ஒருநாள், முல்லாவின் எதிர்வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து,"என் வீட்டில் ஒரு விழா. உறவினர்கள் நிறைய வர இருக்கிறார்கள். புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை. உங்களிடம் இருக்கும் பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடுத்தால், விழா முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன்" என்று கேட்டார்.
முல்லாவும், "அதற்கென்ன, தாராளமாக எடுத்துச் செல்லுங்கள்" என்று அவரிடம் இரண்டு பெரிய கனமான பாத்திரங்களை எடுத்து வந்து கொடுத்தார்.
எதிர்வீட்டுக்காரர் வேடிக்கையும், நையாண்டியும் கொண்ட மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கச் செய்வது அவரது வழக்கம். முல்லாவிடம் கடன் வாங்கிய பாத்திரத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது அவரை ஏதாவது ஒரு விதத்தில் வேடிக்கை செய்து பார்க்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.
விழா முடிந்ததும் அவர் பாத்திரங்களைத் திருப்பிக் கொடுக்க வந்தபோது, முல்லா கொடுத்த இரண்டு பாத்திரங்களுடன் ஒரு செம்பையும் கொண்டு வந்தார். முல்லா, பாத்திரங்களுடன் ஒரு சொம்பும் கூடுதலாக இருப்பதைக் கண்டு,"நான் இந்தச் செம்பை உங்களுக்குக் கொடுக்கவில்லையே?" என்று கேட்டார்.
அதற்கு எதிர் வீட்டுக்காரர், "முல்லா அவர்களே! உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்தபோது இந்தச் செம்பைக் குட்டி போட்டன. அதனால் குட்டியையும் உடனே கொண்டு வந்தேன்" என்று பதிலளித்தார்.
முல்லாவுக்கு அவர் தம்மை வேடிக்கை செய்வது புரிந்தது. சமயசந்தர்ப்பம் வாய்க்கும்போது பதிலுக்கு அவரை நையாண்டி செய்யக் குறும்புடன் தீர்மானித்துக் கொண்டார்.
"ஆமாம் ஆமாம்! நான்தான், பாத்திரங்களைக் கொடுக்கும்போது அவை கர்ப்பமாக இருக்கின்றன என்ற உண்மையை உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன்" என்று கூறியவாறு அவர் கொடுத்த பாத்திரங்களை வாங்கிக் கொண்டார் முல்லா.
சிறிது காலம் சென்றது. ஒருநாள், முல்லா எதிர் வீட்டுக்காரரிடம் சென்று, "என் வீட்டில் ஒரு விசேஷம். என்னிடம் தேவையான பெரிய பாத்திரங்கள் எதுவும் இல்லை. தயவு செய்து பெரிய பாத்திரங்கள் இரண்டு கொடுத்தால் உதவியாக இருக்கும்" என்று கேட்டுக் கொண்டார். அவரும் மறுப்பு எதுவும் சொல்லாமல் இரண்டு பெரிய பாத்திரங்களை எடுத்துக் கொடுத்தார்.முல்லா அவற்றைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து முல்லா, ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு எதிர் வீட்டுக்காரரிடம் சென்றார்."உங்களிடம் வாங்கிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கொடுத்தார்.
உடனே எதிர் வீட்டுக்காரர், "நான் இரண்டு பாத்திரங்கள் அல்லவா கொடுத்தேன்? ஒன்றுதானே திருப்பிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? " என்று கேட்டார்.
முல்லா, முகத்தில் சோகத்தை வருவித்துக் கொண்டு, "ஒரு வருத்தமான விஷயத்தை எப்படிச் சொல்வதென யோசிக்கிறேன். தாங்கள் எனக்கு அளித்த பாத்திரங்களில் பெண் பாத்திரம் கர்ப்பமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்கு வந்த இரவே அது குட்டி போட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது போட்ட குட்டியும் செத்து விட்டது, தாயும் இறந்து விட்டது. அவை இரண்டையும் தகனம் செய்து விட்டேன்" என்றார்.
முல்லாவின் வேடிக்கையைப் புரிந்து கொண்ட எதிர் வீட்டுக்காரர், "அட! அன்று உங்களை வேடிக்கை செய்ததற்குப் பழிக்குப் பழியா? இனி அந்த மாதிரி செய்ய மாட்டேன். தயவு செய்து என் பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
முல்லாவும் சிரித்தபடி அவருடைய பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.