கடவுள் என்பவன் எதுவும் அல்ல. கடவுள் என்பவன் யாரும் அல்ல. ஏதவன் ஊர், ஏதவன் பேர், யார் உற்றார்? யார் அயலார்? உற்றவர்களும் இல்லை; அயலாரும் இல்லை. அதனால் கடவுளிடம் அந்தந்த பாவனைகள் வருவதற்கு காரணம் அவரவர்களுடைய பழைய வாசனைகள். உன்னுடைய முற்பிறவிகளில் கடவுளை எந்த மாதிரி relationshipல் நினைத்து கொண்டிருந்தாயோ அந்த மாதிரி relationship வரும். பழைய வாசனையை வைத்து கடவுளை குருவாக பார்க்கத் தோன்றும். கடவுளை அப்பாவாக பார்க்கத் தோன்றும். கடவுளை அரசனாக, ஆண்டியாக, காதலனாக, கணவனாக பார்க்கத் தோன்றும்.
இறைவனிடத்தில் நீங்கள் அடைகிற அந்த அனுகூலம், அனுபூதி, அந்த relationshipதான் உங்களை உயர்த்தும். இது உங்களுடைய பழைய வாசனைகளை வைத்து உங்களுக்கு வரும். அவரவர் விதிவழி அடைய நின்றனரே, அவரவர் தத்தமது அறிவு அறிவகை சென்று அடைய நின்றனரே – அவரவர்கள் அவரவர்களுடைய அறிவு செல்கிற பாதையில் சென்று அடைய நின்றார்கள். விதி கொண்டு செல்கிற பாதையில் சென்று அடைகிறார்கள். அதுதான் நம்மாழ்வார் சொல்கிற விஷயம்.
ஆஞ்சநேயன் ராமனுக்குத் தாசனாக தன்னை வைத்துக் கொண்டிருந்தான். குசேலன் கிருஷ்ணனை நண்பனாக வைத்திருந்தான். மீரா கிருஷ்ணனை காதலனாக உருவகப்படுத்திக் கொண்டிருந்தாள். ஆண்டாள் கண்ணனை கணவனாக வரித்துக் கொண்டிருந்தாள். ஆண்டாளுடைய பிரார்த்தனை என்ன? "மனிதனைத் திருமணம் செய்து கொண்டு நான் இந்த உலகத்தில் வாழ மாட்டேன். யாகம் நடந்து கொண்டிருக்கிற போது அந்த யாகத்தினுடைய அவிர்பாகத்தை நரி எடுத்துக் கொண்டு போவது போல, என்னுடைய உடலை ஒரு மனிதன் தீண்டுவதா? ஒரு மனிதனுடன் நான் மனைவி என்ற உறவில் வாழ்வதா? கண்ணா! நீ தான் எனக்கு எப்போதும் காதலனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டும் மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன் கண்டாய் " என்று வேண்டினாள். அது தான் நம்முடைய சமய தத்துவம். அவள் இறைவனைக் கணவனாகவே பாவித்ததால்தான் இன்று அவளை பெருமாள் கோவிலில், பெருமாள் சன்னிதிக்குப் பக்கத்தில் வைத்து, தாயாராக நாம் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். உலகத்து வழக்கத்தில் கல்யாணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்திருந்தால், ஆண்டாளை யார் நினைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
நீ இறைவனிடத்தில் அவனையே யாசிக்கிற உறவு உன்னையும் கூட இறைவனாக மாற்றிவிடுகிறது. அதற்கான பக்குவம் தானாக வந்துவிடும்.
