பாரதி கையில் விலங்கு!

”என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?”

பாரதியின் இந்த வரிகள் அவருடைய மன வேதனையையும், ஆதங்கத்தையும், எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கின்றன.
அன்னை கை விலங்குகள் எப்படி, எப்பொழுது போனது என்பது சரித்திரம்!

பாரதி கையில் விலங்கா? எப்பொழுது?ஏன்?

ஆங்கிலேயர்கள் கையில் அக்காலத்து விடுதலை இயக்கப் போராட்ட வீரர்கள் கிடைத்துவிட்டால், எந்த அளவுக்குக் கொடுமைப் படுத்தி, ஏளனப்படுத்தி, வேதனைப் படுத்தி மகிழ்வடைந்தனர் என்பதைக் கண்டவர்கள் கூறியும், அனுபவித்தவர்கள் விளக்கியும், புத்தகங்களில் படித்தும் நாம் அறிந்திருக்கிறோம்.

மகாகவி பாரதி சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆற்றிய தொண்டை, நாடு நன்கறியும்.

1918ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20ஆம் நாள் கடலூர் வந்த அன்று கைது செய்யப்பட்டு, டிசம்பர் 14ஆம் நாள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப் பட்டார் என்பது அவர்தம் வரலாற்றில் காண்கிறோம். அப்பொழுது பாரதி அவர்களின் கையில் விலங்கிட்டுக் கைது செய்தார்களா இல்லையா என்பதை நாம் அறியோம்.அப்படியெனில் இந்தக் கட்டுரையின் தலைப்பு எதைக் குறிக்கிறது என்று வியப்பு ஏற்படுத்துகிறது அல்லவா!

பாரதி கையில் விலங்கா? ஆம் அவர் கையில் பிடித்த பேனாவில் எந்த அளவிற்கு விலங்கினங்கள் கையாளப் பட்டன என்பதைக் கண்டு தெளிதலே இக்கட்டுரையின் நோக்கம்! பாரதியின் கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை, பேச்சுக்களை அவர்தம் ஒவ்வொரு தாசரும், சீடரும், மாணவரும், வெவ்வேறு கோணத்தில் கண்டு, ஆராய்ந்து, அனுபவித்து, எழுதி,பேசி, விவாதித்து வருகின்றனர் என்பதைக் கண்டு வருகிறோம். அந்தக் கவியரசனின் உயிர்ப்பறவை சிறகு விரித்து 88 ஆண்டுகள் கழிந்தும் அவரது தாக்கத்தை இன்றும் உணர்ந்து வருகிறோம். ஏனெனில் அவரது படைப்புக்கள் சாகா வரம் பெற்றன. அவரது எழுத்துக்கு என்றும் உயிர் உண்டு. அவர்தம் கருத்துக்கள் அமரத்துவம் பெற்றவை. எக்காலும் உண்மை என்று உணரப் பட்டவை!

பாரதியை மகாகவியாகத்தான் பலர் அறிவார்கள். கவிதை இலக்கியத்தில் புதுப்பாதைகளை வகுத்தவர் என்பதைப் பலர் அனுபவித்ததுண்டு. அத்தகு மேதை கட்டுரை இலக்கியத்திலும், கதைப் படைப்பிலும் வியப்பூட்டும் சாதனைகளைப் படைத்தவர் என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாகும்.

பாரதி கவிதைகளை தேசிய கீதங்கள், தோத்திரப் பாடல்கள், ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள், சுயசரிதை, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, வசன கவிதைகள் என வகுத்திருப்பதைப் போன்றே, அவரது கட்டுரை களையும் தேசியம், தத்துவம், பெரியோர்கள், பெண்ணியம், கல்வி, சாதியம், கலையும் கவிதையும், தமிழும் தமிழ் நாடும், பொருளும் தொழிலும், மலையாள மொழியும், மலையாளிகளும், சிந்தனைச் சித்திரங்கள் என்று பகுத்து திருமிகு ஜயகாந்தன், சிற்பி பாலசுப்பிரமணியன் ஆகியவர்கள் மதிப்பு மிகு செல்வத்தை நமக்கு வழங்கியுள்ளனர்.அவற்றை ஆவலோடு படிப்பவர்கள் பாரதியின் பல்நோக்குப் பரிமாணங்களையும், சிந்தனைகளையும் தேனென எண்ணிப் பருகித் துய்ப்பவர்கள்!

