இந்தச் சரீரம் என்பது ஒரு நாடக கதா பாத்திரம் மாதிரி! எல்லா கதாபாத்திரங்களும் கூட இருக்கிறார்கள். சினிமாவில் ஒரு ஐம்பது நடிகர் நடிகைகள் பார்க்கிறீர்கள். சினிமாவில் வருகிற அவர்களுடைய கதாபாத்திரம் வேறு. உண்மையில் அவர்களுடைய வாழ்க்கை வேறு.
அதே மாதிரி நமக்குள் ஒரு நிஜம் இருக்கிறது. ஒரு நிழல் இருக்கிறது. இந்த வாழ்க்கை நிழல், நாம் நிஜமானவர்கள். உங்கள் குழந்தைகள் எல்லாம் வெளியூரில் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். வெளியூரில் படிக்கிற போது ஹாஸ்டலில் இருப்பார்கள். ஹாஸ்டலில் என்னதான் இடம், துணி, சாப்பாடு கொடுத்து, எல்லா வசதிகளோடு வைத்திருந்தாலும், அவர்களுக்கு ‘எப்பொழுது லீவ் வரும்? போய் அப்பா, அம்மாவை பார்க்கலாம்’ என்றுதான் இருக்கும். கோயம்புத்தூரில் ரயில் ஏறி, சென்னை வந்து, பெரம்பூர் தாண்டி பேஸின் பிரிட்ஜ் அருகே வந்தவுடனே அவர்களுக்கு மிகவும் சந்தோஷமாக நம்முடைய ஊருக்குப் போகிறோம் என்கிற மாதிரி இருக்கும். அவர்கள் வீடு எங்கேயோ திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் அல்லது தி.நகரில் இருக்கும். அங்கே இறங்கி வீட்டிற்கு வந்து அந்த bag பெட்டி எல்லாவற்றையும் போட்டுவிட்டு, டிரஸ் மாற்றிக் கொண்டு, அம்மா….! என்று உட்காருவார்கள் பார்! அது தான் kick! ஹாஸ்டலில் எல்லா வசதியும்தான் இருந்தது. இருந்தாலும் சொந்த வீட்டில் வந்து இருக்கிற ஆனந்தம் ஹாஸ்டல் வாழ்க்கையில் இல்லை.
அது மாதிரி இந்த உலகம் என்பது ஹாஸ்டல் வாழ்க்கை. உங்களுடைய சொந்த இடம் என்பது இறைவனுடைய திருவடி, கைலாசம், வைகுண்டம் எல்லாம். அதுதான் நிஜமான ஆனந்தம். அந்த ஆனந்தத்திற்காகத்தான் இந்த ஆத்மாக்கள் இந்த மனித சரீரத்திற்குள் வந்து சில அனுபவங்களை நுகர்கின்றன. அந்த ஈசன் எந்தை இணையடி நிழலில் ஒதுங்குவது தான் இந்த சரீரத்தைப் பெற்றதின் பலனே. ‘செல்லாஅ நின்ற இந்த தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் எடுத்து எடுத்து இளைத்தேன்’ எதற்கு என்றால் இன்னும் பிறவா நிலையில் இறைவனுடைய திருவடியில் ஒன்றுவதற்காக!”