திருப்பதி வெங்கடேசுவரருக்கு ஹைதர் அலி, எட்டு கிலோ தங்கக் காசு மாலை அளித்தார். அது இன்னும் அலங்காரத்தில் பயன்படுத்துப்படுகிறது.
நூறாண்டுகளுக்கு முன் ஒரு முஸ்லிம் அளித்த பெரிய தங்கப்பதக்கமும் அலங்காரத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அண்மையில் கூட ஹைதராபாத்தைச் சேர்ந்த மீரான் சாஹிப் என்பவர் 15 கிலோ எடையுள்ள 108 தங்க மலர்களை அளித்தார்.
இவை வாரமுறை செவ்வாய் அன்று செய்யப்படும் அஷ்டதவபாதசேவை தெய்வத்தின் பாதத்தில் அர்ச்சிக்கப்படுகின்றன.
இவரே திருச்சானூர் பத்மாவதி தேவிக்குத் தங்கக் கோப்பை ஒன்று அளித்திருக்கிறார். அது இன்னும் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
மதுரையில் சிவபெருமான் குதிரை விற்க வந்த திருவிளையாடல் உற்சவம் நடக்கிறது. அன்று அவருக்கு லுங்கி உடுத்தி, நைவேத்தியமாக ரொட்டியும் பாலும் படைக்கப்படுகிறது.
நாகர்கோவில் இடலாக்குடி முஸ்லீம்கள் சுசீந்திரம் கோயில் விழாவில் பங்கேற்கின்றனர்.
கோவை குறிச்சி செல்லப்பாண்டி அம்மன் கோயிலுக்கும் சேலம் மின்னக்கல் கோபாலகிருட்டிணன் கோயிலுக்கும் திப்புசுல்தான் கொடையளித்துள்ளார்.
18ஆம் நூற்றாண்டில் குற்றாலநாதருக்கும் நெல்லை காந்திமதி அம்மனுக்கும் திருவிழா கொண்டாட முஸ்லிம்கள் பணம் திரட்டித் தந்துள்ளனர்.
கிழக்கிந்தியக் கம்பெனி படையெடுப்பால் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் கோயில்கள் சேதமடைந்து பூசையில்லாதிருந்த நிலையில், கர்நாடக நவாப் அமீகாத் சாயபு பூசை நடைபெற ஏற்பாடு செய்தார்.
சிதம்பரத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணம் இராமர், பல ஊர்களுக்குச் சென்று கிள்ளையில் கடலாடி வரும் உற்சவத்தை நடத்துவோர் முஸ்லிம்கள்.
வடஆர்காடு சோழிங்கர் அருள்மிகு பக்தவத்சல சுவாமி கோயிலில் ஆண்டாள் திருமேனி இல்லாதிருப்பதை அறிந்து 1715ஆம் ஆண்டு அதை உருவாக்கிப் பிரதிட்டை செய்ய உதவியவர் மொகாலாய மன்னர் பரூக் சீயர்.
அமர்நாத் குகையில் பனிலிங்கம் இருப்பதைக் கண்டுபிடித்தவன், பூட்டா மாலிக் என்ற ஆடு மேய்க்கும் சிறுவன்.
இன்றைக்கும் பக்தர்கள் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கையின் ஒரு பகுதி, பூட்டா மாலிக் குடும்பத்தினருக்கு அளிக்கப்படுகிறது.
இணைந்து வாழந்தாக வேண்டிய இரு சமூகத்தவரிடையே மண்டை ஓடுகளால் மதில்களை எழுப்புகின்ற கொற்றர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய உறவுப் பாலங்கள் இவை.
ஒருமுறை ஒருவர் பாபா ஃபரீத் என்ற ஞானிக்குக் கத்திரிக்கோலைப் பரிசளித்தார். அவரிடம் பாபா ஃபரீத் ‘இதற்கு பதிலாக ஊசியைக் கொடுங்கள். ஏனென்றால், நான் இணைக்க வந்தவன். பிரிக்க வந்தவன் அல்லன்’ என்றார். இன்றைக்கு இரு சமூகத்துவரையும் வழிநடத்திச் செல்ல, பாபா ஃபரீதுகள் தேவைப்படுகிறார்கள்.