வாழ்க்கையில் ஒரு காலகட்டம் மிக நெருக்கடியானதாக இருக்கலாம். நிறைய துன்பங்களையும் சோதனைகளையும் சந்திக்க நேரிடலாம் அல்லது மிக ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியிருக்கலாம். எப்பேர்ப்பட்ட இக்கட்டான நிலையாக இருந்தாலும் தர்ம வழியிலிருந்து மாறிச் செல்லக்கூடாது.
உண்மையிலிருந்து ஒரு பொழுதும் நழுவி விடக்கூடாது, நீ தோல்வியை சந்திக்கவேண்டிய சூழ்நிலைக்கு அழைத்துச் செல்லப்பட்டால் கூட சத்தியவழி நேர்வழியிலிருந்து தடம் புரளக்கூடாது. தோல்வியை புறக்கணித்து வெற்றியைத் தழுவ வேண்டும் என்ற ஆசையின் காரணமாக தவறான வழியை நாடக்கூடாது. ஒரு சிறு வேலையைச் செய்தால் கூட அது சரியா, தவறா என்று யோசிக்க வேண்டும். பெரிய விஷயமாயிருந்தால் தான் இப்படி யோசிக்க வேண்டும் என்று அவசியமில்லை, நேர் வழியை விட்டுப் பாதை மாறிச் செல்வது, வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடக்கூடும். தோல்வியே அடைவதாயிருந்தால் கூட, நேர்வழியிலேயே சென்றால், நாம் மறுபடியும் வெற்றிபெற வாய்ப்பு கிடைக்கலாம். நேர்வழியை உதறித்தள்ளிவிட்டு தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தால் நம்மை உலகம் எதிர்காலம் முழுவதிலும் ஒதுக்கித் தள்ளிவிடக்கூடிய அபாயம் ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை தேவை.
மஹாபாரத குருக்ஷேத்திர யுத்தகளத்தில் பாண்டவர் சேனையும் கௌரவர் சேனையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றன. நடுவில் அர்ஜுனன் தேரில் இருந்ததால், இரண்டு சேனைகளும் போரை ஆரம்பிக்கத் தயாராக இருந்தன. அந்த நேரத்தில் தருமபுத்திரர் தன்னுடைய கவசம், வில், அம்பராத்தூணி, காலணி, கேடயம் எல்லாவற்றையும் கழற்றிவிட்டு நேராக கௌரவர் சேனையை நோக்கி நடந்து சென்றார். தங்களிடம் சரணடையத்தான் அவர் வருகிறார் என்று நினைத்து, கௌரவ வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஆனால் அவர் ஏன் வெறுங்காலுடன் எதிரியின் சைன்யத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் என்பதற்கான காரணம் கிருஷ்ணன் ஒருவருக்குத்தான் புரிந்தது, உடனே அவர் மற்ற நான்கு தம்பிகளைப் பார்த்து, "நீங்கள் எப்பொழுதும் உங்கள் அண்ணன் சொல்படியே, அவர் செல்லும் வழியிலேயே சென்று வந்திருக்கிறீர்கள், அதனால் இப்பொழுதும் நீங்கள் தருமபுத்திரரை பின்பற்றிச் செல்லுங்கள். அவர் என்ன செய்தாலும் அதை ஒத்துக் கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தினார். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும், எல்லாவற்றையும் களைந்துவிட்டு, தருமரைப் பின் தொடர்ந்து சென்றனர். இதைப்பார்த்த பாண்டவ சேனை வீரர்கள் சிறிது மனம் தளர்ந்தாலும், தருமபுத்திரர் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டார் என்று நம்பினார்கள்.
எல்லோருடைய கண்களும் தம்மை வியப்பினால் உற்றுநோக்க, தருமர் நேராக பீஷ்மரிடம் சென்று,." பிதாமகரே, நீங்கள் எங்களுக்குத் தந்தை போல இன்று இப்போரை ஆரம்பிக்க அனுமதியளியுங்கள், எங்கள் பிதா ஸ்தானத்தில் உள்ள உங்களுடன் எங்களால் போரிட முடியாது. நீங்கள் அனுமதியளித்து ஆசிர்வதித்தால் தான் எங்களால் சண்டையிட முடியும்" என்று கேட்டார். இதைக் கேட்ட பீஷ்மர் இக்கட்டான அந்த நேரத்தில் கூட தருமர் நேர் வழியினின்று விலகாமல் மிக உயர்ந்த முறையில் நடந்து கொண்டதற்காக மனம் உருகி "பாண்டவர்களே உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்" என்று ஆசிர்வதித்தார்.
பிறகு பாண்டவர் ஐவரும் தங்கள் குரு துரோணாச்சாரியாரிடம் சென்று "குருவுடன் சண்டையிடுவது மிகப்பெரிய பாவம். நீங்கள் அனுமதி தந்தால் தான் உங்களுடன் போரிட முடியும் தயவு செய்து அனுமதியளியுங்கள்" என்று வேண்டினார். துரோணர் மனம் நெகிழ்ந்து தன்னை எப்படி வெற்றிகொள்ள முடியும் என்ற ரகசியத்தையும் அவர்களுக்குக் கூறினார்.
வள்ளுவர் வாக்கில் இக்கருத்து எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது:
"யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற" உண்மையை விடச் சிறந்தது வேறெதுவுமில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்.