இசைப்பட வாழ்தல் என்றால் என்ன? ஏதோ பாட்டு கேட்டுக் கொண்டு இருப்பதா? அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. ஈதல் இசை பட வாழ்தல்-இசை பட வாழ்தல் என்றால் புகழோடு வாழ்வது. இந்த உலகத்தில் பிறந்திருக்கிறோம். அதிலே எதையாவது சாதிக்கணும். இல்லைன்னா, சாப்பிட்டு, ஆபீஸ் போயிட்டு, குடும்பம் நடத்தி விட்டு, ஆடு, மாடு மாதிரி குழந்தை பெற்றுவிட்டு ஒரு நாளைக்கு இறப்பதில் என்ன இருக்கு?
"தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து கெடும் கூற்றுக்கு பின் இரையென மாயும் வேடிக்கை மனிதன் என்று என்னை நினைத்தாயா?" – பாரதியார். தேடிச்சோறு நிதம் தின்று – தினமும் சாப்பாடு சாப்பிடுவது. பிறர் வாட பல செயல்கள் செய்வது – மற்றவங்க கஷ்டத்திற்கு நாம் காரணமாக இருக்கிறோம். துன்பம் மிக உழன்று – இவனாவது சந்தோஷமாக இருக்கிறானா? இவனும் துக்கத்தில் தான் இருக்கிறான். சின்னஞ்சிறு கதைகள் பேசி- அவங்க இப்படி, இவங்க அப்படி என்று பேசுவது – நமக்கும் அதற்கும் சம்மந்தமே இருக்காது. கொடுங் கூற்றுக்கு இரையென பின் மாயும்- ஒரு நாள் எமன் வந்து கூப்பிட்டுக்கொண்டு போகப் போகிறான். வேடிக்கை மனிதன் என்று என்னை நினைத்தாயா?
உண்டதே உண்டு உடுத்ததையே அடுத்தடுத்து உடுத்து உரைத்ததையே அடுத்தடுத்து உரைத்து கழிந்ததே கடவுள் நாள் எல்லாம்-சாப்பிட்டதையே சாப்பிட்டு, பேசினதையே திருப்பி திருப்பியும் பேசி, கடவுளை கும்பிடுவதற்காக அவன் கொடுத்த நாட்கள் எல்லாம் வீணாகியதே. அதை வள்ளலார் சொல்கின்ற போது – உருண்டோடுகின்றவன் கதிரவன், அவன் பின் உருண்டோடுகின்றன ஒவ்வொரு நாளாய் என்று சொன்னார். சூரியன் தன்னுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் போய்க் கொண்டிருக்கிறான். அவன் பின்னாலேயே ஏழு நாட்களும் ஒவ்வொன்றாய் ஓடிக் கொண்டிருக் கிறதாம். நாம் எத்தனை நாள் இருப்போம் என்று தெரியாது. உலகத்தீரே! உலகத்தீரே! மனிதனுக்கு வயது நூறு அல்ல. மனிதனுக்கு 100 வயது என்பதே ரொம்ப பெரிய விஷயம்.
அப்போ, அரிதாகிய மானிடப் பிறவியை வைத்துக் கொண்டு நாம் எதையாவது சாதிக்க வேண்டும். அந்த சாதனைதான் இசை. இசை என்பது என்ன? நாம் இறந்த பின்னாலே கூட நம்மைப் பற்றி 4 பேர் சொல்ல வேண்டும். இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். அந்த மாதிரி உங்களாலேயும் உங்களுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும். ஏன் உங்களாலே அந்த மாதிரி மாற்றிக் கொள்ள முடியவில்லை என்றால் இன்னும் நீங்கள் அந்த மாதிரி ஆக வேண்டும் என்று நினைக்கவே இல்லையே. அவனவன் ‘வேலை கிடைக்கலை’ என்கிறான். ‘அப்ளிகேஷன் போட்டியா?’ என்று கேட்டால் ‘இனிமேல்தான் போட வேண்டும்’ என்று சொல்கிறான். போடாத அப்ளிகேஷனுக்கு வேலை கிடைக்குமா?
இருட்டிலிருக்கும் வரை ரூமிலிருக்கும் பொருட்கள் கண்களுக்கு தெரியாது. அதற்கு வெளிச்சம் தேவைப்படுது. எனவே நீ இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வா. அதுதான் நம்முடைய வேதங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கிற பாடம். தமசோ மா ஜோதிர்கமய- இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வாருங்கள். அசதோமா சத் கமய அசத்தியத்திலிருந்து சத்தியத்தை நோக்கி பயணப்படுங்கள். மக்கள் சாதாரணமாகவே சத்தியம் வைக்கிற போது மனசுக்குள்ளே ‘அ’ என்று சேர்த்துக் கொண்டுதான் சத்தியம் செய்வார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்கள்தான் நம் நாட்டிலே அதிகம்.
அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு நாம் வரவேண்டும். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு நாம் வர வேண்டும். அது வந்தால் என்ன ஆகும்? மரணத்திலிருந்து மரணம் இல்லாத பெருவாழ்வுக்கு நாம் வந்து விடுவோம். ம்ருத்யோர் மா அம்ருதங்கமய – மரணத்திலிருந்து மரணம் இல்லாத நிலையை நம்மால் அடைய முடியும்.