பாபா பதில்கள் – எப்படி வாழ வேண்டும்?

பூமியில் அவமே கிடக்கின்றோம் – தேவாரம். உருப்படுவதற்கு என்ன வழி? எப்படி வாழ வேண்டும்? அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியிலே சொல்கிறார், கெடுவாய் மனமே கதிகேள், ஏ மனமே! நீ கெட்டுப்போகாமல் உருப்படுவதற்கு வழி சொல்கின்றேன், கேள்.

1) கரவாது இடுவாய். உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதை ஒளித்து வைக்காமல் எல்லாருக்கும் கொடு. உன்னிடம் எட்டு இட்லி இருந்தால், உனக்கு நாலு இட்லி போதும். அதற்கு மேல் சாப்பிட்டால் Digene சாப்பிடவேண்டும். மீதி நாலு இட்லியை எல்லாருக்கும் கொடு, அவ்வளவுதான். ஒளித்துவைக்காதே.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

பெரிய தர்மம் என்ன? நம்மிடம் இருப்பதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்திட்டு சந்தோஷமாக இருப்பது.

2) விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. நீ உன்னை ஒபாமா, பில் கேட்ஸ், லட்சுமி மிட்டல்னு நினைக்கத் தேவையில்லை. நீ கடவுளின் கையில் வெறும் கருவிதான். You are just a custodian of God’s money. உன்னிடம் இருக்கும் எதுவும் உன்னுடையதல்ல. நீ என்ன கொண்டு வந்தாய், நீ இழப்பதற்கு? என்ன கொண்டு போகப் போகிறாய், இந்த உலகத்தை விட்டுப் போகும்போது? – பகவத்கீதை. உனக்கு இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். அவன் உன்னிடம் எப்போது எது கேட்டாலும் நீ திருப்பிக் கொடுத்திட்டு போகணும். அதனால்தான் அதற்குப் பெயர் ‘செல்வோம்’. செல்வம் இல்லை, செல்வோம்தான். அவன் கொடுத்தால் வரும், இல்லைன்னா எடுத்துக்கிட்டு போயிட்டிருப்பான். யாருக்கும் எதுவும் சொந்தமில்லை இந்த உலகத்தில். காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. செத்துப்போன பிறகு யாரும் ஒரு காது உடைந்த ஊசியைக் கூட எடுத்துக் கொண்டு போனதாக சரித்திரம் கிடையாது. ‘நான்தான் செய்கிறேன்’, ‘என்னுடைய பணம்’, என்கிற எண்ணம் உனக்கு கொஞ்சம் கூட வரக்கூடாது.

கோயில்களில் போய்ப் பார். ஒரு Tubelight கோயிலுக்குன்னு வாங்கிக் கொடுத்திருப்பான். அதற்கு ராமசாமி முதலியார் உபயம்னு ஏதாவது பெயர் எழுதி போர்டு போட்டிருப்பான். அந்த மாதிரி அவனுடைய வீட்டின் முன்னால் போர்டு வைக்கிறதுதானே, ‘கடவுள் எனக்குக் கொடுத்தது, கார், பங்களா, இரண்டு பெண்டாட்டி’ன்னு. அதை செய்யமாட்டான். இவன் ஒரு ரூ150 கொடுத்தால் கோயிலில் எழுதி வைச்சிடறான். அவர் என்னவெல்லாம் கொடுத்தாருன்னு எழுதி வைக்கிறதுதானே வீட்டு வாசலில்! யாராவது அந்த மாதிரி செய்யறாங்களா?

3) எப்போதும் கடவுளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். வடிவேல் இருதாள் நினைவாய் நினைவாய். முருகனுடைய தண்டை அணிந்த அந்த இரண்டு பாதங்களை எப்பவும் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வளவுதான் வாழ்க்கையினுடைய ஃபார்முலா. இதைத் தவிர இந்த வாழ்க்கையில் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாரும் ஒரு நாள் இந்த பூமியைவிட்டுச் செல்வார்கள்.

About The Author

2 Comments

  1. Vijayakumar.R

    ரொம்ப நல்ல இருக்கு,அந்த கடவுல்தன் காப்ப்பாதனும்.

    விஜயகுமர்ர்.ரா

  2. thirumalai

    வரும்போதும் ஒனும் கொண்டுவரல … போகும் போதும் ஒனும் கொடுபோகபோறது இல்ல ….
    இருக்குற வரைக்கும் மற்ற உயரினகளுக்கு கெடுதல் பண்ணாம இருந்தாலே பெரிய விஷயம் இப்ப இருக்குற மனிதர்கள் ….

    பாபா தான் எலோரையும் கபாதணும்

Comments are closed.