பாபா பதில்கள் – ஆத்மா

ஆத்மா

ஆத்மா என்பது இறைவனுக்கு இன்னொரு பெயர். அது இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கிறது. மனிதன்கிட்ட மாத்திரம் இல்லை. ஈ, எறும்பு முதலான எல்லா ஜீவராசிகளிடமும் ஆத்மா இருக்கிறது. ஆத்மா இல்லாத வஸ்து உலகத்தில் இல்லை. இப்போ நீலாங்கரைக்கு வர்றீங்க. சைக்கிளில் வரலாம், நடந்து வரலாம், காரில் வரலாம். ஏதோவொன்றில் வர்றீங்க. நீங்கள் வந்த vehicle இருக்கிறது இல்யை அது வாகனம். ஆனால் வந்தது நீங்கள்தான். அந்த மாதிரி இந்த ஆத்மா மனுஷன் உடம்பு, குரங்கு உடம்பு, பல்லி உடம்பு, பாம்பு உடம்பு இப்படி எத்தனையோ உடம்புகளை பல பிறவிகளில் எடுத்திருக்கிறது. "செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் எடுத்தெடுத்து நான் இளைத்தேன்" என்று சொல்லக்கூடிய நிலையில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கு. வண்டி மாறிண்டே இருக்கு. "Single cell–லிருந்து மரமாய் இருந்து, பல் விருட்சமாய், வல் அரக்கராய், தேவராய், முனிவராய் வந்து கொண்டே இருக்கு". அது வாகனம்தான். ஆனால் பயணப்படுகிற வஸ்து ஆத்மா.

இந்த ஆத்மா என்பது ஒரு ஒளி. அது ஆணும் அல்ல; பெண்ணும் அல்ல; அலியுமல்ல; இஸ்லாமியனுமல்ல; கிறிஸ்தவனுமல்ல; இந்துவுமல்ல; ஏழையுமல்ல; பணக்காரனுமல்ல; ஆரோக்கியமானவனுமல்ல; நோயாளியும் அல்ல. அது எதுவுமல்ல; யாருமல்ல. எந்தக் குணமும் அற்ற வஸ்து ஆத்மா என்பது. எப்படி சூரியனுடைய கிரணங்கள் சாக்கடையில் பிரதிபலிக்கிறபோது அழுக்காக தெரியறது. சலசலத்து ஓடும் ஆற்றில் பார்க்கிற போது சுத்தமாக இருக்கிற மாதிரி தெரிகிறது. ஆனால் அந்த ஒளிக்கற்றை பழுதுபட்டது அல்ல. பிரதிபலிக்கிறபோது அது அழுக்காகவோ, அழகாகவோ தெரிகிறது. அந்த மாதிரி ஆத்மா என்பது ரொம்ப அழகான வஸ்து. இந்த உலகத்தில் பிறப்பு வளர்ப்பில் அது நல்லதாகவும், கெட்டதாகவும் தெரிகிறது. அவ்வளவுதான். ஆனால் அது அதனுடைய அழகை என்றைக்கும் இழப்பது இல்லை.

