குழந்தைச் செல்வத்திற்கு வேறு எந்த செல்வமும் நிகரில்லை என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்றாகும். ஏனெனில் இன்றைய குழந்தைகளே நாளைய உலகம்! வருங்காலம் இன்றைய குழந்தைகள் கையில் அல்லவா? என்றும் இன்பத்தைத் தருபவர்கள் குழந்தைகள்; சரியாக வளர்க்கப்பட்ட குழந்தைகள் நாளைய தலைவர்கள், விஞ்ஞானிகள், கணித மேதைகள், இலக்கியவாதிகள், பொறியியல் வல்லுனர்கள், தலைசிறந்த மருத்துவ மேதைகள் இன்னும் எவ்வளவோ! எனவேதான் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து, கல்வி அளித்து, நாட்டின் நல்ல குடிமகன்களாக மாற்றுவதில் பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், மதத் தலைவர்களுக்கும் உள்ள பெரும் பொறுப்பாகும்.
திருவள்ளுவப் பெருந்தகை ”மக்கட் பேறு” என்ற ஓர் அதிகாரத்தையே இயற்றியுள்ளார்! அவர் சொல்கிறார்:
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை; அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.(குறள் 61)
அதாவது, ஒருவன் பெறும் பொருள்களுள் அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல். அல்லது பிற பொருள்களை யாம் மதிப்பதில்லை.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.(குறள் 62)
பிறரால் பழித்தற்கு இடமில்லாத நல்ல பண்புள்ள மக்களைப் பெறுவாராயின், அவர்க்கு ஏழு பிறப்பிலும் துன்பங்கள் வராது.
தம் பொருள் என்பதம் மக்கள்; அவர் பொருள்
தம் தம் வினையான் வரும் (குறள் 63)
மாந்தர் தம் மக்களைத் தம் பொருள் என்று சொல்லுவர். அம்மக்கள் செய்த பொருள் அவர் நல்வினையால் தம்மிடத்து வந்து சேரும்.
தமக்குக் கிடைத்த அந்த அரிய மழலைச் செல்வத்தை நல்ல முறையில் வளர்க்க வேண்டியது மாந்தர் தம் முக்கியக் கடமை அல்லவா? அக்கடமையினின்று நாம் வழுவுவதாலேயே சமுதாயத்தில் நடைபெறும் சீர்கேடுகளைச் சந்திக்கிறோம். இதைத் தடுக்கும் முறையையும், வழியையும் பாரதியார் 90 ஆண்டுகட்கு முன்னரே விளக்கியுள்ளார் என்பதைப் பார்க்கும்பொழுது அவரது தீர்க்க தரிசனத்தைக் கண்டு வியக்கிறோம்.
குழந்தைச் செல்வம் எப்படி வளர வேண்டும் என்று தனது ”பாப்பா பாட்டி”ல் பாப்பாவுக்கே நேராக அறிவுரை அளிக்கிறார் பாரதி. அதைச் சற்றே இங்கு பார்ப்போம்.
குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாகவும், வளமோடும் அமைய வேண்டுமென்றால்
ஓடி விளையாட வேண்டும்
ஓய்ந்திருக்கக் கூடாது
பொய் சொல்லக்கூடாது
புறஞ் சொல்லலாகாது
சோம்பல் மிகக் கெடுதி என்று உணர்ந்து, சோம்பலை
நீக்கிவிட வேண்டும்
சொன்ன சொல்லைத் தட்டக் கூடாது
வயிரமுடைய நெஞ்சு வேண்டும்
இறைவனும், இயற்கையும் படைத்த அனைத்து உயிர்களையும் ஒன்றாக ஏற்று, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும். அதற்கு முதற்படியாக பாரதி பாப்பாவுக்குக் கூறும் அறிவுரை:
வண்ணப் பறவைகளைக் கண்டு மனத்தில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
சின்னஞ்சிறு குருவி போல திரிந்து, பறந்து வர வேண்டும்.
கொத்தித் திரியும் கோழியுடன் கூடி விளையாட வேண்டும்.
எத்தித் திருடும் காக்கைக்காக இரக்கப்பட வேண்டும்.
பாலைப் பொழிந்து தரும் பசு மிக நல்லதென்று உணர்ந்து
அதைக் காப்பாற்ற வேண்டும்
வாலைக் குழைத்துவரும் நாயை, தனக்குத் தோழனென
நினைக்க வேண்டும்
வண்டி இழுக்கும் நல்ல குதிரை, நெல் வயலில் உழும் மாடு, நம்மை அண்டிப் பிழைக்கும் ஆடு – இவற்றை ஆதரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்.
