பாபா பதில்கள்-தீண்டாமை

தீண்டாமை

ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டு நமது துணைக்கண்டம் முழுவதும் தவிப்புற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் சித்தமய யோகி தென்தமிழ்நாட்டில் திருத்தலப்பயணம் மேற்கொண்டிருந்தார். மனிதனை மனிதன் இழிவு செய்யும் கொடுமையான சாதிப் பழக்க வழக்கங்களைக் கண்டு வருந்தினார். ஒரு சிற்றூரில் சின்னான் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கிழவர் ஒருவரிடம் சித்தமயயோகி கூழ் வாங்கிப் பருகிவிட்டு மரத்தடியில் தியானத்தில் அமர்நதிருந்தார். அவருக்கு ஓலை விசிறியால் வீசிப் புழுக்கத்தின் கொடுமையைத் தணிக்கும் தொண்டில் ஈடுபட்டிருந்த சின்னான் சிறிது நேரத்தில் அசதியால் அங்கேயே படுத்துத் தூங்கிப் போனார்.

பெரும் பணக்காரரான ஒரு அன்பர் யோகியைத் தரிசிக்க அங்கே வந்து சேர்ந்தார். யோகியின் திருமுகத்தையே பார்த்தவாறு கை கூப்பியவண்ணம் வந்த அவர், அருகே படுத்திருந்த சின்னானைக் கவனியாததால் சின்னானின் கால் மீது பணக்காரரின் கால் பட்டு இடறிவிட்டது. தாழ்ந்த சாதிக்காரனின் தீட்டு பட்டுவிட்டதாக அவர் ஆத்திரமுற்றார். பதற்றத்துடன் எழுந்த சின்னானை ஆத்திரத்துடன் பார்த்த அவர், யோகியின் தியானம் கலையாத வண்ணம் தனது ஆட்களைவிட்டு சின்னானைக் கட்டி இழுத்து வருமாறு கூறிச் சென்றார். சின்னானை மரத்தில் கட்டி வைத்து அடிப்பதற்காக அவ்வூர் வழக்கப்படி ஏற்பாடானது. தண்டனை நிறைவேற்றப்பட சாட்டை உயர்த்தப்படும் நேரம்.. சாமீ… என்ற சின்னானின் அபயக்குரலின் எதிரொலியாக அங்கு வந்த யோகியாரின் சிரிப்பு கேட்டது.

அனைவரும் யோகியார் இருந்த திசையை வணங்கினர். பணக்காரர் பூமியில் விழுந்து வணங்கி எழுந்து நின்றார். யோகியார் அவரிடம், "அப்பா அவனது கால் உன் மேல் பட்டாலும் சரி, உனது கால் அவன் மீது பட்டாலும் சரி, அவனுக்குத் தான் தண்டனை கிடைக்கிறது. உன் மேல் படுவதாலேயே அவன் சாட்டையடி வாங்கப் போகிறானென்றால் தீண்டத்தகாதவன் நீயா அவனா? இதை எண்ணித்தான் சிரித்தேன். இன்னொரு விஷயம்… என்னைப் பார்க்க நீ ஓடோடி வந்தாய்! ஆனால் சாதித்திமிர் உன் முயற்சியைத் தடுத்தது. நான் உன்னைப் பார்க்கும் முன்பே நீ சின்னானைக் கட்டியிழுத்து வரச்செய்துவிட்டாய். அதாவது என்னை மறந்தே விட்டாய். ஆனால் சின்னானுக்காக நானே உன்னைத்தேடி இங்கே வந்து உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். உனக்கு இப்படி ஒரு உதவியைச் செய்திருக்கும் சின்னான் எந்த வகையில் உன்னைவிடத் தாழ்ந்தவன்..?" என்றார். உடைந்த குரலுடன் அழுதவாறு பணக்காரர் "சாமி ! இனி எனக்கும் என் பரம்பரைக்கும் சாதித்திமிர் வரவே வராது" என்றவாறு யோகியாரின் கால்களில் விழுந்தார்.

About The Author