கடவுளை நீங்கள் எந்த உறவாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
துருவன் கடவுளைத் தந்தையாக ஏற்றுக்கொண்டான். துருவனின் தந்தை அவனிடம் அன்பாக இல்லை. சித்தியின் குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தான். சிறுகுழந்தையான துருவன் தந்தை தன்னை கவனிக்கவில்லையே என்று அழுதபோது, நாரதர், "உன் தந்தை உன்னை கவனிக்கவில்லை என்றால், நீ ஏன் கவலைப்படுகிறாய்? நாராயணன்தான் உலகிலுள்ள அனைவருக்கும் தந்தை! அவனை நீ தந்தையாகக் கேள்! அவன் உன்னை மடியில் வைத்துக் கொண்டாடுவான்" என்று கூறினார். அவன் காட்டிற்குச் சென்று "நாராயணன்தான் வேண்டும்" என உட்கார்ந்து கொண்டான். நாராயணன் அவனுக்கு தரிசனம் கொடுத்து, துருவ நட்சத்திரமாக மாற்றி உலகத்தில் உள்ள அனைவரும் அவனைப் பார்க்கிற மாதிரி வைத்துவிட்டான்.
அப்போது இறைவனை நீ தந்தையாக ஏற்றுக்கொண்டால், நீ துருவனாக மாறுவாய். அவன் ராஜாவிற்கு பிள்ளையாக இருந்திருந்தால், ஒரு நாள் இறந்திருப்பான். இறைவனைத் தந்தையாக ஏற்றுக் கொண்ட காரணத்தினால் அவன் துருவனாக மாறினான். துருவன் என்று நான் சொன்னவுடனே உங்களுக்கு நினைவு வருகிறது பாருங்கள்!
இந்தமாதிரி ஒவ்வொரு பாவனையில் ஏற்றுக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். மீரா கடவுளிடம் கணவனாக, காதலனாக உறவு வைத்திருந்தாள். அதனால் மீரா என்றவுடன் உங்களுக்கு தெரிகிறது. ஆண்டாள் கடவுளிடம் கணவனாக உறவு வைத்துக் கொண்டிருந்தான். அதனால் ஆண்டாள் என்றவுடன் உங்களுக்குத் தெரிகிறது. ஆண்டாளுக்கு, பெருமாள் கோவிலில் பெருமாளுக்குப் பக்கத்தில் சிலை வைத்து நாம் தாயார் சன்னதி என்று சுற்றி வருகிறோம்.
எனவே, இந்த உலகத்தில் உள்ள உறவுகளைக் காட்டிலும் இறைவனிடத்தில் ஏதாவது ஒரு உறவினை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த உறவு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் Because God is nobody, God is nothing. He is everything. He is everyone. அப்படி ஒரு உறவை நீங்கள் வைத்துக்கொள்கிறபோது எத்தனை ஜன்மங்கள் ஆனாலும் உனக்கு அவனுடைய சகாயம் கிடைக்கும். நீங்கள் மோட்சத்திற்குப் போக அதுவே வழியாக மாறிவிடும். உலக வாழ்க்கையில் உங்கள் குடும்பத்தினரிடம் attachment வேண்டாம், love இருக்கலாம் என்று சொன்னேன். நீங்கள் love-ஐ இறைவனிடம் வைக்கவேண்டும். இந்த உலகத்தில் உள்ள உறவுகள் இன்னும் இன்னும் உங்களை பந்தங்களில் சிக்க வைத்து, இன்னும் இன்னும் பிறவிகளில் கொண்டு விட்டுவிடும். அப்போது இந்த உறவுகளை எல்லாம் விட்டுவிட வேண்டுமா என்று கேட்டால், அவ்வாறு விடக்கூடாது. பந்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் கடமையைச் செய்யலாம்.
உங்களுக்கு ஒரு அக்கா இருந்தால், நீங்கள் என்ன நினைக்க வேண்டும்? அருணகிரிநாதருக்கு ஒரு அக்கா இருந்தார்கள். அவர் கெட்டு அழியாமல் இருப்பதற்கு அவருடைய அக்காதானே புத்தி சொல்லி திருத்தினார்கள்! ஹேமநாத்திற்கு ஒரு அக்கா இருந்தாள்; கெட்டு அழிந்த ஹேமநாதனை அவருடைய அக்காதான் திருத்தினார்கள். எனவே, நீங்கள், என்னுடைய அக்கா கடவுளின் ஒரு வடிவமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்ளவேண்டும். உங்களுடைய பிள்ளையைப் பார்க்கிறபோது "பட்டினத்தார் பணத்தாசை பிடித்து அலைந்தபோது, சிவபெருமான் அவருடைய பிள்ளையாக வந்து "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்று எழுதி வைத்து அவரைத் திருத்தினாரே! அப்போது ஒரு வேளை என் பிள்ளை சிவபெருமானாக இருப்பானோ!" என்று நினைத்துக்கொள்ள வேண்டும். திருநீலகண்டருக்கு மனைவியாக வந்தார். அதன் மூலமாகக் கிடைத்த அனுபவத்தினால் அவர் ஞானியானார். காரைக்கால் அம்மையாருக்கு கணவனாக வந்தமையால் அவருக்கு கிடைத்த அனுபவத்தினால் அவர்களுக்கு ஞானம் கிடைத்தது.
இந்த உலகத்தில் நமக்கு ஏதோ காரண காரியங்களினால் வந்திருக்கிற உறவுகளைக்கூட நாம் கடவுள் தன்மை கொண்டவர்களாக மாற்றிக் கொண்டு அதையும்கூட நாம் கடைத்தேறுவதற்கு ஒரு மார்க்கமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.”