இந்த வாழ்க்கையை விட பொய்யான விஷயம் ஒன்றுமே இல்லை. நாம் எல்லாவற்றையும் நம்பிக் கொண்டு இதற்காக இருக்கிற நிம்மதியையும் இறைவன் கொடுத்த ஆனந்தத்தையும் இழந்து கொண்டு இருக்கிறோம். இதற்குப் பெயர் மாயாவாதம். இந்த உலகம் நிலையற்றது என்று தெரிந்து கொண்டால் தான் நீ நிலையான வஸ்து எது என்ற கேள்வியில் இறங்குவாய். எது அநித்யம் என்று தெரிந்து கொண்டால் நித்யவஸ்துவைத் தேடுவாய். எது அசத்தியம் என்று தெரிந்து கொண்டால் சத்யவஸ்துவைத் தேடுவாய்.
அப்பர்சுவாமிகள் அழகாக ஒரு கருத்தைச் சொன்னார் விலாவற சிரித்தேன். வயிறு பக்கத்திலே இரண்டு பக்கமும் எலும்புகள் எல்லாம் பிடித்துக் கொள்கிற அளவிற்கு அப்படி குலுங்கிக் குலுங்கிக் சிரித்தேன்யா என்று சொல்கிறார். ஆழ்வாரும் அப்படியே சொல்கிறார். விலாவற சிரித்தேன் என்கிறார். விலா எலும்பு எல்லாம் நொறுங்குகிற மாதிரி சிரித்தேன் என்கிறார். ஏன் இரண்டு பேருமே ஒரே கருத்தைச் சொன்னார்கள் என்றால் இரண்டு பேருடைய அனுபவமும் ஒரே மாதிரி இருக்கிறது. அப்போது என்ன சொல்கிறார்கள்? கடவுளைத் தேடி நான் எங்கெங்கோ அலைந்தேன். அதற்காக என்னென்னவோ பிரயத்தனங்கள்,பிரார்த்தனைகள் எல்லாம் செய்தேன். கடைசியிலே நான் கொஞ்சம் தெளிவடைந்த நிலையில் நான் எந்தக் கடவுளைத் தேடி அலைந்து கொண்டிருந்தேனோ அந்தக் கடவுள் எனக்குள்ளேயே இருந்தான் என்ற விஷயம் எனக்குத் தெரிந்தவுடனே எனக்கு குலுங்கக் குலுங்கக் சிரிப்பு வந்துவிட்டது என்றாராம்.
இரண்டு பேருடைய அனுபவமும் ஒரே மாதிரியான அனுபவம். ரொம்ப விசேஷமான அனுபவம்.
கள்ளேன் கள்ளத் தொண்டாய்
காலத்தை கழித்துப் போக்கி
தெள்ளியேன் ஆகி நின்று
தேடினேன் நாடிக் கண்டேன்.
உள்குவார் உள்ளிற்கெல்லாம்
உடனிருந்து அறிதியென்று
வெல்கினேன் வெல்கி நானும்
விலா வறச் சிரித்திட்டேனே!
விலாவற சிரித்தேன் எதற்காக? நான் எதையெல்லாம் தேடி அலைந்தேனோ அதையெல்லாம் கொடுக்கிற வஸ்து எனக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்கிற விஷயம் கடைசியிலே தானே எனக்கு தெரிந்தது. இல்லைன்னா ஊர் பூரா அலைந்திட்டு இருந்தேனே என்கிறார். இதே கருத்தை ஆழ்வார் சொல்கிறார்.
உள்ளத்தே உறையும் மாலை
உள்ளுவார் உணர்வொன்றில் நில்லார்
கள்ளத்தே நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டே
உள்ளுவார் உள்ளிற்கு எல்லாம் உடனிருந்து அரிது என்று
வெல்கிப் போய் அன்றுள்ளே நான் விலாவற சிரித்திட்டேனே
-அவனை எங்கோ வெளியே தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் உள்ளத்திலே இருக்கிறான். உள்ளுவார் உள்ளிற்கு எல்லாம் உடனிருந்து அரிது- நான் உடனிருந்து எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லக் கூடிய நிலையில் தெய்வம் இருக்கிறது என்பதை நான் அறிந்தவுடனே நான் விலாவறச் சிரித்திட்டேனே என்று சொன்னார்.