பாரதிப் பெருமகனார் இயற்கையை அணு அணுவாகச் சுவைத்தவர். கவிதையைக் கட்டுரை வடிவில் வடித்தவர். யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்ற நினைவில் நமக்கெல்லாம் மலை மலையாய் விட்டுச் சென்றவர்.

”எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி”!

என்று தன்னைச் சித்தராக அறிமுகப் படுத்திக் கொண்ட பாரதி இயற்கையின் படைப்புக்கள் அனைத்திலும் இறைவனைக் கண்டார். மனிதன், மிருகம், பறவை, புல், பூண்டு , காற்று, மழை, வெய்யில் அனைத்திலும் இறைவன் பெருமையைக் கண்டார்!

”இனி” என்ற ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதினார்:
“கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.”

“உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று. நீ, நான், முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை எல்லோரும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்”

எனவே, பாரதியார் இயற்கையை ரசித்தார்; இறைவனைத் துதித்தார்; விலங்கினத்தை நேசித்தார்; தமது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் நூற்றுக் கணக்கில் விலங்கினத்தையும் பறவையினத்தையும் கையாண்டார்.

பறவைகளின் வாழ்க்கையையும், விலங்குகளின் குணங்களையும், நடப்புகளையும் கூர்ந்து நோக்கினார்; அவற்றையெல்லாம் நம் கண்முன்னர் கொண்டு வந்து நிறுத்தினார். அவர் இரசித்த இயற்கையை நம்மையும் இரசிக்கச் செய்தார்!. கவிதைகளிலும், கட்டுரைகளிலும் விலங்கினத்தைத் தனியாகவும், கூட்டாகவும் நம் கற்பனையில் நிழலாடச் செய்தார்! அவற்றின் களி நடனங்களை நம்மையும் களிக்கச் செய்தார்!

நாமறிந்த பாரதியின் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களில் 237 முறை விலங்கு, பறவைகளைத் தனிதனியாகக் குறிப்பிடுகிறார்; 38 இடங்களில் பொதுவாகக் கூட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்! அவற்றின் உருவத்தை விவரிக்கின்றார்! அவற்றின் குணநலன்களைத் தக்க இடத்தில், தக்க தருணத்தில், தக்க முறையில் நம் கண் முன்னர் நிறுத்துகிறார்! நம்மை வியக்கவைக்கிறார்!

அவர் குறிக்கும் பறவை, விலங்குகளின் பட்டியலை இங்கே பாருங்களேன்:

அணில், அன்னம்
ஆடு, ஆமை, ஆந்தை,
எருமை
ஏறு
கட்டெறும்பு, கரடி,கலைமான், கழுதை, களிறு
காக்கை
கிளி,
குதிரை, குயில், குரங்கு, குருவி
கூகை
கோழி
சிங்கம், சிட்டுக் குருவி, சிற்றெறும்பு
சேவல்
தவளை
திமிங்கிலம்
தேள்
நரி,
நாகம், நாய்
பசு, பரி, பருந்து, பன்றி
பாம்பு
புலி, புளிமான்
பூனை
மயில், மாடு, மான்
மீன்
முதலை, முயல்
யானை
வண்டு

கூட்டம் கூட்டமாகக் குறிப்பிடப்படுவன:

ஊர்வன
பறவைகள்
புட்கள், புள், புள்ளினம்
பூச்சிகள்
மிருகங்கள்
விலங்குகள்!

இவற்றுள் காக்கை, கிளி, குயில், சிங்கம், நாய், பாம்பு, மாடு, யானை ஆகியவை பாரதிக்கு மிகவும் நெருங்கிய பறவைகள், மிருகங்கள் போலும்!

