வாருங்கள்! வலிமையான இந்தியாவிற்கு வழி கோலுங்கள்!
நம்முடைய தேசத்தில் எல்லா நிலைகளிலும் நிறைய மாற்றங்கள் வரவேண்டும். இதற்கு நீங்கள் எல்லாம் நிறைய படிக்க வேண்டும். டி.வியில் சினிமா பாட்டு பார்ப்பதை கம்மி செய்துவிட்டு நியூஸ் கேளுங்கள். அப்போதுதான் உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியும். ஓரளவிற்கு கொஞ்சம் அழுத்தமான விஷயங்களை, பொருளாதாரம், அரசியல் இப்படிப்பட்ட விஷயங்களை படிக்கணும். சீரியல் பார்ப்பது வேஸ்ட். சினிமா பத்திரிகை படிப்பதோ, சினிமா பாட்டு பார்ப்பதையோ தவிர்க்கலாம். கொஞ்சம் ஆழமான விஷயங்களை சிந்தியுங்கள். மற்ற நாடுகள் எல்லாம் இப்படித்தான் உருப்பட்டன.
நம்முடைய எல்லா சித்தாந்தங்களும் பொய்யானவை. ஊழல் என்பது உயர் நிலையிலிருந்து கீழ் நிலை வரைக்கும் பாய்கிறது. இந்திய நாட்டில் நேர்மையான தலைமை அதிகம் வரவில்லை. வந்தவர்கள் இந்தியாவை குழப்பி, தவறான வழிக்கு கொண்டு சென்று விட்டார்கள். இந்தியா விவசாயத்தில் போயிருக்க வேண்டும். ரூர்கேலா, துர்காபூர் என்று அங்கெல்லாம் ஃபேக்டரி கொண்டு வந்து அதில் இருக்கும் அத்தனை தொழிலாளிகளுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. நீ ஒரு ஃபேக்டரி நடத்துகிறாய். உனக்கு பணம் இல்லைன்னா மூடிவிடுகிறாய். ஆனால் கவர்ன்மென்ட் நஷ்டத்தில் இருக்கிற ஃபேக்டரியை எல்லாம் நடத்திக்கொண்டிருக்கிறது. அது உன்னுடைய பணத்திலிருந்து, ஜனங்கள் கட்டுகிற வரிப்பணத்திலிருந்து போகிறது. இந்தியாவின் பாலிசி தவறு. இந்தியாவிற்கு தொழில்கள் உதவாது. நீங்கள் என்ன செய்திருக்கணும்? கிராமங்களை ஒழுங்கு செய்திருக்க வேண்டும். கிராமத்தில் விவசாயம், கிராமத்தில் இருப்பவர்களுக்கு ஆஸ்பத்திரி, படிப்பு, இப்படி எல்லா வசதியும் செய்துகொடுத்து அவங்களுக்கு மீதி 6 மாதம் வருமானம் இல்லாத போது கூட வருமானம் வருகிற மாதிரி வழி காட்டியிருக்க வேண்டும்.
இந்தியாவில் main cityயில் எல்லாம் நிறைய பிராப்ளம் வருகிறது பார்! மெட்ராஸில் இன்றைக்கு இத்தனை லட்சம் மக்கள் எங்கிருந்து வந்தனர்? எல்லாம் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். கிராமத்தில் இருந்தால் 30 ரூபாய் கூட கூலி கிடைப்பதில்லை. இங்கு வந்தால் ரூ.80 சித்தாள் வேலைக்கு. மேஸ்திரிக்கு ரூ150. பெரிய மேஸ்திரிக்கு ரூ.250. அவன் வராமல் என்ன செய்வான்? அதனால் நிறைய பேர் இங்கு வந்துவிட்டார்கள். கழிப்பு வசதி இல்லை. தண்ணீர் இல்லை. அதனால்தான் பிரச்சனைகள். எல்லா மெட்ரோபாலிடனிலும் இந்த பிராப்ளம் வந்ததற்கு காரணம் இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தில் இருந்த குழப்பங்கள்.
அதை எல்லாம் விட்டு விடுவோம். ஏழையோ, கோழையோ நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம்தானே! நமக்கு தேசப்பற்றே கிடையாது. இந்தியா முன்னுக்கு வரவேண்டும் என்றால் ஒரு நல்ல தலைமை தேவை. தலைவன் ஆகாயத்திலிருந்து வர மாட்டான். உங்களிலிருந்துதான் வர வேண்டும். உங்களிலிருந்து வரவேண்டும் என்றால் நீங்கள் படித்தால்தானே! நாலு விஷயம் தெரிந்து கொண்டால்தானே!
தயாரானால்தானே! நாலு ஜனங்க உங்கள் பின்னால் வருகிற மாதிரி பண்புகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டாமா? இதை எல்லாம் செய்தீர்கள் என்றால் உங்களிலிருந்து யாராவது வருவார்கள். சைனா பாருங்கள்! நம்மை விட ஒன்றரை மடங்கு ஜனத்தொகை அதிகமுள்ள நாடு. இன்றைக்கு உலகத்திலேயே பணக்கார நாடு. நாம் எப்போது பார்த்தாலும் ‘ஜனத்தொகை இந்தியாவில் ஜாஸ்தி. அதனால்தான் முன்னுக்கு வரவில்லை’ என்று தவறாகப் படித்துக் கொண்டிருக்கிறோம். ஜனத்தொகை ஜாஸ்தியாக இருக்கிற சைனா இன்றைக்கு எல்லாரையும் அடித்துவிட்டு மேலே வந்து கொண்டிருக்கிறது. நல்ல பொருளை கொடுக்கிறார்கள். கம்மி விலைக்கு கொடுக்கிறார்கள். ஏமாற்றுவது இல்லை. நமக்கு இன்னும் தேசப்பற்றும் வரவில்லை. நல்ல தேசியத் தலைமையும் இல்லை. உலக அறிவும் இல்லை. பொருளாதாரமும் இல்லை. ஜாதி, மதம் என்று அடித்துக்கொண்டு சாகிறோம். இது போக, இன்னும் டைம் வேஸ்ட் பண்ணுவதற்காக சினிமா இருக்கிறது. குடியில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். தெளிவான சிந்தனைகள் இல்லை.
(மீதி அடுத்த இதழில்)
“