நீங்களெல்லாம் இன்னும் உடல்களாக இருக்கிறீர்கள். உடல் ஆத்மாவாக பரிணமிக்கிற வித்தை இருக்கிறதே அதற்கு பெயர் தான் ஆன்மீகம். The body evolving or the body understanding that it is no more the body and it is the Spirit,, இந்த மெய் (உடல்) பொய் என்று தெரிந்து கொள்கிற ஞானம் எதுவோ அதுதான் மெய்ஞானம். அந்த ஞானம்தான் உங்களை உலகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் நிலைநிறுத்துகிறது. துருவன், குசேலன், பிரகலாதன், மீரா, ஆண்டாள் போன்று ஏதாவது நிலையை அடையலாம். அது தான் உங்களை சாஸ்வதமாக நிலைநிறுத்தும். பகவத் கீதையில் கிருஷ்ணன் என்ன சொல்கிறான்? உலகத்தில் நீங்கள் பார்க்கிற முதலாளி, தொழிலாளி, கணவன், மனைவி, போன்ற உறவுகள் அந்த ஒரு ஜன்மத்தில் அந்த உடலுக்குள்ள உறவுகள். ஆனால் கிருஷ்ணனிடத்தில் நீங்கள் ஒரு ஜன்மத்தில் "நீ எனக்கு அப்பா" என்று சொல்லிவிட்டால், நீங்கள் எத்தனை ஜன்மம் எடுத்து வந்தாலும் அவன் உங்களுக்கு தந்தையாகவே இருப்பான். கிருஷ்ணனிடத்தில் "நீ எனக்கு எஜமானன்" என்று சொல்லிவிட்டால் எத்தனை ஜன்மம் எடுத்தாலும் அவன் உனக்கு எஜமானனாகவே இருப்பான். இது தான் பகவத் கீதையில் கிருஷ்ணன் சொன்ன concept. இந்த எண்ணங்களில் குழப்பம் இல்லை என்பதற்காக சொல்ல வந்தோம். இன்னும் சொல்லப்போனால் இந்த மாதிரி எண்ணங்கள்தான் நீங்கள் ஆன்மீகத்தில் சரியான படிநிலையில், சரியான அடித்தளத்தில் சென்று கொண்டிருக்கிற பக்குவங்கள் என்றும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இறைவனை நீங்கள் ஏதாவது ஒரு உறவு முறையில் பார்க்கிறீர்கள் என்றால், உடல் சம்மந்தப்பட்ட உணர்வினை விட்டுவிட வேண்டும். "உடலுக்குள் இருக்கிற ஒளிக்கு" என்ற பாவனை என்பதை நீங்கள் உணர வேண்டும். You should not get confused with the body. அந்த மாதிரியான குழப்பமான எண்ணம் மட்டும் உங்களுக்கு வராமல் இருந்தால் நீங்கள் மேலே சென்றுவிடலாம். இந்த மாயைகளைக் கடந்த பக்குவ நிலைதான் மாயவனை அடைகிற நிலை. அதுதான் வைகுந்த பதவியை நீங்கள் பெறுகிற நிலை. கொஞ்சம் கொஞ்சமாக மேலே வரவேண்டும். ஆவடியிலிருந்து மூன்று படித்த பெண்கள், நான் மண்ணடியில் இருந்த போது, என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்கள் என்னிடம் "நாங்கள் கிருஷ்ணனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்" என்று சொன்னார்கள். நான் கிண்டலாக, "என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்களேன்" என்றேன். அவர்கள் "என்ன அங்கிள், இப்படி சொல்கிறீர்கள்?" என்றனர். நான் அவர்களிடம் சொன்னேன், "கிருஷ்ணனுக்கு பல்லாயிரம் வயது. அவனைக் கல்யாணம் செய்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? கிருஷ்ணன் கையில் தாலியை வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறீர்கள். கிருஷ்ணன் என்பது ஒளி. கிருஷ்ணனை ஒளியாக நினைத்து அவனை எப்போதும் தேட வேண்டும்".
ஆண்டாள் ரங்கநாதரைத் திருமணம் செய்து கொண்டாள், ரங்கநாதர் ராமர் பூஜை செய்த காலத்திலிருந்து இருக்கிறார். இதை நீங்கள் உங்களது உலகியல் வழக்கத்தில் நினைக்கக் கூடாது. கிருஷ்ணன் என்று சொல்லக்கூடிய உடல் இன்று இல்லை. ராமன் என்று சொல்லக்கூடிய உடல் இன்று இல்லை. இறைவன் ஜோதி. ஜோதியோடு இணைகிற ஜீவாத்மா பரமாத்மா தத்துவத்தில் நீங்கள் பார்த்தால்தான் ஜீவாத்மா என்ற ஒளி, பரமாத்மா என்ற ஒளியோடு சங்கமிக்கிற விந்தை புரியும். ஏனெனில் இது உடல்களின் சம்பந்தம் அல்ல. ஒளியினுடைய சங்கமம். ஒளி மட்டுமே சத்தியம்.
“