பாபா பதில்கள் – விதி மதி

திருவள்ளுவர் இரண்டு concepts சொல்கிறார். ஒன்று, ஊழிற் பெருவலி யாவுள? ஊழைக் காட்டிலும் மிக்க வலிமை உடையவை உண்டா? இரண்டாவது, ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். விடா முயற்சியுடன் ஒரு வேலை செய்தால் வெற்றி நிச்சயம் என்று சொல்கிறார்.

எல்லாமே விதிதான் என்றால் அப்போ அதுக்கு மேலே ஒண்ணும் இல்லை என்று எண்ணி மனுஷன் தோற்றுப்போய்விடுவான். அதனால் நம்முடைய முயற்சிகளினால் நம்முடைய அறிவை வைத்து நாம் விதியை மாற்றிக் கொள்ள முடியும். முடியும் என்கிற ஒரு concept இருந்தால்தான் ஜனங்கள் கொஞ்சம் தளர்வற்ற நிலையில் இந்த உலகத்தில் எதையாவது சாதிக்க முனைவார்கள். இல்லை எனில் பிறந்தவுடன் ஜாதகத்தைப் பார்த்து, ‘ஜாதகத்தில் இந்த இந்த டைம் மோசமாக இருக்கிறது’ என்று அப்படியே ஒரு பஞ்சாங்கம் மாதிரி மாட்டி வைத்து விடுவார்கள். அதனால் நம்முடைய பெரியவர்கள் இரண்டிற்கும் option கொடுத்தார்கள்.

அப்போ விதியை ‘ஊழிற் பெருவலி யாவுள?’ என்று ஏன் சொல்கிறார்கள் என்றால் to accept the reality. அதாவது உன்னுடைய யத்தனம், பிரயத்தனத்தையும் மீறி ஏதோ ஒரு பவர் இருக்கிறது. அது இந்த பிறவியில் நீ நல்லவனா இருந்தாலும்கூட போன பிறவியில் என்ன செய்தாய் என்பதை வைத்து இருக்கிறது. அப்படி சொல்வதாலேயே அதில் ஒரு indirect catch இருக்கிறது. போன பிறவியில் நீ தப்பு பண்ணியிருக்கிறாய்; அதனால்தான் இந்த பிறவியில் நீ கஷ்டப்படுகிறாய். அதனால் இந்த பிறவியில் நல்லது செய். அடுத்த பிறவியில் நல்லது நடக்கும் என்று உன்னை தார்மீகமாக வழிநடத்த ஒரு catch இருக்கிறது.

சத்தியநாராயண பூஜை செய்கிற போது, அந்த கதையில், சில விஷயங்களை follow செய்யாததால் கஷ்டம் எல்லாம் வந்தது; சரி செய்தவுடனேயே லாபம் எல்லாம் வந்தது என்று வரும். அதே மாதிரி எந்த ஒரு ஸ்தோத்திரத்தை நீங்க படிக்கும்போதும் ‘ஒரு தடவை படித்தாய் என்றால் இந்த மாதிரி நடக்கும். இரண்டு தடவை படித்தாய் என்றால் இப்படி நடக்கும்’ என்பார்கள். குதிரைக்கு முன்னால் கேரட் பிடிச்சா அது வேகமாக ஓடுமாம். அந்த மாதிரி உன்னை நல்ல வழிக்கு கொண்டு வருவதற்காக நம்முடைய பெரியவர்கள் வைத்திருக்கிற மனோதத்துவ ரீதியான உத்திகள்.