எவனொருவன் இந்த விஷயத்தை புரிந்து கொண்டு விடுகிறானோ அவன் தன்னிலும் மற்றவர்களிடமும் எந்த பேதமும் காண்பதில்லை. அவன் எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும் என்று தெரியும். பசுமாட்டில் பால் கறக்கிறோம். அதை ஒரு டம்ளரில் ஊற்றலாம், ஒரு பக்கெட்டில் ஊற்றலாம், பாட்டிலில் ஊற்றலாம். Container தான் வேற வேறயே தவிர உள்ளே இருக்கிற பால் ஒன்று தானே. அதனுடைய ருசி ஒன்று தானே. அந்த மாதிரி இந்த உலகத்தில் எல்லார்கிட்டேயும் இருக்கிற contents இருக்கே அது எல்லாம் ஒன்றுதான். பாத்திரம் தான் வேற வேற மாதிரி தெரிகிறது. காதில் சில பேர் கம்மல் போட்டுண்டு இருக்காங்க. சில பேர் ஒட்டியாணம், சில பேர் செயின் போட்டுண்டு இருக்காங்க. ஆனால் இது எல்லாவற்றிற்கும் மூலாதாரமான வஸ்து தங்கம் தானே. So, வளையலை கம்மலாக்கலாம், கம்மலை ஒட்டியாணம் ஆக்கலாம். என்ன வேணா செய்யலாம். உருவம் மாறுகிறதே தவிர அந்த gold மாறுவது கிடையாது. இந்த உலகத்தில் ஒரு சட்டி இருக்கு. அந்தச் சட்டியை இது மேல கவிழ்த்து வைக்கறீங்க. சட்டிக்குள்ளே காற்று இருக்கு. அந்தச் சட்டியை உடைச்சதும் சட்டிக்குள்ளே இருந்த காற்று வெளியில் இருக்கிற காற்றோட கலந்து போகிறது. So, இப்ப இந்த உடம்பு சட்டி என்று வைத்துக் கொள்ளலாம். இதுக்குள்ளே காற்று ஓடிண்டு இருக்கு. இதை சுடுகாட்டில் போட்டு எரிச்சுடறோம். இல்லை புதைத்து விடுகிறோம். அப்ப நமக்குள்ளே இருந்த வஸ்து வெளியில் போய் கலந்து போறது. நாம் இப்படித்தான் கலக்கிறோம், திருப்பி வருகிறோம். "புனரபி ஜனனம்; புனரபி மரணம்". உடல்கள் மாறுகின்றன. ஒளி மாறுவதில்லை. இதுதான் ஆத்மாவைப் பற்றிய சிறு விளக்கம். ஒரு ஆபீஸுக்குப் போறே. அங்கே போய் ஒரு பியூனை கேக்கறே, ‘நீங்க யாருங்க என்று? நான் குப்புசாமி என்பான். அந்தக் கம்பெனியில் இருக்கிற மேனேஜரை போய் கேட்பாய். நீங்க யாருங்க என்று? நான் ராமசாமி. முதலாளியை போய் கேள். அவர் நான் அலெக்ஸாண்டர்’ என்று சொல்லுவார். மூணு பேருமே நான், நான், நான் தானே சொன்னாங்க. ராமசாமி, முனுசாமி, கோவிந்தசாமி வேற வேற மாதிரி தெரிஞ்சுதே தவிர நீ யார் என்றதும் அவன் என்ன சொன்னான், நான். அந்த நான் என்ற வஸ்துதான் ஆத்மா.

அதனால்தான் அந்த நானை அறிந்து கொள் என்று சொன்னது. சரி கார்த்தால 7 மணிக்கு நான் உன்னை கேட்கிறேன். நீ யார் என்று? நீ சொல்கிறாய் நான் கிளியாம்பாள். 5 மணிக்கு கேட்கிறேன். நான் கிளியாம்பா என்கிறாய். அப்போ அந்த கிளியாம்பா கார்த்தால 7 மணிக்கு இருந்தாள். சாயந்திரம் 5 மணிக்கும் இருப்பாள். Madras-ல் நங்கநல்லூரில் கேட்டேன், உன்னை அமெரிக்காவில் வெச்சு கேட்கிறேன். நீ, ‘நான் கிளியாம்பா’ என்கிறாய். அப்போ அந்த நான் என்பது இடத்தால் மாறவில்லை. நேரத்தால் மாறவில்லை. பெயரால் மாறவில்லை. எது எதனாலும் மாறாதோ அதன் பெயர் ஆத்மா. "எனது யானும் வேறாகி யாதும் எவரும் நானாகும் நிலை" எதுவோ அது ஆத்மாவை அறிந்துக் கொள்கிற பக்குவம். "எனது, யான் என்பதெல்லாம் பொய். யாதும் எவரும் நான்". இந்த உலகத்தில் இருக்கிற எல்லாமே நான்தான் என்று தெரிந்து கொள்கிற நிலை இருக்கு பார், அதுதான் ஆத்மாவை புரிந்துக் கொண்ட ஞானியோட நிலை. அதனால் திருவள்ளுவர் என்ன சொல்கிறார், "யான் எனது எனும் செருக்கறுப்பானை வானோர் உலகம் கைகூப்பித் தொழும்". யான், எனது என்று சொல்லக்கூடிய செருக்கு, ஒரு bodily ego அதை யார் விடுகிறானோ அவனை வானவர் உலகத்தில் இருக்கிறவர்கள் வழிபடுவார்கள் என்று சொல்கிறார்.

அதனால் இந்தக் கேள்விக் கான விடையை சுருக்கமாக சொல்லப் போனால் ஆத்மா என்பது பேரொளி. அது பார்ப்பதற்கு பேதப்பட்டிருக்கிறது. அந்த பேதங்கள் ரூபங்களினால் வருகிறது. அது உடல்களால் வரும் பேதமே தவிர, உள்ளே இருக்கிற ஒளியில் எந்த பேதமும் இல்லை. அது ஆணல்ல; பெண்ணல்ல; அலியல்ல; மதமல்ல; எதுமல்ல; யாருமல்ல.

About The Author