எப்படி? இவை ஒவ்வொன்றையும் பத்து இடங்களுக்கு மேல் அவரது கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார்! அதிகமாக 19 முறை கிளி,பாம்பு ஆகியவற்றையும் , குறைந்த அளவில் 11 முறை காக்கை, மாடு இவற்றையும் பயன்படுத்தியுள்ளார்! மற்றவற்றை ஒன்று முதல் ஒன்பது முறை குறிப்பிட்டுள்ளார்!

விலங்குகள் என்று 10 முறையும் பறவைகள் என்று 13 முறையும் பொதுவாகப் பயன் படுத்தியுள்ளார்! ஊர்வன, புட்கள், புழு,புள், புள்ளினம், பூச்சிகள், மிருகங்கள் என்று பொதுவாக ஒன்று முதல் 5 முறையும் குறிப்பிட்டுள்ளார்!

கிளிவிடு தூது, கிளிப்பாட்டு, விடுதலை சிட்டுக் குருவி, குயில், குயிலின் பாட்டு, குயிலின் காதற்கதை, குயிலும் குரங்கும், குயிலும் மாடும், குயிலின் பூர்வ ஜன்மக் கதை என்று பாடல் தலைப்புக்களில் கவிதை இயற்றியுள்ளது நோக்கற்குறியது!

“சிட்டுக்குருவி” பாரதியைக் கவர்ந்த பறவைகளுள் தனியிடம் பெற்றுள்ளது!. இத்தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளைப் படித்தால் அப்பறவையை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளார் என்பதும், அதிலிருந்து எவ்வாறு சில தத்துவங்களை விரித்துரைக்கிறார் என்பதும் தெளிவாகும். இதில் அவர் இயற்றிய கவிதையினின்றும் சில கருத்துக்களைக் கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

”மகாகவி பாரதியார் கட்டுரைகள்” என்ற புத்தகத்தின் தொகுப்பாசிரியர்களான திரு ஜயகாந்தன், சிற்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் எவ்வளவு சிறப்பாக இக்கட்டுரைக்கு அறிமுகம் தருகிறார்கள் பாருங்கள்!

“சிட்டுக்குருவி குறித்த பாரதியாரின் கட்டுரை பல காரணங்களுக்காகவும் பாராட்டுப் பெற்ற ஒன்று. பாரதியாரின் உணர்ச்சித் துணுக்குகளாகத் திகழும் தமிழ் வாக்கியங்களின் உன்னதமான அழகை இந்தக் கட்டுரையில் காணலாம். அவர் கவிதையைக் கூட வெல்லுகின்றன இந்த உரைநடை மின்னல் துண்டுகள்.

’சிறிய தானியம்போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகியப் பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்……இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்.’

விந்தை அழகு கொஞ்சும் இந்த அருமையான கட்டுரையின் அடுத்த சிறப்பு, குருவியின் வாழ்வில் காணப்படும் சுதந்தரத்தையும், மனிதத் துயரங்களையும் ஒப்பிடுகிற சமுதாயப் பார்வை.

மூன்றாவதாகப் பாரதியாரின் புதுமை செழித்த உள்ளம் சிட்டுக்குருவியிடம் காணுகிறது ஆத்மதத்துவம். விடு, விடு என்று விடுதலையை, ஆன்ம விடுதலையை நினைவூட்டுகிறதாம் சிட்டுக்குருவி. அழகும் அறிவும் ஒன்றையொன்று தழுவிக் கொள்கிறபோது பட்டுத்தெறிக்கிறது பாரதியாரின் தத்துவச் சிந்தனை. சிட்டுக் குருவியைப் போலவே சிறிய கட்டுரை. ஆனால் அது பறக்கிற வானம் போலப் பெரிய தத்துவம்!”

”விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியை”ப் போல தாமும், விடுதலையாகி வாழவேண்டும் என்று விரும்புகிறார். இந்த நாடும் தானே!

