மகாகவி பாரதியார்
“
Heartening account of how the song came into being. It is my favorite song. Bharathi describes his love affair” with the three goddesses. Actually it was infatuation more than love. Infatuation has some tinge of potential disappointment mixed in with attraction. The end result he describes at the end of each song makes it so transparent. Every time I read this song I get some new meaning out of it (all the 6 stanzas). The only goddess who blessed him was Saraswati. The irony of his love towards Lakshmi is so evident in his abject poverty. His ardent love/respect for parAshakthi was unquenchable indeed. Actually the goddesses did not fail him. The community/society failed him.”