கடவுள் என்பவன் எந்த நிலையும் இல்லாதவன். ‘ஏதவன் பேர்? ஏதவன் ஊர்? யார் உற்றார்? யார் அயலார்?’ அவனுக்கு என்று ஒரு நிலை இருக்கிறதா? அல்லது அவன் இந்தக்காலத்தைச் சேர்ந்தவன் என்று உண்டா? முன்னைப் பழமைக்கும் பழம் பொருளாய் பின்னைப் புதுமைக்கும் பேற்றும் அப்பெற்றியனாக இருக்கின்றான்.
நம் குடும்பத்தில் இருக்கிற ஒருவரிடம் உறவாடுகிற மாதிரி கடவுளிடத்தில் உரையாட முடியும் என்கிற தன்னம்பிக்கை நமக்கு வந்தால் நாம் ஆன்மீகத்தில் படி நிலைகளை கடந்து வந்திருக்கிறோம் என்று அர்த்தம். ஆன்மீகத்தில் இது ஒரு நிலை.
ஆண்டாளுக்கு ரங்கநாதர் காதலன். ஆனால் ஆண்டாளுடைய தகப்பனாராகிய பெரியாழ்வார் இருக்கிறார் அல்லவா, அவருக்கு ரங்கநாதர் சின்னக்குழந்தை. அவரைக் கூப்பிட்டு ‘வாப்பா; குளிப்பா; லேட்டாகிவிட்டது’ என்பார். அவரை பல்லக்கில் தூக்கிக் கொண்டு வருகிற போது, ‘நீ ரொம்ப இளைத்த மாதிரி இருக்கிறாய். நீ நன்றாக இருக்க வேண்டும்’ என்று ‘பல்லாண்டு பல்லாண்டு’ பாடுகிறார். கிருஷ்ணனை குழந்தையாக பெரியாழ்வார் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆண்டாள் காதலனாக பார்க்கிறாள். திடீரென்று ஒரு நாள் குழந்தையாக தான் பாவித்த கண்ணன், தன் மகளை அழைத்துக் கொண்டே போய்விட்டார் என்கிறார். ‘ஒரு மகள்தன்னை உடையேன் அவனை திருக்கண்மால் கொண்டு போனான்’ சின்னப்பையன் என்று அவனை நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தால் என் மகளை அழைத்துக் கொண்டு போய்விட்டானே!’ என்பார் பெரியாழ்வார்.
பகழிக்கூத்தர் என்று ஒருத்தர் இருந்தார். அவருக்கு தீராத வயிற்றுவலி. திருச்செந்தூருக்கு போனார். வயிற்றுவலி நன்றாக ஆனது. உடனே ஒரு பாட்டு பாடினார். ‘பேராதரிக்கும் அடியவர் தம் பிறப்பை ஒழித்து வீடு பேறும் அளிக்கும் பிள்ளைப் பெருமான் என்றும் பேராளா’ என்று. யாரெல்லாம் நம்புகிறார்களோ அடியார் தம் பிறப்பை ஒழித்து அவர்களுக்கு பிறப்பு இல்லாமல் செய்துவிடுவான். வீடும் பேறும் மோட்சமும் தருவான். இந்த உலகத்தில் இருக்கிற போது அருள், பொருள் இரண்டும் தருவான். சின்னக்குழந்தை என்று பகழிக்கூத்தர் கொஞ்சுகிறார்.
சூரபத்மன் கடைசியில்தான் தெரிந்து கொண்டான். ‘பாலகன் என்று ஏமாந்தேன்’. இவ்வளவு நாளாக இவன் சின்னப்பையன் என்று ஏமாந்து விட்டேனே என்பான்.
வேறு ஒரு புலவர் பாடுகிறார். ‘அப்பா! நான் இவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறேன். நீ என்ன சின்னக்குழந்தையா?’ என்கிறார். ‘அன்னை நினது கன்னத்தில் மை இட்டு அமுதூட்டிய சிறுவன்தானோ’ அம்மா உனக்கு கன்னத்தில் மை இட்டு உனக்கு பால் சோறு ஊட்டிய சின்னப்பையன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? பார் உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. வள்ளி தெய்வயானை பக்கத்தில் இருக்கிறார்கள். ‘அன்னமும் மஞ்சையும் போலே இரு பெண் பிள்ளை கொண்ட ஆண்பிள்ளை நீயல்லவோ. அதனால் இனிமேல் உன்னிடம் சின்னப்பையன் என்று நினைத்து கேட்கமாட்டேன். உனக்கு வயது வந்து விட்டது. எனக்கு நீ நல்லது செய்தாக வேண்டும்’ என்கிறார்.
ஒருத்தருக்கு அவர் பெரிய ஆளாக நின்று தனக்கு அனுக்கிரகம் பண்ணவேண்டும் என்று தோன்றுகிறது. இன்னொருத்தருக்கு ‘நீ சின்னக் குழந்தையாக இருந்தாலும் எனக்கு இதெல்லாம் கொடுத்துவிடுவாய் மோட்சமும் தருவாய்’ என்று தோன்றுகிறது. அதுதான் கடவுளுடைய நிலை என்பது.
கடவுளுக்கு எந்த நிலையும் அல்ல. எந்த வயதும் அல்ல. எந்த ஊரும் அல்ல. நீ எந்த உறவில் வேண்டுமானாலும் கடவுளை வைத்துக் கொள்ளலாம். தனக்குப் பிடித்த அவரவர்களுக்கு ஒரு relationship கடவுளிடத்தில் வரும். அதற்குப் பல காரணங்கள். முன் பிறவியில் எப்படி பூஜை செய்து கொண்டிருந்தாயோ அப்படி உனக்கு விட்ட குறை தொட்ட குறை. உனக்குக் கடவுளிடத்தில் எந்த மாதிரி எண்ணங்கள் இருந்தனவோ அப்படி வரும்.