எனவே சிறு வயது முதற்கொண்டே சில நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டு தவறாது கடைப்பிடிக்க வேண்டும். அந்தப் பழக்கங்கள் என்னென்ன..? இதோ பாரதியே சொல்கிறார்……
அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். அதாவது கதிரவன்
உதிக்கு முன்னர் படுக்கை விட்டு எழுந்திருப்பதே சிறப்பு.
கனிவு கொடுக்கும் நல்ல பாடல்களைக் கற்றுக் கொள்ள
வேண்டும். நல்ல பாடல்கள் அமைதியை அள்ளித் தரும்;
நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்; வாழ்க்கையை
அனுபவிப்பதற்கு நல்ல ஊடகம், நல்ல பாடல்கள்.
மாலையில் விளையாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டும். நல்ல திறந்த வெளி விளையாட்டு உடல்
நலத்தையும், உள நலத்தையும் காக்கப் பெரிதும் உதவும்
கருவி.
வாழ்க்கையில் நல்லவர், தீயவர் அனைவரோடும் தொடர்பு ஏற்படும். ”துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்பது நமது நாட்டு முதுமொழி. அதை ஏற்காத பாரதியார் கூறுவார்:
பாதகஞ் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ளாமல்,
அவரைத் தைரியத்தோடு, மோதி மிதித்துவிட வேண்டும்!
முகத்தில் உமிழ்ந்து விட வேண்டும்!!
இன்பமும் துன்பமும் வாழ்க்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள் என்று உணர்ந்து, துன்பம் நெருங்கி வந்தபோது நாம் சோர்ந்து விடக்கூடாது. அன்பு மிகுந்த தெய்வம் துன்பம் அத்தனையையும் போக்கிவிடும் என்று உணர்ந்து தளரா நம்பிக்கையோடு பணியாற்ற வேண்டும்.
தேம்பி அழும் நொண்டிக் குழந்தைக்காக திடங்கொண்டு
போராட வேண்டும்.
நமது நாடு, நமது மொழி, நமது மக்கள் என்று எப்பொழுதும் பெருமைப்பட வேண்டும்; அப்பெருமையை என்றும் கட்டிக் காத்திட வேண்டும். அதற்கு,
தமிழ்த்திரு நாட்டை தன்னைப் பெற்ற தாய் என்று கும்பிட
வேண்டும்.
நம் ஆன்றோர்கள் நாட்டை அமிழ்தினும் இனியதாகக் கருத
வேண்டும்.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்; எனவே அதைத் தொழுது
படிக்க வேண்டும்.
செல்வம் நிறைந்த நமது பாரத நாடு என உணர்ந்து,
தினமும் புகழ்ந்திட வேண்டும்.
குழந்தைப் பருவ முதல் நமது நாட்டின் எல்லைகளைத்
தெரிந்து கொண்டு, பின்னர் அவற்றைக் காத்திட
வேண்டும்:
வடக்கில் இமயமலை; தெற்கில் குமரிமுனை; கிழக்கிலும்
மேற்கிலும் கிடக்கும் பெரிய கடல்.. அவற்றைக் காப்பது
நமது கடமை என்று உணர வேண்டும்.
இந்திய நாடு வேதமுடையது; நல்ல வீரர் பிறந்தது; சேதமில்லாதது என்பதை மனத்தில் உணர்த்தி இதைத் தெய்வம் என்று கும்பிட வேண்டும்!
அக்காலந்தொட்டே, சாதி சமயப் பிணக்குகள் இருப்பதைக் கண்டு மனம் புழுங்கிய பாரதியார், இந்நோய், குழந்தைகளையும் பற்றிவிடக் கூடாதே என்று,
”சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்த மதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்!
உயிர்களிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா!
என்று வலியுறுத்தினார்.
குழந்தைகளுக்கு இவற்றையெல்லாம் யார் சொல்லிக் கொடுக்க முடியும்? பாரதியார் வழி காட்டினார். இவற்றைச் சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை; ஆசிரியர்களின் தலையாய கடமை; கல்வி நிலையங்களின் பொறுப்பு. இதைச் செய்யத் தவறாது நமது எதிர்காலத்தைச் சிறந்த முறையில் உருவாக்குவோம்!