அப்போ இது எல்லாமே நம்மை உருப்பட வைப்பதற்காக, அறிவு பூர்வமாக நம்முடைய முன்னோர்கள் வைத்த சித்தாந்தங்கள். மதி என்பதை அறிவு என்று எடுத்துக் கொள்ளலாம், பகவான் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். சந்திரனின் அம்சம் அல்லது அம்பாள் என்று எடுத்துக் கொள்ளலாம். விதி மதியால் வந்தது என்பதற்குக் கூட இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். தெய்வத்தின் துணையை கொண்டு விதியின் போக்கை மாற்றிக் கொள்ளலாம். இது இப்படித்தான் இருக்கும், அது அப்படித்தான் இருக்கும் என்று நாம் பயந்து கொண்டு உட்கார்ந்து இருப்பதை விட நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் we do not have an inventory of our past. What do you know? ஏன்னா பகவானுடைய படைத்தல், காத்தல், அழித்தலோடு, மறைத்தல் என்பது அவனுடைய அனுக்கிரகம். அந்த மறைக்கப்பட்டதாலே நமக்கு பல விஷயங்கள் தெரியாமல் இருக்கும். அது ஒரு வகையில் நல்லதுதானே. மறைக்கப்படாமல் இருந்தால் பிரச்சனை வரும்.

அதனால் பகவான் past, future eventsஐ எல்லாம் தெரியாமல் வைத்து அதனுடைய விளைவுகளை கொஞ்சம் கொஞ்சம் அனுபவிக்க வைக்கிறார். அது கூட முழுமையாக அனுபவிக்க வைப்பது இல்லை. சும்மா sample மாதிரிதான் அனுபவிக்க வைக்கிறான். அதுவே நமக்கு ரொம்ப ஜாஸ்தி மாதிரி தெரிகிறது.

இந்த உலகத்தில் வந்த எல்லாருமே தங்களை விதிக்கு ஆட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ராமர் வனவாசம் போகவில்லையா? பஞ்சபாண்டவர்கள் கஷ்டப்படவில்லையா? அரிச்சந்திரன் கஷ்டப்படவில்லையா? நளசக்ரவர்த்தி கஷ்டப்படவில்லையா? ஏன்! இன்றைக்கு நம் காலத்தில் வந்த எத்தனையோ மகான்கள் ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், பரமாச்சார்யார் எல்லாருக்கும் ஏதோ ஒரு வியாதி வந்து கஷ்டப்படவில்லையா? எல்லாரும்தான் கஷ்டப்பட்டார்கள்.

மனிதர்கள் மனோதத்துவ ரீதியாக சந்தோஷத்தைத்தானே தேடுகிறார்கள். துக்கம் வரவே கூடாது என்பதுதான் அவர்களின் வாழ்க்கைத் தத்துவமாக இருக்கிறது. யார் ஒருத்தன் இரண்டும் வரும் என்று நினைத்துக் கொள்கிறானோ அவன் பதட்டப்படமாட்டான். வெயிலும் வரும் மழையும் வரும் அப்படின்னு தெரிந்து கொண்டால் வம்பே கிடையாது. அப்படி வருவதுதான் நல்லதே கூட. சென்னையில் அவ்வளவு பெரிய மழை பெய்தது. நீங்கள் எல்லாம் எப்ப வெயில் வரும் என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள். வெயில் வரும். எப்ப மழை வரும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். But this change is the law of life. மாற்றம் இருந்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வெறும் ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டிருந்தால், யாராவது காரம் கொண்டு வரமாட்டார்களா என்று தோன்றும். So changes are always good. அப்படி இருந்தால்தான் ரசிக்க முடியும். கஷ்டம் இருந்தால்தான் சுகத்தோட அருமை நமக்குத் தெரியும். அப்போ ஊழ் என்பது நம்முடைய முன்வினைகளினுடைய அறுவடை; இன்பமோ துன்பமோ ஒரு அறுவடை அது.

அப்போ ஒரு மனித சரீரம் என்று வந்தவுடனே அதுக்கு கர்மா இருக்கிறது அப்படின்னு தெரிந்து கொண்டால் நமக்கு experiences வருகிற போது நமக்கு வருத்தம் வராது.

கடவுள் பெயரைச் சொல்ல வேண்டும். எனக்கு இந்த உலகத்தில் ஒன்றுமே தேவையில்லை என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் நீ கூட வழிப்படப்படுவாய்.

About The Author