”சிட்டுக் குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமையுண்டாகும்” என்கிறார்! தெய்வத்தினிடம் வேண்டுகிறார்: “தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்கமாட்டாயா? பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும், பொய்களையும் உதறி எறிந்து விட்டு, நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா?ஆஹா! எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை நாடுகள், எத்தனை பூக்கள்! எத்தனை மலைகள், எத்தனை சுனைகள், எத்தனை அருவிகள், எத்தனை, எத்தனை கடல் வெளிகள்! வெயில், மழை, காற்று, பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாய் வழக்கப்பட்டு இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உணர்ச்சிகளே உண்டாகும் இந்த நிலை எனக்கு அருள் புரியலாகாதா? குருவிக்குப் பேசத் தெரியும்; பொய் சொல்லத்தெரியாது. குருவியிலே ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை; குருவிக்கு வீடு உண்டு, தீர்வை கிடையாது. நாயகனில்லை; சேவகமில்லை!”

எப்படியிருக்கிறது பாரதியின் பேராசை!

”இந்தக் குருவி என்ன சொல்கிறது?” என்று ஒரு கேள்வியை எழுப்பி, பதிலையும் சொல்லும் பாங்கைப் பாருங்கள்!

”விடு” “விடு” “விடு” என்று கத்துகிறது. இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பது போலிருக்கிறது. விடு, விடு, விடு- தொழிலை விடாதே, உணவை விடாதே, பேட்டை விடாதே, குஞ்சை விடாதே. உள்ளக் கட்டை அவிழ்த்து விடு. வீண் யோசனையை விடு, துன்பத்தை விடு”.

விலங்குகளும் பறவைகளும் பாரதியாருக்கு என்றும் இனியவையாக விளங்குவன.

”காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

என்று ஆன்மநேயம் பாராட்டிய கவிஞர் அவர். இந்த விரிந்த இதயத்தின் எல்லையற்ற விரிவைக் கட்டுரைகளில் காணமுடிகிறது.
அந்த ஆன்ம நேயத்தைக் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடுதானே ”பாப்பாப் பாட்டில்” சின்னஞ் சிறு குருவி, வண்ணப் பறவைகள், கோழி, காக்காய், பசு, நாய், குதிரை, மாடு, ஆடு அனைத்தையும் பாப்பாவின் கண்களில் நிறுத்தி அறிவுரை தருகிறார்1

பாரதி ஒரு மனோரஞ்சிதப் பூ! யார் யார் எந்த எந்த வாசனையை நினைத்து அப் பூவை நுகர்ந்து பார்க்கிரார்களோ, அந்த அந்த வாசனையை அவரவர்க்கு வழங்கும் வல்லமை படைத்தது அந்தப் பூ! அதைப் போன்று பாரதிப் பெருமகனாரை எவரெவர் எப்படி எப்படிப் பார்க்க விழைகின்றார்களோ அவரவர்க்கு அப்படி அப்படியெல்லாம் காண வழிவகுப்பவர்!

பாரதி கையில் விலங்கைப் பார்த்தீர்களா?

”எமதன்னை கை விலங்குகள் போய்” 62 ஆண்டுகள் ஆயின. பாரதி கையினால் வர்ணம் தீட்டப்பட்ட பறவைகளும், விலங்குகளும் என்றென்றும் பொலிவொடு விளங்கும்! என்றென்றும் படிப்பவர் மனத்திற்குப் பரவசம் அளிக்கும்!.

About The Author

5 Comments

  1. P.Balakrishnan

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தியவர் பாரதியார்; எனவே பறவைகளும் விலங்குகளும் அவரது பாசத்திற்குரியவையாயின.

  2. கலையரசி

    அமரத்துவம் பெற்ற பாரதியின் படைப்புகளில் விலங்கு மற்றும் பறவைகள் எடுத்தாளப்பட்டுள்ள விதம் குறித்து விளக்கும் சிறந்த கட்டுரை.

  3. castro karthi

    இப்படி ஒரு பதிவைத்தான் இணையம் எங்கும் தேடினேன்.. நீங்களாவது எழுதினீர்களே.. நல்லா இருங்க

Comments are closed.